கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 7
நிசப்தமான அமைதியில், மழையின் சத்தம் மட்டும். மஞ்சள் விளக்குகள் ஒவ்வொன்றாய் அணைந்து கொண்டே வந்தன. அட்லஸ், சுஜியின் முகத்தை அவனின் இரு கைகளால் இறுக பற்றினான். அவளின் கண்களை மட்டுமே பார்த்தான். உற்று பார்த்தான். காந்தமாய். அவன் கண்களும் கவி பேசியது.
அக்கீர்:
உலக போதை பொருட்களின்
அருங்காட்சியம் உன் கண்கள்
சுஜியின் உடல் சிலிர்த்தது. ரோமங்கள் தொட்டா சினிங்கியானது. சிலாகித்தாள். அட்லஸின் வாசம். அவனுக்கான தனி வாசம். மிக அருகில். அவள் அருகில். நுகராமலே உணர்ந்தாள். அவன் அணிந்திருந்த அந்த கரு நீல முழு நீளக் கைச்சட்டை. அதை, அவன் முழங்கை வரை மடக்கி விட்டிருக்கும் விதம்.பொக்ஸ் கட் வெட்டி, புருவங்களில் ஒட்டி வலது பக்கம் விழுந்திருக்கும் அவனது கேசம். கையில் கட்டியிருக்கும், அந்த ரோலேக்ஸ் கடிகாரத்தின் வினாடி துடிப்பு. இல்லை இல்லை. அவனது இதயத்தின் நாடித் துடிப்பு.
சுஜியின் கலைந்திருந்த கூந்தல். கண்ணில் இட்டிருந்த கண்மை. வாள் போன்ற கூரிய புருவங்கள், அதில் தீட்டப்பட்டிருந்த அந்த லைட்டான பழுப்பு வண்ணம். அவளின் பெரிய கண்கள். மூக்கின் பளிச்சென்ற மூக்குத்தி. ஊதா மற்றும் சிவப்பு கலந்த மிருன் வண்ண உதட்டு சாயம்.
முற்றாக வலது பக்கம் திரும்பி அமர்ந்திருந்த அவளது உடல்வாகு. கால் முட்டிகளில் பதித்திருந்த அவளது கைவிரல்கள். அதில் செய்யப்பட்டிருந்த வேலைப்பாடுகள். நகங்களில் பூசியிருந்த தெர்குவாய்ஸ் நீல வண்ணம்.
அட்லஸின் உதடு சுஜியின் உதட்டை நெருங்க, அவளின் கண்கள் தானாய் சொக்கின.
அக்கீர்:
உன்னை அப்படியே
பெயர்த்தெடுத்து
உரித்தெடுத்து
உயிர்த்தெழுந்து
என்னில் எழுத்தாய் எண்ணமாய்
வந்து புதைந்து கொள்கிறாய்
மணற்துகளாய் நெஞ்சில் ஆக்கிரமிக்கிறாய்
மூளைக்குள் இறங்கி ஒவ்வொரு செல்லிலும்
ரத்த அணுக்களாய் வியாபிக்கிறாய்..
இப்போது சொல்.
உன்னை தாண்டி
உன்னை தவிர்த்து
உன்னையன்றி ஓரேழுத்து என்னால்
எழுதிட முடியுமா..
எழுதி விட்டு பார்க்கையிலும்
எழுத்து தெரியவில்லை
மாறாக உன்முகமே தெரியுதடி
என் கண்மணி.....
சுஜியின் கண்கள் இப்போது முழுதாய் மூடியிருந்தன. அட்லஸின் இறுக்கம் தளர்ந்து மென்மையானது. சுஜியின் கைகள் அட்லஸின் தோள் பட்டையை அழுத்தியது. தலை சாய்த்தாள் அட்லசுக்கு வசதியாய்.
அட்லஸ் சுஜியின் உதட்டோடு, அவன் உதட்டை குவிக்க முனைந்தபோது , சுஜி அவனை தள்ளி விட்டு வெட்கத்தோடு விலக முற்பட்டாள். விலகியவளின் கரங்களை பற்றியவன்,
அக்கீர்:
சீக்கிரம் பிடித்துக் கொள்
என் விரல்களை
இல்லையேல்
அடுத்த நொடியில்
அவை பற்றிக் கொள்ளக் கூடும்
உன் இதழ்களை..
அக்கீரின் கவி சுஜியை வெட்கப்பட வைத்தன. அவன் தொடர்ந்தான். அவள் கரங்களின் விரல்களை பிடித்தபடி, அவளை பார்த்தப்படி
அக்கீர்:
இனி பெருங்கோபம் கொள்ளாதே
இழப்பதற்கு ஏதுமில்லை தேவி..
முத்தங்களை தவிர
அட்லஸின் கரங்கள் சுஜியின் முகத்திலிருந்து அவளது காது மடல்களில் படர்ந்து கழுத்தின் பின் புறத்தை பிடித்தது.
