எது உறவு

===========
உள்ளத் திலொன்றும் உதட்டி லொன்றும்
.உரைத்துத் திரிபவ ருறவாமோ?
உள்ளத் திலுள்ள உண்மையை மட்டும்
உரக்க வுரைப்பவ ருறவாமோ?
கள்ள முமின்றிக் கபடமு மின்றிக்
கலகலப் பானவ ருறவாமோ?
கள்ளத் தனமாய்க் கண்டதும் செய்துக்
கள்வரை மிஞ்சுவ துறவாமோ?
*
நல்லவர் போன்று நாடகம் போட்டு
நடித்துக் கிடப்பவ ருறவாமோ?
நல்லது கெட்டது நாலு மறிந்து
நடக்கச் சொல்பவ ருறவாமோ?
அல்லலிற் சிக்கிய ழுகிறக் காலம்
அணைக்க வருபவ ருறவாமோ?
அல்லலிற் சிக்கிய ழிவதற் காக
அனைத்தும் புரிபவ ருறவாமோ?
*
எத்தனைத் துன்பம் எதிர்கொளும் போதும்
இன்முகம் காட்டுவ துறவாமோ?
எத்தரைப் போன்று இருந்தெமக் குள்ளே
எட்டப் பராகுவ துறவாமோ?
புத்தகம் போன்றுப் புதுப்புதுப் பாடம்
புகட்டி விடுபவ ருறவாமோ?
புத்தியி லாதப் பேர்களைப் போன்றுப்
புரளியை கிளப்புவ துறவாமோ?
*
சுற்றமும் சொந்தமும் சுகம்பெற வேண்டிச்
சுயநலந் தொலைப்ப துறவாமோ?
மற்றவர் தன்னை மதிக்கணு மென்று
மினுக்கித் திரிவது முறவாமோ?
கற்றவ ரென்றுக் காட்டிட வேணடிக்
கௌரவம் பார்ப்பது முறவாமோ?
கற்றிடாப் போதும் கண்ணிய மானக்
கரிசனம் வைப்பவ ருறவாமோ?
***
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Sep-19, 2:45 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 172

மேலே