ஒரு கிடாயின் அலறல்

அது 1984. இன்றைய விருதுநகர் மாவட்டமும் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்திலும் இருந்த கோபாலப்பட்டியில் கூலித் தொழில் செய்தும்,ஆடு வளர்த்தும் பிழைப்பு நடத்தும் குடும்பத்தில் பிறந்தவன்தான் கருப்பையா.வீடு பெரிதென்று சொல்லும்படியாக ஒன்றும் இல்லை.மண்ணால் அகன்ற சுவர்களோடு கட்டப்பட்டு, பனைமர ஓலைகளைக் கொண்டு வேயப்பட்டு,  அடுக்களையைப் பிரிக்க குறுக்காக நான்கடி உயரச் சுவர் கொண்டு தடுக்கப்பட்ட,ஒரு பத்தியுடைய வீடுதான் அவனது.அவ்வீடு ஊரை விட்டுச் சற்றுத் தள்ளியே அமைந்திருந்தது.
இம்மக்களுக்கென்றே தனியே குளம் இருந்தது.இக்குளத்தில் உயர்குலத்தைச் சேர்ந்தவர்களின் ஆடு மாடுகள் தண்ணீர் குடித்தால் கூட,தீட்டு என்று சொல்லும் மனப்பான்மை உடைய உயர்குடி மாக்களைப் பெற்றிருந்தது அவ்வூர்.அப்பகுதி மேலத்தெரு என்றும் அழைக்கப்பட்டது.
திரும்பப் படிக்கவெல்லாம் வேண்டாம் எழுத்துப்பிழையெல்லாம் இல்லை.மாக்கள்தான்.தொடருங்கள்.

அம்மாக்கள் இம்மக்களிடம் பேசுவதாய் இருந்தால் அது,ஏவல் வேலைக்காய் மட்டுமே இருக்கும்.அவர்கள் வீடுகள் இருக்கும் பக்கமே இவர்கள் செல்லக் கூடாது.ஏன்,இவர்களின் ஆடு மாடுகளும் கூட செல்லக் கூடாது.இதனாலே,பெரும்பாலும் அக்குடியிருப்பு வாசிகள் கால்நடைகள் வளர்ப்பதை தவிர்த்தனர்.இருந்தும்,சில குடும்பங்கள் வயிற்றுப் பிழைப்புக்காய் வேறு வழியின்றி அவைகளை வளர்த்து வந்தனர்.ஆடுகளை நரிகள்,நாய்களிடமிருந்து காப்பாற்றுவதைக் காட்டிலும்,அப்பெரியசாதி மாக்களின் வீட்டுப்பக்கம் சென்றுவிடக் கூடாதென்பதிலே கண்ணும் கருத்துமாய் இருந்தனர்.

மணியின் அப்பாவும் அம்மாவும் சுத்தமாகப் படிக்காதவர்கள்.கருப்பனின் அப்பா பக்கத்து ஊர்களில் கூலி வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்.குழி எடுத்தல்,விறகு வெட்டுதல்,தூர் பறித்தல் போன்ற வேலைகளுக்குச் செல்வார்.அம்மாவோ,வீட்டில் வளரும் ஆடுகளை மேய்ப்பார்.அம்மாவோடு கருப்பனும் ஈயச் சட்டியிலே சோற்றைக் கட்டிக் கொண்டும்,சுரைக்குடுவையிலே தண்ணீரைச் சேர்த்துக் கொண்டும் தன் தாய் சுப்புவோடு காட்டின் பக்கம் ஆடு மேய்க்கச் செல்லுவான்.அங்கு ஆடுகள் மேய்வதை மிக்க உண்ணிப்பாகப் பார்த்துக் கொண்டே இருப்பான்.அப்படி என்ன ஈர்ப்போ தெரியவில்லை ஆடுகளின் மேலே.
வேலையில்லா நாட்களில் கருப்பனின் அப்பா,அம்மா என மூவருமே ஆடுகளை மேய்க்கச் செல்வர்.

கருப்பையாவின் வீட்டில்,அவன் அம்மா,அப்பா,அப்பத்தா(அப்பாவின் அம்மா) இவர்கள் நால்வரும் இருந்தனர்.அவனின் ஐயா, இறந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாயிருந்தது.காளையனின் அப்பா சோமனுக்கு காளையன் ஒரே மகன் தான்.அவர்கள் அனைவரும் அவ்வொரே வீட்டில்தான் வசித்து வந்தனர்.

