செவப்பி - அத்தியாயம் 13

செவப்பி அத்தியாயம் 13
========================

இவ்வாறாக இரண்டு மாதம் கழிந்தது...

ஊருக்கு கிளம்பி வந்து கொண்டிருந்தான் ரகு.. அவனிடம் நேற்றே சொல்லியிருந்தாள் செவப்பி..

'இப்ப ஒரு நல்ல வாய்ப்பு வரும் போல.. உடனடியா நாளைக்கு ஊருக்கு கிளம்பு' என..

ஊருக்குள் பஸ்ஸில் வந்து இறங்கிய‌வனுக்கு ஊரே வெறுமையாய் தோன்றியது.

நினைவுகளைச் சுமந்தவாறே வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

அப்போது சிறிது தொலைவில் பண்ணையார் தனது கூட்டாளிகளுடன் நடந்து வருவது கண்ணில் பட்டது.

ஒரு சூரைக்காற்று அவனை மெல்ல தொட்டு விட்டுப் போனது..

இப்போது அவன் அவளாகியிருந்தான்.

கண்கள் ரத்தச் சிவப்பாயின..

ஆக்ரோஷமாய் பண்ணையாரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது அவன(ள)து நடை..

"டேய்....", எனக் கேட்ட செவப்பியின் குரல் பண்ணையாரை குலை நடுங்க வைத்தது.

"காதும் காதும் வச்சாப்பல என்னை முடிச்சுட்டேனு பார்ட்டி எல்லாம் வச்சு என் சாவக் கொண்டாடுனியே... இருடி.. உனக்கு வைக்கிறேன் ஆப்பு.. இன்னும் ரெண்டே நாள்ல..."

நடுங்கிக் கொண்டிருந்தான் பண்ணையார்.

கொஞ்ச நாட்களாகவே எந்த தொல்லையும் இல்லாமல் இருந்தவன், இந்த திடீர் எச்சரிக்கையை எதிர்பார்க்கவில்லை. அவனுடன் சேர்ந்து அவனது கூட்டாளிகளும் பயந்து போய் நின்று கொண்டிருந்தனர்.

எச்சரிக்கை விட்டதும் சாதாரணமான ரகு, பண்ணையாரை முறைத்தபடியே நடக்க ஆரம்பித்தான்.

"செவப்பி குரல்ல வந்து மிரட்டி பயமுறுத்தினா. ஓகே.. இப்ப இவன் எதுக்கு காரணமேயில்லாம மொறச்சிட்டுப் போறான்...", எனக் குழம்பிப் போயிருந்தான் பண்ணையார்..

அவனைத் தாங்கிப் பிடித்தவாறு வீட்டிற்கு கூட்டிச் சென்றனர் கூட்டாளிகள்.

வீட்டுக்கு வந்த ரகுவிடம், செல்லச் சண்டை போட்டனர் அம்மாவும், தங்கச்சியும்..

"என்கிட்டயே மறைச்சிட்டு இல்லடா..!"

"இல்லமா.. சம்மதம் கிடைச்சவுடனே சொல்லலாம்னு இருந்தேன்.. ஆனா விதி அதுக்கு வழி விடலையே...", என்றவாரு கண் கலங்கினான் ரகு.

"அண்ணா! இங்க நடக்கற விஷயம் தெரியுமா..?", என அன்று வீட்டில் நடந்த நிகழ்ச்சியையும், அவளது காலேஜில் நடந்த நிகழ்ச்சியையும், அன்றிலிருந்து தினம் தினம் நடக்கும் ஒவ்வொரு அதிசயத்தையும் அடுக்க ஆரம்பித்தாள் ரூபா...

செவப்பி மீது மிகுதியான அன்பு பிறந்ததை உணர்ந்தவனாய், அவனது கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவெனக் கொட்டியது.

அடுத்த இரண்டாவது நாள் காலையிலேயே இவனுக்கு எங்கு போக வேண்டும்.. என்ன செய்ய வேண்டும்.. என்பதான அறிவிப்புகள் செவப்பியால் கொடுக்கப்பட, ஆத்தங்கரையிலேயே காத்திருந்தான் ரகு.

செவ‌ப்பி போலவே பண்ணையார் நீருக்குள் மூழ்கிய வேளை, அவனுக்கே தெரியாமல் வெளியே வர முடியாதபடி அப்படி அழுத்திப் பிடித்துக் கொண்டான் ரகு.

அந்நேரம் பார்த்து ஒரு பெருங்கூட்டமே அக்கரைக்கு குளிக்க வர, அங்கிருந்து நைசாக நழுவினான்.

பெருமூச்சு விட்டபடியே தப்பித்த‌ பண்ணையார், இனிமே தனியா எங்கேயும் போகக்கூடாது என நினைத்தவாறு வீட்டை நோக்கி வேக வேகமாக ஓட, அவனைப் பார்த்து, அவனது பயத்தைப் பார்த்து, அவனது பரிதாப நிலையைப் பார்த்து, சிரித்துக் கொண்டிருந்தாள் செவ‌ப்பி காற்று ரூபத்தில்..

(தொடரும்)

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (8-Oct-19, 8:14 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 105

மேலே