நட்ட கல்லும் பேசுமோ உப்பிலிக்கல்
நட்ட கல்லும் பேசுமோ?:
3. உப்பிலிக்கல்
“என்ன தாத்தா, இன்னும் எவ்வளவு தூரம் போகனும். கால் ரொம்ப வலிக்குது” பேரன் முரண்டுபிடித்தான். “அவ்வளவுதாய்யா. அதோ அங்கே தெரியுதே பெரிய வேப்ப மரம், அதுக்கு பக்கத்திலே ஒரு மேடை இருக்குதா?, அங்கேதான் நாம போறோம்”. பேரனை ஒருவாறு சமாதானப்படுத்தினார் பெரியவர். அந்த இடத்தை அடைந்தவுடன் பேரன் மிகவும் சுறுசுறுப்பானான். மேடையில் இருக்கும் கல்லினைச் சுற்றி போர்வையைப் போல மூடியிருந்த காட்டுக் கொடிகளை கைகளால் விலக்கினான். ஒரு அழகிய வாலிபன் தன் இருகைகளாலும் ஒரு கட்டாரியை இறுகப்பற்றிக்கொண்டு வானத்தை நோக்கி பார்த்தவாரு இருந்தான். அவனருகில் புலியின் உருவம் இருந்தது. அருகில் இருக்கும் பாறைப் பிளவுகளில் தேங்கியிருந்த மழை நீரினை இருவரும் கைகளைக் குவித்து கோரி எடுத்து மேடையை கழுவித் துடைத்தார்கள். பையில் இருந்த மலர் மாலையை எடுத்து கல்லிற்கு சாற்றினார்கள். பேரனின் பிஞ்சுக் கைகளை தாத்தா தன் கைகளால் மெல்லக் குவித்து ஒன்று கூட்டி “நம்ம குலசாமிய்யா, மறுபடியும் நீங்க வெளிநாட்டிலிருந்து எப்போ இந்த தாத்தாவைப் பாக்க வருவீங்களோ எனக்குத் தெரியாது. நல்லா கும்பிட்டுக்கோய்யா. ரொம்ப துடியான சாமி. நீ என்ன வேண்டிக்கிட்டாலும் உடனே நிறைவேத்தும்” என்றார். இருவரும் மனதார வேண்டிக்கொண்டார்கள். களைப்பு நீங்க அருகில் இருக்கும் பாறை மேட்டில் படுத்துக்கொண்டு இரு கைகளையும் கோர்த்து பின் தலையில் வைத்து மேகங்கள் நகரும் வானத்தையே ரசித்துப் பார்த்தவாறு இருந்தார்கள்.
“இந்த ஊருக்கு ‘உப்பிலிக்கல்’னு எப்படி பேர் வந்திச்சுன்னு தெரியுமா?”. பேரன் உதட்டை பிதுக்கினான். “கதையா தாத்தா சொல்லப்போறே” என்று ஆர்வமாக தாத்தாவின் மார்பை அணைத்துக்கொண்டான்.
ஆதி மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் அவர்களின் வாழ்வியலில் இடைத்தொழிலிற்கே மிக முக்கியமான பங்கு இருந்தது. ஒரு கிராமத்தின் பொருளாதாரம் அங்கிருக்கும் ஆநிரைகளின் எண்ணிக்கையை வைத்தே தீர்மானிக்கப்பட்டது. ஒரு குழுவிற்கும் மற்றொரு குழுவிற்கும் பகை ஏற்படின் முதலில் எதிராளி குழுவில் இருக்கும் ஆநிரைகளை கைப்பற்றி வருவார்கள். பிறகு ஆநிரைகளை தங்களுக்குள் பங்கிட்டு கள் குடித்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.
