அன்புத் தந்தைக்கோர் அணியாரம் பல்சுவை மெட்டுப்பாடல்கள்
ஒவ்வொரு அன்னையும் குழந்தையாகிய நம்மை ஐயிரண்டுத் திங்கள் தன் மணிவயிற்றில் சுமந்து ஈன்று பல தியாகங்களை நல்கித் தன் வாழ்வின் இறுதி நாள் வரை நம்மைப் பற்றிய நினைவிலேயே வாழ்ந்து வருகிறாள்.
அதைப்போல் நம் தந்தையும் நம்மைத் தன் நெஞ்சினிலும் தோளினிலும் சுமந்து நம் பொருட்டுப் பல பொறுப்புகளை ஏற்று, தன் ஆயுளையே நமக்காகச் செலவழிக்கின்றார் என்றால் அது மிகையாகாது.
அத்தகைய தந்தைக்கு, அவர் எனக்கு அளித்த கல்வியால், சில கவிமணிமாலைகளைக் காணிக்கையாக்குகிறேன்.
கந்தர் சஷ்டிக் கவச மெட்டுப் பாடல் அன்புத் தந்தைக்கு அன்புக் காணிக்கை )
காப்பு
துதிப்பாடி மகிழ்ந்திடுவேன்....
துயர்தன்னை தினம் தவிர்த்தே காத்திடவே வந்தருள்வாய் என்று
நிச்சயம் நம்பிடுவேன்....
திடமுடனே...அன்புத்தந்தை உன் மலர்த்தாள்
வணங்கி தினம் போற்றி வாழ்த்தி பணிந்திடுவேன்
வருவாய் ..... வந்தருள்வாய்....
பாடல்
தந்தையே உந்தன் தாள்மலர் பணிந்தேன்
தருணம் எம்மைக் காத்திட வருவாய்
தளரா மனம் கொண்டு செயல் புரிய அருள்வாய் தமிழிசைப் பாடி உன் மலரடி பணிவேன்
பைந்தமிழ்ப் பாவால் நாளும் போற்றி
பாதமலர் தனை வேண்டிப் பணிவேன்
பாசம் மிகுந்த என் அன்புத் தந்தையே
பாங்காய் பணிந்தே பணிவுடன் போற்றுவேன்
வண்ணமலர்க் கொண்டு வணங்கித் துதிப்பேன்
எண்ணம் தனிலே ஆடிப் பாடி
திண்ணமாய் உந்தன் செயல் திறம் போற்றி
உண்மையாய் உருகிப் பாடிப் பணிவேன்
சகல நலங்கள் தந்தருள் தந்தையே
சந்ததம் தொழுதிடும் எங்களுக்கென்றும்
சர்வமுமாய் இருந்தே காத்தருள் புரிவீர்
சரணக் கமலம் பாடி மகிழ்வேன்
அனுதினம் எந்தன் அன்புத் தந்தையுன்
அருமை பெருமை போற்றிப் பரவி
ஆயிரமாயிரம் பாமலர் தொடுத்தே
அணையா விளக்கேற்றி அகம் மகிழ்ந்திடுவேன்
வந்தனைப் புரிந்தே வாழ்த்திப் பாடி
வழிபடும் உம்மகள் எம்மைக் காப்பாய்
வருக வருக என் அன்புத் தந்தையே
வாழ்த்துக்கள் கூறி வரமருள் புரிவாய்
வையகம் வானகம் ஈரேழ் உலகம்
எங்கும் எதிலும் நிறைந்தருள் புரியும்
கருணைக் கடலே காருண்ய மூர்த்தி
கருத்தினில் நிறைந்தே காத்தருள் புரிவாய்
இன்பத் தமிழில் இன்னிசைப் பாடி
இதமாய் பதமாய் இன்முகத்துடனே
இயற்றமிழ் பாடி இனிதாய்ப் போற்றி
இதயம் தனிலே மகிழ்ந்தே வாழ்த்துவேன்
செந்தமிழ்த் தேனால் உன்புகழ் போற்றி
செவிமடுத்திடவே இசைத்திடுவேன் நான்
செயல்கள் யாவிலும் வெற்றித் திகழ
