முயற்சி செய்

மனிதா
தோல்வி புவிக்கு வந்த புது சொல்லல்ல;
முயற்சி செய்...
தோல்வி வெற்றியின் எதிர்ச்சொல்
என்பதே கல்வி உரைப்பது;
அது அனுபவத்தின் இணைச்சொல்
என்று கருதுவது பிழையாகாது.

பிறக்கும் முன்னே
உயிரணு போரில் வென்றே
தாயின் கருவறை அடைகிறோம்;
புவியில் வந்த பின்போ
சிறு தோல்வி கண்டு
ஏன் சோர்வடைகிறோம்.

ஏளனச்சிரிப்பு எரிக்கவரும்
சிறு புன்னகையால் அணைத்துவிடு;
அவமானம் தினம் உன்னை காணவரும்
'விருந்தோம்பல்' இதில் மட்டும் தவிர்த்திடு;
தோள் கொடுக்க சில மனிதர்களும்
இப்புவியில் உண்டு
அவருடன் இணைந்திடு.

உனக்கான பயணம் தேர்ந்தெடு;
அதற்கான பாதையை உருவாக்கு;
பயணச் சுமையை எண்ணி
நீ பயந்து விடாதே;
தன் எடையில் பலமடங்கு
சுமையை சுமக்கும் அந்த எறும்பு
அதை மறந்துவிடாதே.

இருகரம் இன்றி
கவி எழுதுவோர் உண்டு;
சுயமாய் நகரமுடியாமல்
இப்பிரபஞ்சம் அளப்போர் உண்டு;
சில உறுப்பு இணங்க மறுத்தால்
பிறஉறுப்பிற்கு கூடுதல் பொறுப்புகொடு.

உலகை உன் பெயரை
ஒப்பிக்கசெய்;
கரையில் எழுதும் எழுத்து
அலையில் அழிந்து போகக்கூடும்;
வான்திரையில் எழுதி விட்டால்
இந்த புவியே பார்க்ககூடும்.

முயற்சிசெய்...

எழுதியவர் : முத்துக்குமார் ஆ (14-Nov-19, 3:33 pm)
Tanglish : muyarchi sei
பார்வை : 2082

மேலே