கடந்துதான் போகிறேன்
கடந்துதான் போகிறேன்
-----------------------------------
நடக்கும் வழியெங்கும்
நான்மட்டுமல்ல
என்னைப் போல்
எத்தனையோ உயிரினங்கள்
நகர்ந்து கொண்டுதானிருக்கின்றன
எனக்குத் தேவையற்றவை
என்பதாலோ அவற்றைக் கண்டுகொள்ளாமல்
கடந்துதான் போகிறேன்..!
படித்த மேதையென்றேபலரும்
தன்னை மெச்சிக்கொண்டு
நடித்தே வாழ்ழுகின்ற
நாகரீகக்கூட்டம் கண்டும்
கடந்துதான் போகின்றேன்..!
கல்வியிலே தன்னிறைவாம்
காது புளிக்கிறது
வாழ்க்கையைப் படித்தோரை
வழிநெடுகிலும் தேடினேன்
ஒருவரையும் காணவில்லை
கடந்துதான் போகிறேன்..
தாங்கிச் சுமக்கும் பாவத்திற்காக
பூமியின்மீது மலமும் மூத்திரமும்
மட்டுமன்றி காறியுமிழ்ந்த கோழையாலும் அர்ச்சனைகள்
சமுதாயச் சாக்கடையில் விழுந்து
உணர்வுகளும் அழுகிப்போய்
துர்நாற்றம் வீசும்போதும் மூக்கில்லாத மூலியாய்க்
கடந்துதான் போகிறேன்..!
இங்கே யாருக்கும் புத்தியில்லை
யாருக்கும் மனிதம் இல்லை என
அறிவுரைகளை மட்டும்
வழங்குகின்ற அறிவாளியாக
நான் கடந்துதான் போகிறேன்
நமக்கென்ன என்றவாறு..!