இதையே பிற்காலத்தில் வெட்சிப் போர் என்றழைத்தார்கள். பகைவர்களின் ஆநிரைகளை கவருவதான இத்தகைய போரில் சிவந்த நிறமுடைய வெட்சிப் பூவை தலையில் அணிவது வழக்கமாக இருந்தது. இப்படியாக ஆநிரைகளை எதிராளியிடம் இழந்த குழுக்கள் தகுந்த பதிலடியாக அந்தக் குழுவினருடன் போர் தொடுத்து அவைகளை மீட்டுக் கொண்டு வருவார்கள். இதைத்தான் கரந்தை போர் என்றழைத்தார்கள். இரண்டு குழுக்களிடையே போர் நிகழும்போது ஒருவர் மற்றொருவரின் ஆநிரைகளை கவருவதும், அதை இவர்கள் மீட்டுக்கொண்டுவருவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. வெட்சியின் போர் முறைக்கு எதிரானது அல்லது மாறானது கரந்தை, அதாவது வெட்சி ஆநிரைகளை கவர்வது என்றால் கரந்தை அவைகளை மீட்பதாகும்.
இந்த நாளும் வழக்கமான நாளாகத்தான் இருக்கும் என்று உதயனன் எண்ணினான். காலை உணவருந்திவிட்டு நேராக குழுத் தலைவன் இல்லத்திற்கு சென்றான். அங்கிருக்கும் தொழுவத்தை முதலில் துப்புறவு செய்துவிட்டு பிற வேலைகளை வழக்கமாக மேற்கொள்வான். அன்று தொழுத்தை அடைந்தவன் அதிர்ந்து போனான். அங்கு உதயனனைக் கண்ட குழுத் தலைவன் “நம்முடைய ஆநிரைகளை யாரோ இரவோடு இரவாக கவர்ந்து சென்று விட்டார்கள். யாரென்று அறிந்து வரவேண்டும்” என்றான்.
இதைக் கேட்ட உதயனன் வெகுண்டெழுந்தான். “விரைவில் நான் கண்டறிந்து வருகிறேன்” என்று புறப்பட ஆயத்தமானான். தொழுவத்தில் நடப்பட்டிருக்கும் கூறான மூங்கில் கழியில் பட்டுக் கிழிந்து தொங்கும் வெள்ளை ஆடையை உதயனிடம் எடுத்துக் கொடுத்தான் தலைவன். வீட்டிற்கு சென்று அம்மாவிடம் கூற உணவருந்திவிட்டுப் போக வற்புறுத்தினாள். “ எனக்குப் பின்னே உன்னை யார் கவனித்துக்கொள்வார்கள். நீ விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் உதயா” என்று வழக்கமாக பெண்களின் பெயரை பட்டியலிட்டாள். உதயனன் கோயிலில் பூவிற்கும் செண்பகத்தின் ஒரே மகளான குழலியுடன் ஒரு தலைக் காதல் இருந்தது. இதை யாரிடமும் அவன் பகிர்ந்துகொண்டதே இல்லை. ஒரு தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான். “ அதற்கென்னம்மா அவசரம். நான் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்போது நான் வெகுதூரம் ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.” என்றான். தாயிடம் தலைவனின் தொழுவத்தில் நடந்த அனைத்தையம் கூறிவிட்டு அவளின் ஆசீர்வாதத்துடன் உதயனன் தன் பயணத்தைத் தொடர்ந்தான். குழலியைப் பார்ப்பதற்காகவே கோயில் வழி சென்றான். வழக்கமான புன் சிரிப்புடன் அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவளும் என்னைப் போல காதலிக்கிறாளா இல்லையா என்ற மனப் போராட்டத்துடன் மேற்கு நோக்கி பயணித்தான்.