சுஜிக்கு அதிகமானது சிலிர்ப்பு. தள்ளாடினாள் மோகத்தில். சுஜியின் கரங்கள் அட்லஸின் கழுத்தை பற்றிக் கொண்டன. என்ன செய்கிறோம், எங்கு இருக்கிறோம் என்பதையும் மறந்திருந்தனர். கண்களை மூடிக் கொண்ட சுஜி சொன்னாள்,
சுஜி:
என்னை உருவாக்கிய அல் - காலிக் நீ
எனை அழகாக்கிய அல் - மூசாவீர் நீ
என்னில் மெய்யான அல் - அஹ்க் நீ
காதலை அள்ளி தரும் அல் - வஹாப் நீ
மேன்மையான மென்மைகளில் அல் - லதீப் நீ
எல்லையில்லா ஏகாந்தம் தரும் அல் - வாசி நீ
பக்தியாய் நினைக்க வைக்கும் அல் - ஹமீத் நீ
எனை ஆளும் ஆணழகன் ஷெரீப் நீ
அழியா எந்தன் அக்கீர் நீ
வாழ்வாய் வரும் என் அட்லஸ் நீ
உச்சரித்தால் உடைந்திடக் கூடிய பெரும் மெளனம் நிலவியது , இதழ்களுக்கிடையே. ஆம், இருவரி இடைவெளிதான். சொல்லி முடித்தவளின் இதழ் அட்லஸின் உதட்டோடு குவிந்தது. அவர்களின் முதல் முத்தம்; பரிமாற்றம் ஆனது. ஒரு நிறைவான இதழ் முத்தம் கலவிக்கும் மேலானது என்றுரைத்தது அவர்களின் முத்தம்.
எச்சில் பற்றிய கவலை துளியுமின்றி ஒருவரை ஒருவர் முத்தத்தால் குளுப்பாட்டிக் கொண்டனர். இருவரும் கண்களை மூடிய வண்ணம் நெற்றியோடு நெற்றி ஒட்டி, இருவரின் கரங்களும் ஒருவரின் ஒருவர் முகத்தை பற்றியிருந்தன. உஷ்ணமான தேகம் இன்னும் முத்தத்திலிருந்து இருவரையும் மீளாமல் தடுத்தது.
அட்லஸ்:
என் முதல் பிரியமும் நீ
என் கடைசி பிடிமானமும் நீ
நான் காண்பதெல்லாம் நீயடி
காண்பதெல்லாம் காதலடீ
காணும் காட்சியெல்லாம் நீயே நீயே
நீ மட்டும் தானே டீ..
உன்னை தவிர்த்து
உன்னை தாண்டி
ஓர் அணுவும் அசையாது இங்கு
காத்திருந்தேன்
இந்த ஓர் நாளுக்காக....
இந்த ஒரு முத்தத்திற்காக..
அட்லஸின் கவி சொல்லும் குரல் சுஜியின் காதில் கேட்டு அவள் மனதில் படர அவள் கைகளைக் கொண்டு அவன் கைகளை கெட்டியாக பிடித்தாள். அவள் நெற்றில் லேசாக முட்டினான் அட்லஸ்.
அக்கீர் :
அழகான ஒரு இடத்தில் புதைந்து விட ஆசை
உன் கண்களை கொஞ்சம் திற
கண்களை திறக்காமலே இருந்தால் சுஜி. கனவு கண்டு தெளிந்தது போல் ஓர் உணர்வு அவளுக்கு. வெட்கம் வந்தது சுஜிக்கு, அட்லஸின் முகத்தை காண. தலை குனிந்தாள் வெட்கம் கொண்ட பேதை. நாணத்தில் சிவந்து தலை கவிழ்த்திருந்தவளின் கன்னத்தில் தானும் குனிந்து வைத்தான் இன்னொரு முத்தம். அட்லஸின் முத்தம் சுஜியை மீண்டும் சொக்க வைத்தன.
அட்லஸ்: பாப்பா....வா.. நான் உன்ன வீட்டுல விடறேன். கார் நாளைக்கி ஆபிஸ்கு நான் எடுத்திட்டு வரேன். குமார் கேட்டா, கார் ப்ரோப்லம் சொல்லு.
சுஜி அமைதியாய் வந்து காரினுள் அமர்ந்தாள். அட்லஸ்தான் காரை ஓட்டினான். அமைதியாக இருவரும் இருந்தனர். ஏனோ, இருவருக்கும் அந்த அமைதி பிடித்திருந்தது போலும்.
சுஜி அவளது போனை எடுத்துப் பார்த்தாள். குமார் நாற்பது மிஸ் கால்கள் வைத்திருந்தான். இதில் வட்ஸ் ஆப் வைஸ் நோட்ஸ் மற்றும் குறுஞ்செய்திகள் வேறு. போனை பார்த்தவள் அதை மீண்டும் அணைத்து அவளது ஹேண்ட் பேக்கில் வைத்தாள். காரின் இருக்கையை சாய்த்துக் கொண்டாள்.
