அந்தரங்க அதிகாரி
====================
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
வந்துகேட்கும் அவர்களைப் போலன்றி
அன்றாடம் வந்து கேட்கும்
அவனை இன்றும் பார்க்கிறேன்
*
மழிக்காத தாடி
குளிக்காத மேனி
கிழிந்த அழுக்கு ஆடை மற்றும்
திருவோடு சகிதம்
ஊன்றுகோல் ஊன்றி நடக்கும்
பரிதாபம் என யாசகனுக்கான
தகுதியுடைய அவனைப் பார்க்கிறேன் .
*
வெளியே சொல்லவும் முடியாமல்
மூடி மறைக்கவும் தெரியாமல்
அல்லல்படும் கௌரவ யாசகராயன்றி
எதையும் மறைக்காத யதார்த்தத்தோடு
யாசகம் கேட்கும் அவனைப் பார்க்கிறேன்,
*
வாழ்க்கையை உறவுகளுக்காக
அர்ப்பணித்து அர்ப்பணித்து
வழுக்கையும் வயோதிபமும் சூடிய
தருணமொன்றில் நிராதரவாக்கிய
பொய் முகங்களை தரிசித்தவனாய்
வந்து நிற்கும் அவனைப் பார்க்கிறேன்,
*
எச்சில் கையால் காகம் விரட்டாத
மனிதர்களையும்.
எட்டி உதைக்கா குறையாய்
திட்டித் தீர்க்கும் மிருகங்களையும்
சில்லறை இல்லை பிறகு வாவெனும்
சில்லறைகளையும்
கண்டும் காணாததுபோல்
முகம் திருப்பிப்போகும்
கலியுக கர்ணர்களையும் கண்டுகண்டு
சலித்துப்போன அவனை
சலிக்காமல் பார்க்கிறேன்..
*
கொடுப்பதற்கு எதுவுமற்றபோதும்
ஒரு புன்னகையைக் கூட
யாசகமாய் இடத்தெரியாத நம்மிடம்
அவன் பெரிதாக ஒரு
ஆறுதல் வார்த்தையைக் கூட
எதிர்பார்ப்பதில்லை.
என்றாலும்,
எமது சொத்துக்களை
எழுதிக்கேட்க வருபவனாக எண்ணியே
விலகிச் செல்கிறோம்
*
நம்மை விட
நம்மில் எத்தனைபேர் யாசகர் என்று
அதிகம் தெரிந்து வைத்திருக்கும்
அவன் யாசகன் அல்ல
யாசகனுக்கே ஈயா யாசகர்கள்
நம்மில் எத்தனை வகைஎன்று
கணக்கெடுக்க இறைவன் அனுப்பிய
அந்தரங்க அதிகாரி என்றே தோன்றுகிறது
*
*மெய்யன் நடராஜ்