மீனவ வாழ்வின் அவலங்கள்

விடியலைத்தேடும் மீனவர் வாழ்வின் அவலங்கள் அறிவோமா?
அவர்தம் படும் துயரங்கள் கொஞ்சம் கேட்போமா...
கரிக்கும் நீரின் நிஜம் எது என தெரிவோமா...
மீனவர் நிலையெண்ணி கடலன்னை விட்ட கண்ணீரென புரிவோமா..?

உப்புக்காற்றின் குளிர்எங்கள் உடலினை வாட்டுது...
தாயுள்ளம் கொண்ட கடல்தான் எங்கள் நம்பிக்கையைகூட்டுது...
சுழன்றடிக்கும் சூரைக்காற்று மன உறுதியை சோதிக்குது...
குடும்பத்தின் வறுமையோ பொழப்பை பார்க்க தூண்டுது...
ஒரு சான் வயிற்றுக்காக உயிரைவைத்து பயணமே...
தாண்டவம் ஆடும் அலைகளினூடே தினமும் போராட்டமே...

விடியலைத்தேடும் மீனவர் வாழ்வின் அவலங்கள் அறிவோமா?

நீண்டகடல் தூரபயணம் செல்கிறோம்....
ஏக்கமுடன் வறுமைபோக்க ஈரவலை வீசுறோம்....
மீனுக்காக காத்திருந்து காலம்கடந்து வாடுறோம்...
ஏமாற்றங்களை பிடித்தே கருக்கலில் கரையும்வந்து சேர்கிறோம்....
ஆடும் அலையில் தத்தளிக்கும் ஓடம் போலவே....
தினம் கண்ணீரில்கடலில் தத்தளிக்கும் எங்களின் வாழ்வே...

விடியலைத்தேடும் மீனவர் வாழ்வின் அவலங்கள் அறிவோமா?

ஆழிதூரம் சென்றவன் விடியுமுன் திரும்பனும்...
கொண்டவளும் குடும்பமும் வேண்டி நிற்கும்...
கடலன்னை தரும் வளங்களை கூடிப்பேசி குறைந்த விலைக்கு...
பிச்சித்தின்ன பிணந்தின்னி கழுகுகளும் காத்திருக்கும்...
உழைப்பின் முழுபலன் என்றும் எங்களுக்கு எட்டாக்கனிதானோ..?
வறுமையற்ற வாழ்வு என்றும் எங்களுக்கு கானல்நீர்தானோ..?

விடியலைத்தேடும் மீனவர் வாழ்வின் அவலங்கள் அறிவோமா?

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (13-Nov-19, 5:23 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 934

மேலே