நினைவு🦅
விடியாதென்று தெரிந்தும்
வீணாகிப்போன நாட்களவை
தொடராதென்று தெரிந்தும்
தொலைந்துபோன நாட்களவை
முடியாதென்று தெரிந்தும்
முயற்சித்த நாட்களவை
என்னினமே என்றெண்ணி
ஏங்கித்தவித்த நாட்களவை
விழுதுகள் வித்தாகி-மண்ணில்
புதைந்துபோன நாட்களவை
தமிழொன்று தரணியிலே
தானாண்ட நாட்களவை
தன் அரசொன்று தன்குடியை
தகர்த்திட்ட நாட்களவை
தாமதித்தால் தலையிலொன்று-இடியாக
விழுந்திட்ட நாட்களவை
புக்காராவுக்கும் சூப்பெர்சொனிக்கும்
பதுங்கு குழிகளமைத்த நாட்களவை
பள்ளி சென்ற பாதையிலே
யெற்றொன்று இரையிதென்று
பற்றைக்குள் பதுங்கியாங்கு
பயத்தோடு கழித்திட்ட நாட்களவை
ஊர்காவற்படையென்று அப்பாக்கள் சென்றுவிட
உயிரோடு வரவேண்டி உண்ண மறுத்த நாட்களவை
மாவீரர் நாளொன்று-மாங்குளத்தில்
வெகு சிறப்பாக நடந்திட்ட நாட்களவை
மக்களெல்லாம் பெருந்திரளாக-ஆங்கே
குவிந்திட்ட நாட்களவை
வித்துடலொன்று வருகுதென்று
மொட்டுக்கள் பிடுங்கி யாங்கு
மாணவர் நாம் மலர்வளையம்
தொடுத்திட்ட நாட்களவை.
அந்த நாட்களை யெண்ணி
யொரு நடை இந்த நாட்களில்
நகர்த்திச் செல்லும் நாட்களிவை!