பண்டிதராய் வாழ்வார் பயின்று – ஏலாதி 9

நேரிசை வெண்பா

கற்றாரைக் கற்ற துணரா ரெனமதியார்
உற்றாரை யன்னண மோராமல் – அற்றார்கட்(கு)
உண்டி யுறையுள் உடுக்கை யிவையீந்தார்
பண்டிதராய் வாழ்வார் பயின்று. 9 ஏலாதி

பொருளுரை:

கற்று வல்ல சான்றோரை தாம் கற்ற கல்விப் பொருளை அறியமாட்டாரென்று நினைக்காமலும்,

உறவினரையும் அவ்வகையாக அன்பில் உயர்வு தாழ்வுகள் எண்ணாமலும்,

பொருளற்ற வறிஞர்க்கும் உணவும், மருந்தும், இடமும், உடையும் என்றிவற்றைக் கொடுக்கின்றவர்கள் அறிஞர்களாய் யாவரானும் மதிக்கப்பட்டு இனிது வாழ்வார்கள்.

பொழிப்புரை: கற்றாரைக் கற்றிலரென்று மனதிற் கொள்ளாமல், உற்றாரையும் உற்றார் அல்லரென்று கொள்ளாமல், பொருளற்றார்க்குணவும், மருந்தும், உறையிடமும், உடுக்கையும் பயின்று கொடுத்தார் அறிவுடையாரென்று பிறரான் மதிக்கப்படுவர்.

கருத்து: பிறரெவரையும் தாழ்வென்று கருதாமல் அற்றார்க்கு வேண்டுவன உதவுவார், அறிவுடையராய்க் கருதப்படுவார்.

உற்றாரையும் அற்றாரையும் இரட்டுற மொழிந்துகொள்க. அன்னவண்ணமெனற்பாலது அன்னணமென மரீஇயது.

உண்டி - உண்: பகுதி, உறை - மருந்து; உள்: இடம்; உறை + உள் எனப் பிரிக்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Nov-19, 10:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

மேலே