மருத்துவ வெண்பா - பசுவின் தயிர் - பாடல் 10
வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக்களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.
இதில் குறிப்பிடும் நோய்களைப்பற்றியும், மருந்துகளையும் தகுதியுள்ள சித்த மருத்துவர் களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.
நேரிசை வெண்பா:
பசுவின் தயிரால் பசிமிகவுண் டாகும்
இசிவுறு(ம்)அ சீரணநோய் ஏகும் – பசையகன்ற
தாகம் இளைப்பிருமல் தாங்கொணா மெய்யெரிவும்
ஏகும் உலகில் இயம்பு.
பொருளுரை:
பசுவின் தயிரால் பசி மிக உண்டாகும். இசிவு, சீரணக் கோளாறு, தாகம், ஆயாசம், இளைப்பு, இருமல், சரீர எரிச்சல் இவைகள் நீங்கும். பித்த சம்பந்தமான நோய், மூல நோய், உஷ்ண பேதி, சீத பேதி நோயுள்ளவர்களுக்கு மிகச் சிறந்தது.
பகல் சாப்பாட்டின் முடிவில் பசுவின் தயிரை சாதத்தில் விட்டுச் சாப்பிடுவது வழக்கம். சிறிது புளிப்புச் சுவை சீரண சக்தியைக் கூட்டும்.
பசுவின் தயிர் உடல் வெப்பத்தைத் தணித்து தாகத்தை அடக்கும். இரவு நேரத்தில் தயிர் உபயோகிப்பது நல்லதன்று.
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியைத் தருவது தயிர்தான். தயிரில் உள்ள ’Lactobacillus’ ஜீரண சக்தியைத் தூண்டி வயிற்றின் உபாதைகளைச் சரி செய்கிறது.
வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ள மருத்துவர்கள் சொல்வார்கள்.
அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் அடங்கும்.
Menopause பருவத்தை எட்டப் போகும் பெண்களுக்கு உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தைத் தயிர் வழங்குகிறது. தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ’Riboflavin’ என்ற வைட்டமின் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில:
1. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
2. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.
3. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.
4. Appendicitis மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள Lactic அமிலத்தால் விரட்டியக்கப்படும்.
மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.
5. தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக் கொள்ளலாம்.
தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.
மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.