ஆசையெனும் நீசம் அணுகாது அகன்றாரே மாசகன்றார் - நசை, தருமதீபிகை 444

நேரிசை வெண்பா

தன்னை உடையானைச் சஞ்சலத்துக்(கு) உள்ளாக்கிச்
சின்னம் பலசெய்து சீரழிக்கும் - துன்னிய
ஆசையெனும் நீசம் அணுகா(து) அகன்றாரே
மாசகன்றார் ஆவர் மதி. 444

- நசை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன்னை உரிமையாகக் கொண்டவனை யாண்டும் சஞ்சலப்படுத்திச் சிறுமை பல செய்து ஆசை சீரழிக்குமாதலால் அதனை நீசம் என அஞ்சி ஒதுங்கினவர் மாசு நீங்கிக் தேசு மிகுந்து தெளிந்த ஞானிகளாய்ச் சிறந்து திகழ்வர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், ஆசை நீசம் என்கின்றது.

சின்னம் - சிறுமை, ஈனம், இகழ்ச்சி.

உயர்வும் இனபமுமே யாண்டும் தமக்கு வேண்டும் என்று விரும்பி வருகின்ற சீவர்கள் இழிவும் துன்பமுமே கண்டு எங்கும் அலமந்துழலுகின்றனர். விளைகின்ற விளைவுகள் எல்லாம் விதைத்த விதைகளின் பலன்கள் ஆதல்போல் புறத்தே அடைகின்ற அடைவுகள் யாவும் அகத்தே நினைத்த நினைவுகளின் நிலைகளேயாம்.

நெறியான எண்ணம் சரியான பலனை அருளுகின்றது; நெறி கோடியது குறி விலகியோடி அவகேடே தருகின்றது.

மனிதனுககு எல்லா நலங்களையும் இனிது அருளவல்லது அவனது நெஞ்சமே, அது பழுதுபடின் ஒளி இழந்த விழிபோல் உயிர்வாழ்வு இருளடைந்து போகும். நல்ல உள்ளம் பொல்லாத இச்சைகளால் புலையாய் இழிகின்றது. மாசு படிந்த கண்ணாடி போல் ஆசை படிந்த நெஞ்சம் தேசழிந்து போகின்றது.

கலித்துறை
மா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

மதியை மேகம்போல், வெண்தலச் சுதையினை மைபோல்,
அதிக நன்னெஞ்சை ஆசையாம் பேயழ(கு) அழிக்கும்,
பொதியும் மாலெலாம் நீக்கிவன் பவப்பயம் போக்கி
முதிர்ம னத்தின்மால் பிணிப்பறின் முத்திவே(று) உளதோ? - ஞான வாசிட்டம்

ஆசைப்பேய் மனிதனை நீசப்படுத்தும் நிலைமையை இது குறித்திருக்கிறது. சந்திரனை மேகமும், பளிங்கை மையும் மறைப்பது போல் நெஞ்சை ஆசை அழிக்கின்றது; அந்த நீசம் நீங்கின் ஈசனது பேரின்ப முத்தி உடனே உண்டாம் என உணர்த்தியுள்ளது. அவா. ஒழியின் ஒளியும் இன்பமும் வெளியாகின்றன.

தன்னை விரும்பித் தொட்டவரைப் பெரும் பித்தராக்கிப் பெருங்கேடு செய்து விடுதலால் ஆசை நீசம் என வந்தது.

செல்வம், கல்வி, அதிகாரம் முதலிய நிலைகளில் எவ்வளவு உயந்ந்தவராயிருந்தாலும் ஆசை புகின் அவர் அடியோடு இழிந்து படுகின்றார், அவாவின் கொடுமையைக் குறித்து ஒரு பெரியார் பாடியுள்ள பாடல் அயலே வருகின்றது.

