வாழ்வும் சதுரங்கமும் பகுதி 2 -மந்திரி

வாழ்வும் சதுரங்கமும் பகுதி -2
மந்திரி

மந்திரி என்றாலே
ராஜதந்திரம் தானே
அப்படி என்ன ராஜதந்திரம்
என சாதாரணமாக
கருத முடியாது

நிஜ வாழ்வில்
நம்மை சுற்றி நடக்கும்
பலவற்றுடன் நம்மை இணைக்கிறது

இரண்டு மந்திரிகள்
இருவரும் ஒரே நிறத்தார்கள்
ஒரே குலத்தார்கள்
வடிவம் ஒன்றுதான்
குணம் ஒன்றுதான்
ஆனால் ஏந்திய
கொள்கை வெவ்வேறு
பாதை வேறு

இருவரும் ஒரே கோட்டில்
பயணிப்பதில்லை
ஒருவர் மற்றொருவரை
ஒருபோதும் காத்ததும் இல்லை
ஆனாலும் ஏந்திய கொள்கை ஒன்று
அவன் தலை துண்டாகும் போது
ஒன்று வேடிக்கை பார்ப்பான்
இல்லை தன்னை காத்துக்கொள்ள
வேறு இடம் செல்வான்

பிறரின் கண்ணீரில் சுகம் காணும்
மனிதனைப்போல
ஆபத்தில் உதவாத உறவைப்போலதான்
இந்த மந்திரிகள்
ஒரே சாதியாக இருந்தாலும்
ஒரே மதமாக இருந்தாலும்
ஒருவருக்கு ஒருவர் உதவுவதில்லை

சிப்பாய்களிடம் இருக்கும்
ஒற்றுமை மந்திரிகளிடம்
இருப்பதில்லை மந்திரி
ஒருவன் மட்டுமே தன்னை
காத்துக்கொள்ள சக
மந்திரியின் உயிரை எடுப்பான்

தன் கௌரவத்திற்காக தன் பிள்ளைகளை
கொள்பவர்களை போல
தன் சுயநலத்திற்காக
பிறரின் வாழ்வை நாசம் செய்யும்
உறவைப்போல தான்
இந்த மந்திரிகள்
இது ராஜ தந்திரமா
இல்லை அறிவின்மையா

மந்திரிகளிடம் பிடித்ததாக
ஒன்று கூட இல்லையா
என்று சொல்லிவிட இயலாது

எந்த நிலையிலும்
தன் கொள்கையில்
மாறாமல் பயணிப்பது கடினம்
மடிந்தாலும் தன் கொள்கையிலேயே
மடிவதும் கடினம்

மடிவதும் வீரம் என்றே
கருதுகிறார்கள்
எந்த மந்திரியும்
சிப்பாயை காக்க முயற்சிப்பதில்லை
ஆனால் மந்திரி தன்னை
காக்க முதலில் நாடுவது
சிப்பாயை தான்

வாழ்வும் அதுதான்
எந்த சூழலிலும் உன்னால்
ஒரு சாதிக்குள்ளோ
ஒரு மதத்திற்குள்ளோ
வாழ்ந்துவிட முடியாது
ஏதேனும் ஒரு விதத்தில்
மற்றொருவரின் உதவியை
நாடித்தான் ஆக வேண்டும்

கௌரவம் என்ற பெயரில்
நீ மந்திரியாய்
வாழ முயன்றால்
உலகின் முதல்
முட்டாள் நீயே

எழுத்து சே.இனியன்

எழுதியவர் : சே.இனியன் (26-Aug-19, 11:14 am)
சேர்த்தது : இனியன்
பார்வை : 116

மேலே