ஏமாற்றக் கவிதை 3
ஏமாற்றக் கவிதை 3
===================
பத்தாம் வகுப்பு மாணவனாய்
நான் நகங்களை ஏனோ கடிக்கின்றேன்..
நீ இதற்குத் தானா பழகினாய்
காதல் தேசம் விட்டே விலகினாய்?
காதல் பட்டம் செய்திடவே
எத்தனை நாளாய் பாடு பட்டேன்..
நீ பறித்தது கூட அல்லாமல்
அதனை கிழித்துப் போட்டதும் ஏனடியோ?
காகிதக் கப்பல் ஒன்றுசெய்து
தூறும் மழை நாள் பார்த்திருந்தேன்..
நான் கண்கள் சொக்கும் வேளையிலே
அதனை பிடிங்கிச் சென்றதும் ஏனடியோ?
கரடி பொம்மைக் கேட்டழுது
வீட்டில் கொஞ்சிய படியே நானிருந்தேன்..
கத்தி கொண்டு அதைக் குத்தி
பஞ்சு பஞ்சாய் ஆக்கியது ஏன்?
பம்பரம் எனக்குப் பிடிக்குமடி
அதில் பலதிணுசுண்டு என் வீட்டிலடி..
அத்தனை பம்பரம் எடுத்துச் சென்றாய்
தீயில் இட்டு ஏனோ கொளுத்திவிட்டாய்?
வாடகை சைக்கிளை ஓட்டியவன்
சொந்தமாய் ஒன்றை வாங்கிக் கொண்டேன்..
உன் கண்ணில் பட்ட அந்நொடியே
அக்கு வேறாய் அதையேன் ஆக்கிவிட்டாய்?
பொங்கல் விளையாட்டுப் போட்டியிலே
ஒட்டு மொத்த பரிசையும் அள்ளியவன்..
பானை உடைப்பதாய் சொல்லி வந்தாய்
ஓங்கி இதயம் உடைத்தாய் எப்படியோ?
"போயிடு" என்று நீசொல்லி
சென்றதில் இருந்தே நான் இல்லை..
வந்திடுவாய் நீ என எண்ணி
வாழ்ந்திடுவேன் ஒரு சிலையாய் நான்..
அ.வேளாங்கண்ணி