அட்லஸ் அவளை பார்த்து விட்டு மீண்டும் வாகனத்தையே செலுத்தினான். சுஜி அட்லஸை பார்க்கவே இல்லை. இடது பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள். அட்லஸ் அவளின் தலையில் அவனது இடது கையை வைத்து அவளது கூந்தலை வருடி விட்டான். சுஜி தூங்கி விட்டிருந்தாள்.
அக்கீர்:
பைத்தியமே பிடித்து போகும் கண்மணி
நீ என்னோடு இல்லாத போது
பைத்தியத்திற்கே பிடித்துப் போகும்
என் கண்மணி நீ
என்னோடு இருக்கும் போது
கார் சுஜியின் வீட்டை நெருங்கியது. கொஞ்சம் தூரம் தள்ளி காரை நிறுத்தினான் அட்லஸ். காரின் ஸ்டெரிங்கில் சாய்ந்துக் கொண்டு தூங்கி கொண்டிருந்தவளை பார்த்தான். ஜன்னலில் சற்று முன்பு பெய்திருந்த மழையின் நீர் குமிழிகள் இன்னும் படர்ந்திருந்தன. அந்த ஜன்னலில் இவளின் முக பிம்பம் அவனுக்கு மிகவும் அழகாக தெரிந்தது. அந்த ஜன்னலை தான் பார்த்துக் கொண்டிருந்தான் வைத்த கண் வாங்காமல்.
அக்கீர்:
உலக கிறுக்குத்தனங்களை
ஒன்றாக்கி சிலை செய்தால்
உன் உருவம் கிடைக்கப் பெறும்
சொல்லியவன் சிரித்துக் கொண்டு, தன் வலது கரத்தால் அவள் அழகு முகத்தை அவன் பக்கம் திருப்பினான். அவளும் குழந்தை போல் சிணுங்கலுடன் அவன் பக்கம் திரும்பிக் கொண்டாள். அவன் கையை பிடித்து தன் கழுத்துடன் ஒட்டி அணைத்துக் கொண்டாள். நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் எனலாம்.
அட்லசுக்கு உடல் முழுக்க என்னவோ செய்தது. இருட்டிய நேரம். ஆளில்லா ரோடு. மழை பெய்திருந்த ஈரம். குளிர்ந்த ஏர்கொண், மஞ்சள் லைட், காரினுள். அவன் ரோமங்கள் முறுக்கேறின.
தூங்கி கொண்டிருந்த சுஜியின் காதின் ஓரம் சென்று,
அட்லஸ்:
என்னுள் அணுக்களாய் சிதறி கிடக்கும்
பெண்ணுருவு நீ
நீரில் மிதப்பது போல்
உன்னுடல்
என்மன கிடங்கில் மிதக்கிறது
நீயே வெளியேறினாலும்
என் உரு
உன் ஆணையில்லையெனில்
ஒரு அடி கூட
எடுத்து வைக்காது
முடிவுறா தேடல் நீ
ஆயுட்கால அன்பு நீ
உடன்வாழும் நம்பிக்கை நீ
வாழ் இலக்கணம் நீ
அதிகாலை சிகைகோதல் நீ
கைரேகை போல எனக்கு மட்டும்தான் நீ
சுஜியின் காதை லேசாக கடித்தான் அட்லஸ். கண்களை மூடிக் கொண்டே கேட்டாள் சுஜி,
சுஜி: நான், வீட்டிற்கு போகட்டா?
கேட்டவள் நெற்றியில் வைத்தான் முத்தமொன்று சிரித்துக் கொண்டே.
சுஜி: சிரிக்காதடா திருட்டு பூனை. என்னையே நினைச்சிகிட்டு கார் ஓட்டாத. வீட்டிற்கு பத்திரமா போ. நாளைக்கி சனிக்கிழமை நான் காலை எட்டு மணிக்கு ஜிம் போய்ட்டு வீட்டிற்கு வரேன். ஓகே வா.
சிரித்தவனை பார்த்தவாறே காரின் ரேடியோவை ஆன் செய்தாள்.
ரேடியோ: வலையோசை பாடலை ஒலித்தது.
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்க தானாக ஆறும்
அட்லஸ், சுஜி இருவரின் பார்வையையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன. சுஜி, இதற்கு மேல் முடியாது என்பது போல் காரிலிருந்து பட்டென இறங்கினாள்
அக்கீர்: ஐ லவ் யூ
ஒன்றும் சொல்லாமல், அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சுஜி வீட்டை அடைந்தாள்.
அட்லஸ் அவள் போகும் வரை காத்திருந்து அவள் வீட்டை அடைந்ததும் கிளம்பினான். போகும் போது, அவளையே நினைத்துக் கொண்டான். அவர்களின் முதல் சந்திப்பை மனதில் ஓட விட்டான்.
தொடரும்...