அப்போது கருப்பனுக்கு வயது ஆறு.இவன் பள்ளிக்கெல்லாம் போகவில்லை.அவன் பெற்றோர்களும் அனுப்பவில்லை.அதற்குக் காரணமும் உண்டு.அவ்வூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அரசங்குடியில் இருந்த பள்ளியிலே அச்சுற்று வட்டாரப் பகுதி பிள்ளைகள் படித்து வந்தனர்.
அங்கு படிக்கும் பிள்ளைகள்,உயர்குடி வீட்டுப் பிள்ளைகளே.கீழ்த்தட்டு மக்களின் பிள்ளைகளுக்கு பள்ளி என்பது பகல்கனவாய் இருந்தது.

தன் வீட்டில் வளரும் ஆடுகளின் மேல் கருப்பனுக்கு தனிப்பிரியம்.அவன் வீட்டின் முகப்புச் சுவரிலிருந்து சற்று குனிந்து செல்லும் அளவுக்கு சிறிய வாரம் ஒன்று பனையோலையினால் வேயப்பட்டு இருந்தது.மழை நேரத்தில் அதில்தான் ஆடுகள் கட்டப்படும்.சிறிய இடம்தான் இருந்தாலும் அதிலே தான் ஆடுகள்,ஒண்டிக் கொண்டு நிற்கும் சாரலை வாங்கிக் கொண்டு.

அவனுடைய வீட்டில் வளர்த்த ஆடு ஒன்று ஒருநாள் ஆண் குட்டி ஒன்றை ஈன்றது.அவ்வாட்டிற்கு பிரசவம் நடக்கும் போது அதை அக்குட்டியைத் தூக்கிக் கொண்டு விளையாடுவதே அவனுக்கு வேலையாக இருந்தது.அவனோடு பழகிப் பழகி அதற்கும் அவனைப் பிடித்துப் போனது.அவன் எங்கு போனாலும் அவன் பின்னேயே ஓடும்.அவன் திரும்பி நின்று வராதே...போ ..போ என்று சொன்னாலும்,அக்குட்டி விடாது,அவன் பின்னாலே ஓடும்.உடனே அவன்,முன்னால் சென்று அக்குட்டியைத் தூக்கி,கையோடு சேர்த்து மார்போடணைத்துக் கொண்டே நடை பயணத்தைத் தொடங்கி விடுவான்.இப்படியே நாட்களும் போகிறது.குட்டியும் வளரத் தொடங்குகிறது.இவர்களின் பாசப் பிணைப்பும் செரிந்து கொண்டே செல்கிறது.

கருப்பன்,"வாடா மருதைய்யா.." என்று சொன்னால் அவன் பின்னாலே ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு அவனுக்கும் மருதுவிற்கும் பாசமும் புரிதலும் இருந்தது.

அன்றொரு நாள் இரவு நல்ல மழை.கருப்பனின் வீட்டில் அனைவரும் உன்றுவிட்டு உறங்கி விட்டனர்.மழை சட சடவென கூரையில் விழும் சத்தம் கேட்டு,கருப்பனின் அப்பத்தா,தூக்கத்தில் இருந்து விழிக்க,அடுத்த கணமே காளையனும் சுப்புவும் விழித்தனர்.விழித்த அடுத்த கணமே,காளையன் வேகமாக் கதவைத் திறந்து கொண்டு வாசலுக்கு ஓடினான்.வீட்டு வாசலில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் மழையில் நனைந்து அடித் தொண்டையிலிருந்து கத்திக் கொண்டிருந்தன.

காளையன் வேக வேகமாகச் சென்று  துணியால் திரிக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்த,ஆடுகளின் தும்புகளைக் கழற்றி ஆடுகளை அவிழ்த்து விட்டான்.ஆடுகள் நாலெட்டில் பாய்ந்து,வீட்டின் முகப்பில் எடுக்கப்பட்டிருந்த,ஆழ் குனிந்து செல்லும் அளவுக்கே ஆன,கூரை வாரத்தில் சென்று,மண் சுவரை அண்டிக் கொண்டு நடுநடுங்கிப் போய் நின்றன.

இச்சம்பவங்கள் நடந்து முடியும் முன்பே,ஒரு காண்டா விளக்கை கையில் ஏந்திக் கொண்டு தாழ்வாரத்திற்கு சுப்பு வந்தாள்.பின்னே,கண்ணைக் கசக்கிக் கொண்டு கருப்பனும் எழுந்து வந்தான்.
அவன் வந்த உடனே,அவ்வளவு மழைக் குளிரிலும்,மங்கிய விளக்கொளியிலும் அடையாளம் கண்டு வந்த,மருது அவன் கை விரலை மெல்லக் கடித்தது.உடனே,அதன் தலையைத் தடவிக் கொடுத்தான் கருப்பையா.