மூன்று நாட்கள் ஆகியும் எந்தச் செய்தியும் உதயனனிடமிருந்து வரவில்லை. குழுத்தலைவன் உதயனின் பாதுகாப்பு கருதி யாரையாவது அவனுடன் அனுப்பாதது குறித்து மிகவும் விசனப்பட்டான். நான்காம் நாள் காலை உதயனன் வந்தான். அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். தெற்கில் இருபது கல் தொலைவில் ஒரு குழு ஆற்றங்கரையில் கூடாரம் அமைத்திருப்பதாகவும், அவர்கள் சந்தனம் தோய்த்த மஞ்சள் நிறத்தில் காணப்பட்டார்கள் எனவும், வெண்மையான உடையை அணிந்திருப்பதாகவும், அகன்ற நெற்றியுடன், நீண்டு கேசங்ககளை உடையவர்களாக இருந்தார்கள் என்றும் கூறினான். அவர்களின் தலைவன் மற்றவர்களைப் பார்க்கிலும் அதிக உயரமுள்ளவனாய் காணப்பட்டான் என்று கண்கள் விரிய ஆச்சரியத்துடன் கூறினான்.
குழுத்தலைவன் அன்றிரவே அவர்களை எதிர்த்து ஆநிரைகளை மீட்டுக்கொண்டு வர தீர்மானித்தான். குழுத்தலைவன் தனக்கு மிகவும் நெருக்கமான வீரர்களுடன் உதயனையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான். திரளாக மக்கள் சாலையின் இருபுறமும் நின்று அவர்களை வழியனுப்பினார்கள். தலைவன் தாங்கள் மேற்கொள்ளும் பயணம் குறித்து ஏதாவது ஒரு நல் வாக்கு கேட்காதா என்று மக்கள் பேசுவதை மிக உன்னிப்பாகக் கேட்டான். நல் வாக்கு எதுவும் தனக்கு கேட்காததால் கலக்கமுற்ற தலைவன் கிராம எல்லையை சோகத்துடன் அடைந்தான். ஏதோ ஒரு பெரிய வெற்றிடம் நிறப்படாமலே இருந்தது போல அவனுக்குத் தோன்றியது. அப்போது சாலை ஓரத்தில் இருந்த ஆல மரக்கிளையில் தொட்டிலை ஆட்டிக்கொண்டே ஒரு பெண் தாலாட்டு பாடிக்கொண்டிருந்ததைக் கேட்டான்.
மஞ்சள் வெய்யில் ஆடை நெஞ்சு
மரகத பூவெடுத்து
தலைவன் வந்திடுவான்
கண்ணயறு கண்ணயறு
செல்லக் கொழுந்தே;
பிஞ்சு மவ பாதத்திலே
கோடி முத்தம் கொடுத்திடவே
பட்டத்து யானையிலே
மன்னனவன் வந்திடுவான்
கண்ணயறு கண்ணயறு
முல்லைக் கொழுந்தே
இதைக் கேட்ட தலைவன் மிகுந்த உற்சாகத்துடன் தன் பயணத்தைத் தொடர்ந்தான். இரண்டு நாட்கள் கழித்து பொழுது புலரும் நேரம் ஆற்றங்கரையை அடைந்தார்கள். ஆற்று வெள்ளத்தில் காலைக் கதிரவனின் ஒளி பட்டுத் தெறித்து அனைவரின் கண்களையும் கூசச் செய்தது. அப்போது ஒருவன் அருகில் இருக்கும் உயரமான மரத்தில் ஏறிக்கொண்டு உரக்கக் குரல் எழுப்பினான். “கூடாரம் தெரிகிறது, அவர்களின் கூடாரம் தெற்கில் தெரிகிறது”. இதைக் கேட்ட தலைவனும் வீரர்களும் கோட்டை மதிலை எதிர்த்துப் போராடும் யானையின் பலத்துடன் கூச்சலிட்டுக்கொண்டே கூடாரம் இருந்த திசையை நோக்கி விரைந்தார்கள்.
எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைதடுமாறிய கூடார மக்கள் ஆற்றின் அக்கரையிலிருக்கும் ஆநிரைகளை வேகமாக அவிழ்த்துவிட்டார்கள். இதையறிந்த உதயனன் வானத்தில் இருந்து பூமிக்கு விரையும் எரி நட்சத்திரம் போல நொடியில் ஆற்றினில் குதித்து அக்கரையை அடைந்தான். தனி ஆளாக நின்று ஆவேசத்துடன் அவர்களை எதிர்த்துப் போராடினான். தங்களின் ஆநிரைகளுடன் அவர்களுடையதையும் மீட்டு அவைகள் மீண்டும் கலைந்து சிதறி ஓடாமல் இருக்க அனைத்தையும் ஒன்றுடன் மற்றொன்றை கயிற்றால் இறுகக் கட்டினான். இதை ஆற்றின் கரையிலிருந்து கவனித்த குழுத்தலைவன் உதயனிடம் வீரர்களுடன் அக்கரைக்கு வருவதாக கையினால் செய்கை செய்தான். தலைவனைத் தொடர்ந்து அவனுடன் வந்த வீரர்களும் அவனுடன் ஆற்றில் குதித்தார்கள். அப்போது எழுந்த இரைச்சலைக் கேட்டு அச்சமுற்ற கூடாரமக்கள் உயிருக்குப் பயந்து நீண்டு கலைந்த பிடறி மயிர் உள்ள உயரமான குதிரைகளின் மீதேறி தப்பித்துச் சென்றார்கள்.
ஒருவழியாக அனைத்து ஆநிரைகளையும் மீட்ட வீரர்கள் உற்சாக மிகுதியால் ஒரு சிலர் தலைவனை வாழ்த்திப் பாட, ஒரு சிலர் கள் அருந்தி களித்திட, வெற்றியைக் கொண்டாடினார்கள். வீரர்கள் ஒன்று கூடி உரத்த குரலில் பாட தூரத்தே இருக்கும் மரங்களிலிருந்து பறவைக் கூட்டங்கள் பதற்றத்துடன் திசை மாறிக் கலைந்து பறந்தது. உதயனனின் தலைமையில் அனைத்து ஆநிரைகளும் முன்னால் போய்க்கொண்டிருந்தது. ஊருக்கு சென்றவுடன் முதலில் குழலிக்கு தன் காதலை கூறிவிட தீர்மானித்திருந்தான். அம்மாவிற்கும் இது இன்ப அதிர்ச்சியாய் இருக்கும் என்று நினைக்க அவனுக்கு மேலும் மகிழ்ச்சியாய் இருந்தது.
கூட்டங்களாக ஆநிரைகள் உதயனின் கண்காணிப்பில் முன்னே செல்ல படை வீரர்கள் குழுக்களாக பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் அவைகளைத் தொடர்ந்தார்கள். அம்மாவாசை கடந்து ஒன்பதாவது நாள். சீரற்ற ஆநிரைகளின் தொடர் குளம்பொலிகள் இரவின் அமைதியை மெதுவாக மென்று தின்றது. வளர் பிறை நிலவின் அரை வெளிச்சத்தில் பளபளக்கும் கூரிய கொம்புகளைக் கண்ட மேகங்கள் சிதறி ஓடியது. திடீரென்று வினோதமான சப்தத்தைக் கேட்ட ஆநிரைகள் மிரள உதயனன் அவைகளின் அருகில் சென்றான். எதிரில் இருக்கும் புதரில் இரண்டு பளிங்குக்கண்கள் மின்னலென ஒளிர்ந்தது. புதரின் பின் அரவமின்றிச் சென்ற உதயனன் அதன் மேல் அம்பெய்த, புலி ஒன்று வேகமாக புதரிலிருந்து வெளியேறி அவனையே உற்றுப்பார்த்தது. உதயனனும் தைரியமாக புலியை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். மெல்ல ஒரு அடி வைத்து முன்னேறிய புலி தன் முழு