நேரிசை ஆசிரியப்பா
.
கொடியு முரசுங் கொற்றவெண் குடையும்
பிறர்கொளப் பொறா அன்றானே கொண்டு
பொதுநீங்கு திகிரி திசைதிசை போக்கிச்
செவியிற் கண்டு கண்ணிற் கூறி
இருநிலம் புரக்கு மொருபெருவேந்தன் 5

மிக்கோ னொருவன் வெறுக்கை நோக்குழித்
தொக்கதன் வெறுக்கை சுருங்கித் தோன்ற
இழப்புறு விழும மெய்தி யழுக்கறுத்து
மற்றது பெறுதற் குற்றன தெரீஇ
அயிற்சுவை பெறாயன் றுயிற்சுவை யுறாஅன் 10

மாணிழை மகளிர் தோணலங் கொளாஅன்
சிறுகாற்று வழங்காப் பெருமூச் செறிந்து
கவலையுற் றழிவதூஉங் காண்டும் விறகெடுத்
தூர்தொறுஞ் சுமந்து விற்றுக் கூலிகொண்டு
புற்கையு மடகு மாந்தி மக்களொடு 15

மனையும் பிறவு நோக்கி யயன்மனை
முயற்சியின் மகனை யிழித்தன னெள்ளி
எனக்கிணை யிலையென வினையன்மற் றொருவன்
மனக்களிப் புறீஇ மகிழ்வதூஉங் காண்டும்,
அதனால்
செல்வ மென்பது சிந்தையி னிறைவே 20

அல்கா நல்குர வவாவெனப் படுமே
ஐயுணர் வடக்கிய மெய்யுணர் வல்லதை
உவாக்கடல் சிறுக வுலகெலாம் விழுங்கும்
அவாக்கடல் கடத்தற் கரும்புணை யின்றே,
அதனால்
இருபிறப் பியைந்த வொருபிறப் பெய்தும் 25

நான்மறை முனிவர் மூவா யிரவரும்
ஆகுதி வழங்கும் யாக சாலையிற்
றூஉ நறும்புகை வானுற வெழுவ
தெழுநாப் படைத்த முத்தீக் கடவுள்
கடலமிழ் துமிழ்ந்தாங் கவியமிழ் துண்ண 30

வரும்பெருந் தேவரை வானவர் கோனொடும்
விருந்தெதிர் கொள்கென விடுத்தது கடுக்கும்
வலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவநின்
அருள்பெற் றுய்தற் குரிய னியானெனிற்
பல்லுயிர்த் தொகுதியும் பவக்கட லழுந்த 35

அல்லல் செய்யு மவாவென படுமவ்
வறுமையி னின்றும் வாங்கி
அறிவின் செல்வ மளித்தரு ளெனக்கே. - 26 சிதம்பர மும்மணிக் கோவை

இந்த அருமைப் பாசுரத்தில் அடங்கியுள்ள பொருள் நயங்களைக் கருதி நோக்குக. ஆசை உற்றவரது சிறுமையும், அற்றவரது பெருமையும் அதி நயமாய் விளக்கப்பட்டுள்ளன. இரண்டு வாழ்க்கைச் சித்திரங்கள் விசித்திர நிலையில் காட்சிக்கு வந்திருக்கின்றன.

ஆசையின் அழிவு

ஒரு அரசன்; தேசம் முழுவதும் தனக்கே தனியுரிமையாய்க் கொண்டு ஆளுகின்றவன்; செல்வங்கள் பலவும் நிறைந்திருந்த முடிமன்னனான அவன் ஒருநாள் மறுபுல வணிகனுடைய பெரிய திருவின் நிலைமையைக் கேள்வியுற்றான். பொன்னும் மணியும் தன்னிலும் மிகுதியாக அவனிடம் உள்ளமையை அறிந்ததும் அவன் உள்ளம் எள்ளலாய் இழிந்து அல்லலுழந்தது; பொறாமையும் துன்பமும் பொங்கி எழுந்தன; எல்லை மீறியுள்ள அப்பொருளை ஒல்லையில் அடையவேண்டும் என்னும் ஆசையால் அல்லும், பகலும் அலமந்து நின்றான். எல்லையில்லாதன எண்ணி ஏங்கி உளைந்தான். உறக்கம் துறந்தான்; உணவினை மறந்தான்; மனைவியொடும் மகிழாமல் மன வேதனைகள் மிகுந்தான்; கருதியதை அடைய முடியாமையால் இறுதியில் மறுகிப் பரிதாபமாய் அழிந்தான்.

