தீண்டாமை

நின்ற நிலம் தீட்டாயின்
சென்றுவிடு
என் நிலம் விட்டு
தண்ணீரில் தீட்டென்றாயோ...

முன்னாளில் நான் குளித்து
முழுவாயு ம் கொப்பளித்து
மலம் கூட கழுவிட்டேன்
மாறுநாளில் நீ குளித்த
மடைதிறந்த நீரில்

எவ்வாற்றில் கழுவிடுவாய்
இத்
தீட்டை
எரிந்தே முடிந்துவிடு
இன்னும் நீ
தீட்டெனில்

நான் மிதித்து
உழவடித்து
நாளெல்லாம் களையெடுத்து
உடல் வடித்தவேர்வையும்
மண்மடித்த மலத்தையும்
உரமாக்கி
அரிசியாய்
பருப்பாய்
அடுக்கடுக்காய் காய்கறியாய்
விளைத்து அறுத்து
சமைக்க கொடுத்தேன்
சம்மதம் எனில்
நானும்
சமத்துவம் எனில்
நீயும்
தின்றுவிடு
இல்லை
எனில்
சென்றே விடு..

என் நிலம் விட்டு
நின்றேவிடு பசிவிட்டு
கொன்றே விடு
தின்ற வயிற்றை
தீயிட்டு.....

எபிநேசர் ஈசாக்..

எழுதியவர் : எபிநேசர் ஈசாக் (6-Sep-19, 6:03 pm)
சேர்த்தது : Ebinesar521
Tanglish : THEENDAMAI
பார்வை : 54

மேலே