கண்ணதாசா
கற்றோரும் மற்றோரும் எளிதாக விளங்குவண்ணம்
கவியரசா நீவடித்தாய் பாட்டு !
காற்றோடு கலந்தினிக்கும் காலமெல்லாம் புகழ்கூட்டும்
கண்ணதாசா உனக்கில்லை மாற்று !!
சொற்சுவையும் பொருட்சுவையும் நயங்கொஞ்சும் எழில்நடையும்
துள்ளிவரு மின்சந்தத் தோடு
சுகமாக நெஞ்சள்ள சோகத்தை யும்மறந்து
சொக்கித்தான் போகிறோமே கேட்டு !!
வற்றாத ஊற்றாக வளமான தத்துவங்கள்
வாழ்விற்கு நல்லவழி காட்டும் !
மனநோய்க்கு மருந்தாக உறவாட விருந்தாக
மயிலிறகாய் வருடித்தா லாட்டும் !!
முற்றாத இளமையொடு குன்றாத பொலிவோடு
முத்தாக ஒளிவீசி மின்னும் !
முப்போதும் தப்பாமல் திக்கெட்டும் ஒலித்திருக்கும்
முத்தையா நின்பாக்கள் என்றும் !!
தெவிட்டாத பாசமைத்தாய் தினந்தோறும் பருகுகிறோம்
தீரவில்லை இன்னுமெங்கள் தாகம் !
தேமதுர மொழியினிலே தேவசுக மீட்டலிலே
தென்றலுக்கும் பிறவாதோ மோகம் ??
கவிமகனே! உன்படைப்பை மிஞ்சுதற்கு நீயிந்தக்
காசினியில் பிறப்பெடுப்பாய் மீண்டும் !
கவல்போக்கும் களிம்பாகிக் காயத்தை ஆற்றிவிட
கடவுளுனை இங்கனுப்ப வேண்டும் !!
செவிகுளிர இனுஞ்சொல்லி நம்பிக்கை ஒளியூட்டச்
சித்தனுன்றன் தத்துவமும் வேண்டும் !
திருநீற்றுக் கீற்றோடு நெற்றியிலே பொட்டிட்டுச்
சிறுகூடற் பட்டியானே வாராய் !!
புவியினிலே உன்புகழைப் பாடுவதே தன்பணியாய்ப்
போற்றிவாழும் அன்பருளர் பாராய் !
பொலிவான சிலைவைத்துப் பெரும்பேறாய் அதைநினைத்துப்
பூசிப்போர் பூரிக்க வாராய் !!!
சியாமளா ராஜசேகர்