செவப்பி - அத்தியாயம் 12

செவப்பி அத்தியாயம் 12
========================

அன்று இரவு நிம்மதியாக தூங்கினார் பார்வதியம்மா.. பல நாட்களாய் மனதில் அழுத்திக் கொண்டிருந்த விஷயத்திற்கு விடை கிடைத்திருக்கிறது.

காலையில் விழித்ததும் எழுந்து நின்றார். அப்போது யாரோ காலைத் தொட்டுக் கும்பிடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.

கிச்சனுக்கு போக அங்கே ஆச்சரியம் காத்திருந்தது. அப்படியே சாப்பிட்டு விட்டுப் போட்டிருந்த பாத்திரங்களும், பிற அனைத்துமே கழுவி கவிழ்க்கப்பட்டு, அவ்விடமே படு சுத்தமாக இருந்தது.

வாசலுக்குப் போக அங்கேயும் ஒரு ஆச்சரியம். வாசலில் தண்ணி தெளிக்கப்பட்டு, அழகான கோலம் போடப்பட்டிருந்தது.

"ம்.. இந்த ரூபாவுக்கு என்னாச்சு..? எவ்ளோ சொன்னாலும், எத்தன தடவை சொன்னாலும் இதெல்லாம் செய்ய மாட்டா.. இன்னைக்கு எப்படி?", என யோசித்தபடியே "ரூபா.. ரூபா..", என கத்திய‌ பார்வதியம்மாவிற்கு போர்வையை இழுத்துப் போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்த‌ ரூபா தான் கண்ணில் பட்டாள்...

'என்னடி இவ, எங்கிட்டயே விளையாடுறாளா...!' என யோசித்தவாறு ரூபாவைப் போட்டு குலுக்கினார்.

பதறியடித்து எழுந்தாள் ரூபா....

"என்னம்மா... நிம்மதியா தூங்கக் கூட‌ விடமாட்டேங்கற...?"

"ஏய்.. நடிக்காத.. நீ முன்னாடியே முழுச்சிட்ட‌ தானே..!! பாத்திரமெல்லாம் கழுவி வச்சிட்டு, வாசல்ல‌ தண்ணி தெளிச்சு கோலம் போட்டுட்டு, அப்புறம் என்னடி தூங்கற மாதிரி நடிப்பு!!!?"

"ஏம்மா.. உனக்கு என்ன பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிருச்சா.. நேத்து கூட நல்லா தானே இருந்த.. அதெல்லாம் நான் எப்பமா பண்ணியிருக்கேன்? படிச்சு முடிச்சு, புரொஜக்ட் வொர்க் முடிச்சு, தூங்கும் போது ஒரு மணி ஆயிடுச்சு.. இன்னும் தூக்கம் அப்படியே கண்ணுக்குள்ள இருக்கு.. இப்படி குலுக்கி குலுக்கி எழுப்பி விட்டுட்டு.. தொல்லை பண்றியே..! போம்மா", என சொல்லிவிட்டு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு மறுபடியும் தூங்க ஆரம்பித்தாள்.

'அப்போ.. இதெல்லாம் யாரு..?', என யோசித்தவருக்கு ஏதோ புரிந்தது போலவும் இருந்தது, புரியாதது போலவும் இருந்தது.

அப்புறம் வழக்கம் போல எழுந்து கல்லூரி சென்ற ரூபா, வீட்டுக்கு மிகவும் பரபரப்பாக வந்தாள்.

"அம்மா.. இன்னைக்கு காலையில காலேஜ்ல என்ன நடந்துச்சு தெரியுமா?"

"என்னடி... என்னனு சொல்லு..?"

"ஒரு பையன் என்னை ரொம்ப நாளா தொல்லை பண்ணிட்டே இருந்தான். இன்னைக்கும் போகும் போது குறுக்கால நின்னு என்கிட்ட ஏதேதோ பேச ஆரம்பிச்சான். திடீர்னு அவனோட‌ உடம்புல அடி விழ‌ ஆரம்பிச்சிருச்சு.."

"ஐயோ அம்மா.. ஐயோ அம்மானு..." அலற ஆரம்பிச்சிட்டான். அப்புறமா வந்து இனிமே உன் வழில என்னைக்குமே நான் வரமாட்டேன்னு சொல்லிட்டு. கும்பிடு போட்டு போயிட்டான். எனக்கு ஒரே ஆச்சரியமா போச்சு..."

"எப்படிம்மா இதெல்லாம்... என்னம்மா நடக்குது?"

"அப்ப அவ உனக்கும் பாதுகாப்பா இருக்கிறா..."

"என்னம்மா சொல்ற...? எவ அவ...? எனக்கு எதுக்கு பாதுகாப்பா இருக்கறா...?"

"வாய்ல போடு.. வாய்ல போடு.. அவ இவனு சொல்லாத"

"அப்ப அவங்க யாரு?"

"ம்... உன் அண்ணி..."

"என்னது அண்ணியா...!" என்ற ரூபாவிற்கு இதுவரை அவளுக்குத் தெரிந்த விஷயங்களை எல்லாம் சொன்ன பார்வதியம்மா, காலையில் வீட்டில் நடந்த விஷயம் வரைக்கும் சொல்லி முடிச்சாங்க...

(தொடரும்)

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (7-Oct-19, 7:50 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 112

மேலே