சிறிது நேரம் நின்று,மழையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.மழை நிற்பது போல் தெரியவில்லை.காளையன்  இருவரையும் பார்த்து,உள்ளே சென்று தூங்கச் சொன்னான்.
"சரி..சரி வாடா..உள்ள கருப்பா.." என்று அம்மா சொல்லவும்,தன் கீழ் நின்றிருந்த மருதை தடவிக் கொடுத்துவிட்டு,வாயை அள்ளி முத்தம் கொஞ்சிவிட்டு உள்ளே சென்றான்.

காளையனும்,இருவரும் உள்ளே சென்ற சிறிது நேரத்திலே வீட்டினுள் சென்று விட்டான்.அவனும் உள்ளே சென்றதும் தூங்கிவிட்டான்.

பொழுது விடிந்தது.மழை பெய்து ஓய்ந்து போய்ந்திருந்தது.மண் அரித்து அரித்து,மணல் வெளிவந்து வடைவடையாக படிந்து போயிருந்தது.இருள் மடிந்து ஒளி துளிர்விட சமயம் எதிர்பார்த்திருந்தது.கதவைத் திறந்து அப்பத்தா வெளியே வருகிறார்.கதவு திறக்கும் சத்தம் கேட்டதும்,பட்டென முழித்து வெளியே செல்கிறார்.ஆனால்,காளையன் வீட்டினுள் இல்லை.

"இவர வேற காணோம்.எங்கிட்டு போனாரு மனுசே..."என்று தன் அத்தை நாகுவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள் சுப்பு.
உள்ளே தூங்கிக் கொண்டிருந்த கருப்பன் பேச்சுச் சத்தம் கேட்டு வெளியே எழுந்து வருகிறான்.அவனுடைய தந்தை தலையில்லாத முண்டமாக மருதுவைத் தூக்கிக் கொண்டு வருகிறார்.

கருப்பன் அன்று முழித்ததே முண்டமாகிப் போன மருதுவின் முகமிருந்த இடத்தை தான்.சுப்புவும் நாகுவும் உறைந்து போய் நிற்கிறார்கள்.தூக்கி வந்த மருதுவின் உடலைத் தரையில் போட்டுவிட்டு பேசாமல் அமைதியாக நின்றான் காளையன்.

"என்னங்க ஆச்சு...எப்டிங்க இப்டி...யார்ங்க இப்டி பண்ணது...சொல்லுங்க..."கண்ணீர்த் துளிர்த்துக் கொண்டே பதைபதைத்துக் கேட்கிறாள்,சுப்பு.

"அடேய்...சொல்லுடா....சொல்லுடா...வாயத் தொறந்து என்ன நடந்துச்சுனு..."என்று காளையனின் தோள்பட்டையப் பிடித்துக் கொண்டு கேட்கிறாள் நாகு.

இவர்கள் மூவரும் பின்னால் கதவின் அருகில் நின்றிருந்த கருப்பனைப் பார்க்கவே இல்லை.அழுகுரல் ஒன்று பின்னால் இருந்து வரவே சட்டென மூவரும் திரும்பி பார்க்கின்றனர்.இங்குதான் மூவருக்கும் பிரச்சனையே இப்பொழுதுதான் ஆரம்பமாகிறது.இவனுக்கு எப்படி சமாதனம் சொல்வது?

அதற்கு முன்னால் இதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.
நேற்றிரவு மழை பெய்ததால்,ஆடுகளை அவிழ்த்து விட்டுவிட்டு உறங்கச் சென்று விட்டார்கள் அனைவரும்.
வீட்டைச் சுற்றி முள்வேலி இருந்தது.அதனாலே,காளையனும் நம்பிக்கையுடன் உறங்கச் சென்றான்.ஆனால்,வேலியில் எங்கோ இருந்த இடைவெளியில் நுழைந்து மருது மட்டும் எப்படியோ வெளியே சென்று விட்டது.
அது அப்படியே மெல்ல மெல்ல நடந்து,மேலத் தெருவின் பக்கம் சென்று விட்டது.
அது விடியற்காலையில் வீதியோரம் அமைந்திருந்த,பெரிய தலைக்கட்டுக்காரர் ஒருவரின் வீட்டுக் கதவு திறந்திருக்க,உள்ளேயே சென்றுவிட்டது.

அங்கு யார் வீட்டிலும் ஆடுகளோ,மாடுகளோ கிடையாது என்பதனாலும்,அங்கு அருகிலே ஆடுகள் வளர்க்கும் குடிகள் யார் என்பதும் தெரிந்திருந்ததாலே...மரணத்தை பரிசாக்கிக் கொடுத்துவிட்டனர்,உயர்குடி மாக்கள்.

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (5-Sep-19, 7:37 pm)
பார்வை : 352

மேலே