வாழ்வும் சதுரங்கமும் பகுதி -5 ராணி ஓர் பெண்ணாக

வாழ்வும் சதுரங்கமும் பகுதி -5

ராணி ஓர் பெண்ணாக

பேரழகின் உச்சம்
வசீகர பேச்சு
தீரா காதல்
திகட்டா மோகம்
மென்மை நளினம்
அன்பு ஏக்கம்
அனைத்தும் அவளுக்கே
மாற்று ஏதுமில்லை

ஆனால் அவள்
அதுமட்டுமே இல்லை
அவளை காலம்
காலமாக சுருக்காதீர்
பெண் தானே
எனச் சொல்லாதீர்

சதுரங்கம் நமக்கு
மறுக்க முடியாத
உண்மையை சொல்கிறது

பதிணைந்து ஆணிற்கு
நடுவிலே ஒரே ஒரு பெண்
அனைவரின் நம்பிக்கை
ஆகிறாள் நம்
அம்மாக்களை போல

தனி சாம்ராஜ்யம் அவள்
அவள் இருக்கும் நம்பிக்கையிலே
மற்றவர்கள் இயங்குகிறார்கள்

ஓர் தாயாக
ஓர் மனைவியாக
ஓர் காதலியாக
ஓர் தோழியாக
ஆகச்சிறந்த ஆருதல் அவள்
அவள் இல்லையென்றால்
நம்பிக்கையற்று தோல்வியே

எதிர்க்க துணிந்தவள்
எதிரிக்கு அஞ்சாதவள்
அதனால் தான்
தன்னை பாதுகாக்க
பலர் இருந்தும்
ராஜா ராணியையே
அதிகம் நம்புகிறான்
அதிகம் நேசிக்கிறான்

நிகழ்வில் பல
உதாரணமுண்டு
மதுரை ஆட்சியே
மிகச்சிறந்த சாட்சி

அவள் அவள்
இலக்கணத்தை
உடைக்கும் போது தான்
சமுதாயத்தில் தவிர்க்க
முடியா சக்தி ஆகிறாள்

மங்கம்மாவின் ஆட்சியாக
கண்ணகியின் சபதங்களாக
வேலு நாச்சியின் போராட்டமாக
உறுமாறுகிறாள்

ஆனால் அவளுக்கு இச்சமூகம்
தொடர்ந்து பல
துரோகங்களை
செய்கிறது

கட்டுப்பாடு என்ற பெயரில்
காமம் என்ற பெயரில்
தீட்டு என்ற பெயரில்
இத்தனையும் கடந்து தான்
அவள் தனிச்சுடராகிறாள்

ஓர் கல்பனாவாக
ஓர் மீரா பாயாக,சிந்துவாக
ஓர் போர் விமானியாக
ஓர் முதலமைச்சராக
இப்படி பல உதாரணம்
பல சாதனகள்

அவள் அவளை
அடையாளம் கண்டு
ஆண்டு பலவாயிற்று
அவளுக்கான கனவு ஏராளம்
சமைப்பதற்காகவும்
பிள்ளை பெறுவதற்காகவும்
அவள் படைக்கப்படவில்லை

இன்னும் தெளிவாக
சொல்லின் அவள்
இலக்கிய அழகிற்கு
மட்டும் தான் அவள் குறில்
நிகழ்வில் அவளும் நெடிலே

அந்த அக்கினிச் சிறகை
ஒடுக்காது சுதந்திர
பறவையாய் விடுங்கள்
அவள் ஓர் நாள்
இச்சமூகத்தில் தவிர்க்க
முடியா ராணியாக மாறுவாள்

எழுத்து சே.இனியன்

எழுதியவர் : சே.இனியன் (14-Sep-19, 8:37 am)
சேர்த்தது : இனியன்
பார்வை : 72

மேலே