நிராசையின் நிறைவு

எளியவன் ஒருவன்; சிறிய தொழிலினன்; விறகுகளைத் தலையில் சுமந்து கொண்டுபோய் ஊர்களில் விற்று அந்த வரவில் தன்னுடைய சொந்த சீவனத்தை நடத்துகின்றவன்: நாள்தோறும் காலையில் எழுந்து, விறகு தொகுத்து அயலிடம் சென்று விற்று அவ்விலைப் பொருளோடு மாலையில் வீட்டுக்கு வருவான்; மனைவி கையில் பணத்தை மகிழ்ந்து கொடுப்பான்: அது கொண்டு சிறு தானியம் வாங்கிக் கூழாக்கிக் கீரைக்குழம்போடு அவள் இனிது படைப்பாள்; அவ்வுணவை மக்களோடு ஒக்க உண்டு மனைவி அயலே மருவி இருப்ப ஓலைப்பாயில் மகிழ்ந்து வீற்றிருந்து சல்லாப சரசங்கள் ஆடி உல்லாசமாய் அவன் பொழுதைக் கழிப்பான்; அந்த எளிய வாழ்வில் எவ்வழியும் இனிமைகள் சுரந்து அமைதியும் இன்பமும் யாண்டும் பெருகியிருந்தன.

பெரிய செல்வங்கள் நிறைந்திருந்தும் ஆசை மிகுதியால் அரசன் அல்லலடைந்து இழிந்தான்; அந்த நீச நசை இல்லாமையால் வறியனும் பெரு மகிழ்வோடு வாழ்ந்து வந்தான். ’சிந்தையின் நிறைவே செல்வம்’ என்பதை இவனது வாழ்வு இனிது உணர்த்தி நின்றது. அவா அவலமாயது: அமைதி உவகை ஆயது.

இந்த இரண்டு நிலைகளையும் எடுத்துக் காட்டி "ஆண்டவனே! ஆசையாகிய கொடிய வறுமை என்னை அணுகாமல் அறிவாகிய பெரிய செல்வத்தை எனக்கு அளித்தருளுக' என ஈசனை நோக்கிக் குமரகுருபரர் ஈண்டு வேண்டியிருக்கிறார். அவாவின் தீமையைக் குறித்துச் சீவிய நிலைகளை விளக்கி ஓவியம் வரைந்து இங்கே உணர்த்தியிருப்பது காவியச்சுவை கனிந்திருக்கிறது.

’ஆசை எனும் நீசம் அகன்றாரே மாசு அகன்றார்’ தம் உள்ளத்தில் தீய ஆசையிருக்கும் வரையும் எவரும் தூயராக முடியாது. உயர்ந்த பரிசுத்த நிலைகளை நசை நாசப்படுத்தி விடுதலால் அதனையுடையவர் அசுத்தராய் இழிந்து படுகின்றார். ஆசை ஒழிந்த பொழுது யாதொரு மாசுமின்றி அவ்வுயிர் தேசு மிகுந்து ஈசன் அருளை எய்துகின்றது.

தூஉய்மை என்ப(து) அவாவின்மை, மற்றது
வாஅய்மை வேண்ட வரும் 364 அவா வறுத்தல்

இந்த அருமைத் திருக்குறள் இங்கே சிந்திக்கத்தக்கது. அவாவின்மையே தூய்மை; அதனையுடையவரே பரிசுத்தர்; அவரே முத்தி நிலையை அடைய உரியவர்; சத்தியமான நித்திய வாழ்வினர் என வள்ளுவர் இங்ஙனம் அருளியுள்ளார்.

நீசன் எனச்செய்யும் நீளாசை; அஃதின்றேல்
ஈசனே ஆவன் இவண்.

நசை சீவனை நாசப்படுத்துகின்றது; அது ஒழிந்தபோது ஒளி மிகுந்து உய்தி பெறுகின்றது. உண்மை தெளிவது நன்மையாம். ஆசை நீங்கி அமலன் ஆகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Sep-19, 6:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

மேலே