பலத்தையும் சேகரித்து உதயனின் மேல் பாய, அவன் நிலை தடுமாறி கீழே சரிந்து வீழ்ந்தான். படுத்துக்கொண்டே இரு கைகளாலும் கூறிய காட்டாரியை இறுகப் பிடித்து வானத்தை நோக்கி உயர்த்தினான். அவன் மேல் பாய்ந்து சென்ற புலியின் மார்புப் பகுதியில் இருந்து வயிற்றுப்பகுதி வரை கட்டாரி கீறிப் பிளக்க புலி ஒரு சிதைந்த குவியலாக சிறிது தூரத்தில் விழுந்தது. சுதாரித்துக்கொண்டு எழுந்த உதயனனை பின்னாலிருந்து மற்று மோர் புலி தாக்க தரையில் குப்புறச் சரிந்தான். உதயனன் சுய நினைவிற்கு வருவதற்குள் அவனின் தலையைக் கவ்விக்கொண்டு இழுத்துச் செல்ல எத்தனிக்க, படைவீரர்கள் குரல் கொடுத்துக்கொண்டே விரைந்து அங்கு வந்தார்கள். அவர்களின் தொடர் அம்புப் பாய்ச்சலில் பலத்த காயங்களுடன் தப்பி ஓடியது புலி. முகம் முழுவதும் காயங்களுடன் உயிருக்குப் போராடிய உதயனன் தலைவனை அழைத்தான். அவனுடைய கைகளை இறுகப் பற்றியவன் ஒன்றும் கூறாமல் நிரந்தரமாகக் கண் மூடினான்.
அந்த இடத்திலேயே உதயனின் உடலைப் புதைக்க ஏற்பாடானது. வீரர்கள் உதயனின் உடலை குழியில் வைத்து மண் மேவிய பிறகு அருகில் இருக்கும் கற்களை குவியலாகச் சேர்த்து மேடை அமைத்தார்கள். தலைவன் தன் கையிலிருக்கும் வேலினை அந்த மேடையில் நட்டு, தன் கேடயத்தை அதில் கட்டினான். அதைக் கவனித்த சில வீரர்கள் தங்களின் வேல்களையும் நட்டு கேடயத்தை அதில் கட்டினார்கள். அமைதியாக அந்த இடத்தைக் கடந்து வெகுதூரம் அவர்கள் சென்றாலும் காற்றில் கேடயங்கள் ஒன்றுக்கொன்று மோதும் ஒலி அவர்களுக்குக் கேட்டுக்கொண்டேயிருந்தது.
அவன் இறந்த இடத்தில் மேடை அமைத்து அங்கே அவன் உருவம் பொறித்த வீரக்கல்லை ஊர் மக்கள் நிருவினார்கள். பல தலைமுறைகளாக உதயனன் இறந்த நாளில் வீரக்கல்லிற்கு முதல் மாலை குழலி மற்றும் அவளின் வாரிசுதாரர்களே ஏற்று நடத்தினார்கள். உதயனின் அளப்பறிய தியாகத்திற்கும், ஈடற்ற விசுவாசத்திற்கும் நன்றி கூறும் பொருட்டு தலைவன் ஊருக்கு “உதயனன் புலிக்குத்திக் கல்” என்று பெயர் மாற்றம் செய்தான். நாளடைவில் அந்த கிராமத்தின் பெயர் மறுவி அதுவே உப்பிலிக்கல் என்றானது.
அருகில் இருக்கும் உயரமான மரத்தில் அந்தச் சிறுவன் வேகமாக ஏறி உச்சிக்குச் சென்றான். அதைக் கண்ட தாத்தா செய்வதறியாது “டேய், உதயா, கீழே இறங்குடா. அடிபட்டுடப்போவுது” என்று பதறினார். உச்சிக்கிளையில் கம்பீரமாக இடது கையை இடுப்பில் வைத்துக்கொண்டு மறுகையால் மரக் கிளையைப் பிடித்துக்கொண்டு கீழே நின்ற தாத்தாவைப் பார்த்த சிறுவன் “கூடாரம் தெரிகிறது, அவர்களின் கூடாரம் தெற்கில் தெரிகிறது ” என்று கூறி சப்தமாகச் சிரித்தான்.