கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 15

வேகத்தோடு சுஜியின் கார் அட்லஸின் அடுக்குமாடி சூட்டின் முன் வந்து நின்றது. வெளியில் இருக்கும் காவலாளியிடம் இவள் ஒன்றுமே சொல்ல வேண்டாம். இவளின் முகம் எல்லாருக்கும் அங்கு அத்துப்படி.

முதலில் தயங்கிய காவலாளி புதிய காரை பார்த்தவுடன், உள்ளே சுஜியை பார்த்த மாத்திரத்தில் ஏதும் பேசாமல் சிரித்தவாறே அவளை உள்ளே செல்ல அனுமதித்தார்.

காரை பார்க்கிங்கில் பார்க் பண்ணி விட்டு காரை விட்டு இறங்கியவள், ஒரு கையில் அவளது போனையும் மறுகையில் காரின் சாவிக் கொத்தையும் எடுத்துக் கொண்டு வேகமாய் அவன் இருக்கும் அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் ஏறினாள். அவனின் மாடியின் எண்ணை தட்டி அவளின் பாக்கெட்டிலிருந்த அட்லஸின் வீட்டுச் சாவியை எடுத்து கையில் வைத்துக் கொண்டாள்.

அந்த இருபத்தி ஏழாவது மாடிக்கு லிப்ட் வேகமாய் சென்றுக் கொண்டிருக்க அதற்கு கூட பொறுமை அற்றவளாய், தன் கை கடிகாரத்தை ஒரு முறை பார்த்து சலித்து விட்டு கைகள் இரண்டையும் கட்டி கொண்டு பெரு விரலை வாயில் வைத்து பலத்த சிந்தனையோடு அந்த பளிங்கு போன்ற உலோக லிப்டின் கதவுகளில் தெரியும் அவளின் உருவத்தை அவளே பார்த்துக் கொண்டிருந்தாள்.

லிப்டின் கதவு திறந்தது. சுஜி வேகமாய் அட்லஸின் வீட்டை நோக்கி நடந்தாள். பூட்டியிருந்த கதவை அவளின் சாவி கொண்டு திறந்தாள்.உள்ளே சென்றாள். வீடு ரணகளமாக காணப்பட்டது.

சுஜிக்கு தூக்கி வாரி போட்டது. ஏற்கனவே, அவன் போத்தல் உடைத்த சம்பவத்திலிருந்து அவள் இன்னும் மீளவில்லை. இதில் இந்த வீட்டின் இப்போதைய கோலத்தை பார்த்தாலே அவளுக்கு இன்னும் அள்ளு விட்டது.

அவன் பெயர் சொல்லி கூப்பிடவும் கொஞ்சம் அச்சமாக இருந்தது அவளுக்கு. கொஞ்சமல்ல ரொம்பவே. அட்லஸின் கோபம் சுஜிக்கு புதிது. எப்போதும் சிரிப்பை மட்டுமே முகத்தில் கொண்டிருப்பவன் இன்று தீடிரென்று சீரிப் பாயும் புலியானால் என்னதான் செய்வதாம்.

குழப்பத்தோடு கீழே சிதரிக் கிடந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்து உடைந்து தெறித்திருந்த பூ பாசியின் கண்ணாடி துண்டுகள் காலில் படாமல் எக்கி எக்கி தன் பாத அடிகளை வைத்தாள் சுஜி.

அடி மேல் அடி வைத்து அவன் அறைக்கு சென்றாள். அவன் அங்கே குளியல் அறையில் டி ஷேர்ட் இன்றி வெறும் துண்டோடு அவ்வறையின் சுவற்றில் கை வைத்தப்படியே நின்றிருந்தான். கட்டுப் போடப்பட்ட கைகளிலிருந்து ரத்தம் வலிந்துக் கொண்டே இருந்தது. அந்த குளியல் அறை கதவும் திறந்தே இருந்தது.

ஷவரில் இருந்து வெளிவரும் வேகமான தண்ணீர் அந்த காயம் பட்ட இடத்தில் பட்டுத் தெறிப்பதே அங்கே ரத்தம் நிற்காமல் ஓட காரணம். சுஜி கண்களில் கண்ணீர். சொல்லவேண்டியதே இல்லை. அது தெரிந்த கதைதானே. அழா விட்டால் அது சுஜியே இல்லை.

கண்ணாடி பேழை போன்ற குளியல் அறை அது. உள்ளிருந்து வெளியேவும் வெளியிருந்து உள்ளேயும் பார்க்கலாம். சுஜி திறந்திருந்த அந்த குளியல் அறைக்குள் நுழைந்தாள்.

அட்லஸ்க்கு தெரியும் அது சுஜிதான் என்று. ஆனால், அவன் கண்டுங் காணாதது போல் அப்படியே நின்றிருந்தான் சிலையாக. சுஜி அந்த ஷவரின் தண்ணீரில் நனைந்தப்படியே அவனை பின்னாலிருந்து இருக கட்டி கொண்டாள்.

ஆனால், அட்லஸ் அவன் உடலை குலுக்கி அவளை விட்டு அந்த குளியல் அறையிலிருந்து வெளியேறினான். சுஜி அவன் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்தவளாய் அந்த ஷவரின் தண்ணீரிலே நின்றுக் கொண்டிருந்தாள். இம்முறை அவளின் கண்ணீர் அந்த தண்ணீரில் கலந்தோடியது.

தொடரும்...

எழுதியவர் : தீப்சந்தினி (7-Oct-19, 3:50 pm)
பார்வை : 131

மேலே