பொன்னியின் செல்வர்

சரித்திரத்தைப் புரட்டிப்போடும் நாயகர்களால்தான் சரித்திரம் திருப்பிப் பார்க்கப்படுகிறது

வீரமிக்க நேசத்தை விவேகமிக்க ராஜகாரியங்களின் சூதனப்போக்கோடு நிதானித்து வெளிப்படவைக்கும் சமரசமற்றக் காதலின் ஏகாந்த எதிர்பார்ப்பை இறுதிவரை இட்டுச் செல்கிறது

பிற்கால மன்னர்களும் பேரரசர்களும் பின்பற்றும் வகையில் ராஜ்ஜிய நெறிகளையும்… ராஜதர்மங்களையும் அன்றே மேம்படுத்தி சென்ற ஓர் ஈடிணையற்ற சக்கரவரத்திக்காக பத்து நூற்றாண்டுகள் கடந்துவிட்டன.

.ஆளும் ஆகிருதித் திறனும், அரசாளும் உரிமையும், ஆளப்படவேண்டும் என்ற விருப்பம் குடிகளிடமும் இருந்தும் மணிமகுடக் கனவுகளில் சாமரம் சூழ செங்கோல் வீசி நடக்காத ராஜநெறிக் காத்த அரச ஞானி்யின் ஆத்மார்த்தம்
நாவலெங்கும் நகர்ந்து செல்கிறது

நான்காவது அத்தியாயத்தில் போட்ட முடிச்சு நானூறாவது அத்தியாயத்தில் அவிழ்க்கப் படும்வரை சுவாரஸ்யமாய் காத்திருந்து விறுவிறுப்பாய் வாசிக்கும் வண்ணம் நிகழ்வுகளின் ஞாபகங்களில் சோரம்போகாதபடி நினைவுகளை உயிர்ப்பாய் வைக்கின்றன பத்திகள்...

தூயக் காதலைத் துய்க்கும் ஒரு வீரனை ஒழுக்கம் பிசகாமல் வழிநடத்திச் செல்லும் காலம், காலங்கள் கடந்தபின்னும் காதலை உயிர்ப்பாய் வைத்திருக்கிறது

கிறங்கவைக்கும் காதல் உணர்வுகளில் நட்பின் மேலாண்மையை புகட்டி
கண்ணியத்தோடுக் கடக்கும் ஏகாந்த தனிமைவெளிகள் படிப்பிக்கும் மானுடப் பாங்குகள்….நம் ஆசாபாசங்களை சுத்திகரித்துப் போகின்றன.

காதல்வயம் எடுபடாதபோதும் சூழ்ச்சிகளின் நயவஞ்சக வலையிலிருந்து
அபிமானத்துக்குள்ளானவர்களை காப்பாற்ற முனையும் வெகுளி நேசத்தின் புலப்பாடுகள் துரோகச் சித்தாந்தங்களை பழித்தவாறு கடக்கின்றன.

சந்தர்ப்பங்கள் கிடைத்தும் பழிவாங்கப்படாத தன் காதலன் மீது எதிராளிக் கொண்டிருக்கும் காதல் அவாவை காதலி அவனுக்கு தெரிவிக்கும் தொனியில் நம்முள் கிளர்ந்தெழும் ரசபாசங்களீல் மென்மேலும் மேன்மையடைகிறது காதல்

‘இந்தக் காதல் அங்கீகரிக்கப்படாமல் போகிறதே!’ என ஆரம்ப அத்தியாயங்களில் அங்கலாய்க்கும் வாசகர்களை அப்படி ஆகாமல் போனதுதான் சரி என்று ஏற்கும் படி பின்வரும் அத்தியாயங்களில் சமரசங்களுக்கு வழிகோலும் சரிநிகர் நிகழ்வுகள் நடப்புகளாக்கி நகர்கின்றன.

நாயகத்தன்மையின் பரிமாணங்களுக்கு ஏற்ப உள்வாங்கிப் பிரதிபலிக்கும் ராஜ்ஜிய பரிபாலனைகளால் நிலைநாட்டப்படும் அரசுடமை செயல்பாடுகளுக்கு
மேற்கோளாகும் வள்ளுவ நெறிகள் நாவலை செழுமைப்படுத்திப் போகின்றன

அதிவேகப் பொழுதுபோக்குகளுக்கு அளவில்லாப் பங்களிக்கும் சமூக வலைதளங்களில் திளைக்கும் மூன்றாம் தலைமுறையினரையும் சரித்திரப் பூர்வமாய் ஈர்த்து வாசகச் சாலையில் வசீகரமாய் பயணிக்க வைக்கிறார், பொன்னியின் செல்வர்

சிலர் கூற்றுப்படி...
நாவல் சார்ந்த சரித்திர ஆய்வுக் சமர்ப்பிப்புகளில் வரலாற்று நிகழ்வுகள் முரண்பட்டு நிற்கட்டும்
சில பாத்திரங்கள் செயற்கையாக உருவானதாகவே இருக்கட்டும்
அன்னியோன்ய உறவுகள் யாவும் சித்திரிப்பாகவே இருக்கட்டும்
சக்கரவர்த்தியின் பேராண்மை மிகைப்படுத்தப்பட்டதாகவே இருக்கட்டும்
இப்படியொரு வரலாறு இல்லலே இல்லை என்று கூட கூறட்டும்.

பதிலாகக்கடவது...
‘தேவைப்பட்டால், “பொன்னியின் செல்வனை”- ஒர் மனப்பூர்வ கற்பனை நாயகனாக ஏற்றுக்கொண்டு சிலாகிக்க தயாராயிருக்கும் எங்களுக்கு வரலாற்றுச் சுவடுகளின் கூரிய ஆய்வுகளின் அவசியமில்லை.’

**************************

எழுதியவர் : யேசுராஜ் (11-Nov-19, 4:33 pm)
சேர்த்தது : யேசுராஜ்
பார்வை : 85

மேலே