செம்மையாய் வாழ்த்துவீர் என் அன்புத் தந்தையே
மெத்தவே உந்தன் புகழிசைத்திடுவேன்
மென்மை மலரால் மலர்ப்பதம் போற்றி
மேன்மை மிகுந்திடும் அன்புத் தந்தையே
மேதினியில் நான் உன்புகழ் இசைப்பேன்
சுந்தரத் தமிழால் சுவைபடப் பாடி
சுகந்த மணம் பரப்பி சுடரொளி ஏற்றி
சுகபோகம் நீக்கி சுத்த மனத்துடன்
சுற்றி வலம் வந்தே திருவடி தொழுவேன்
நறுமண மலரை நாளும் சூட்டி
நவிலும் பாடல் நயமுடன் ஏற்பாய்
நாளும் எம்மைக் காத்திட வருவாய்
நாதம் இசைத்தே நான் மகிழ்ந்திடுவேன்
சரணம்
வேதனைத் தீர்க்கும் கருணைக் கடலே
வேண்டி உன் மலரடி தினமும் போற்றி
வெற்றி நலன்கள் விரைவாய்ப் பெறுவேன்
வந்தனை கூறி வழிபடுவேன் நான்
பற்றினை அழித்து உன் பதமலர் நாடி
பணிவுடன் போற்றி பாங்காய்த் தொழுவேன்
ஜெய ஜெய என தினம் போற்றித் தொழுவேன்
ஜெயமே எதிலும் பெருவேன் திடமாய்......
பாடல்கள்:
1. கேள்வியின் நாயகனே – மெட்டுப் பாடல்
பாசம் மிகும் தெய்வமே...... –உந்தன்
பதமலர் போற்றி நின்றேன்......
பலநூறு கவிபாடி... பாமலை தினம் சாற்றிப்
புகழாரம் சூட்டிடுவேன்... உனக்கே...
புகழாரம் சூட்டிடுவேன் (பாசம்)
தயையே உந்தன் புகழ் பாடிடவே –நாளும்
தஞ்சம் அடைந்தேனே...... உந்தனிடம் – என்
தந்தையே எனை நீயே... ஆட்கொள்ள
தருணம் இதுவே நீ வந்தருள்வாய்..... (3 முறை) (பாசம்)
பலனை எதிர்ப்பாரா பெருந்தகையே.... – நீ
பண்பில் உயர்ந்து நின்ற நவ நிதியே.....
சரணங்கள் பல உனக்கே ஏற்றருள்வாய் – அப்பா
சடுதியும் மறாவாது காத்தருள்வாய்....(3 முறை) (பாசம்)
2 மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் –
மெட்டு
தன்னலம் கருதா தயையே உன்னைப் போற்றி நின்றேன் – தினம்
தாள்மலர் போற்றியே உன் திருவருள் வேண்டியே வாழ்த்தினேன் – என்
சிந்தையில் மேவிடும் அன்புத் தந்தையே உந்தனின் – உயர்
சீர்புகழ் போற்றிப் பாடிடவே நான் விரைந்து வந்தேன்.
ஆ................ ஆ................ (தன்னலம்)
பொன் பொருள் பேர்புகழ் யாவும் எனக்கே நல்கினாய் – உன்
கண்ணின் மணியென எந்தனை நாளும் பேணினாய் – தமிழ்ப்
பண்ணால் உன் மனம் குளிர்ந்திட என்றும் வாழ்த்தவே – தினம்
தண்ணளி செய்வாய் தயை நீ எனக்கே நாளுமே
ஆ................ ஆ................ (தன்னலம்)
செம்மொழிச் சுடரே செந்தமிழ்த் தேனே உந்தனின் – பல
செம்மை மேவிய புகழினைப் போற்றியேப் பாடினேன் –எந்தன்
அன்புத் தந்தையே அகமதில் நிறைந்திட்ட பெருந்தகையே –உந்தன்
அடிமலர் பரவவே வாழ்த்தருள் புரிவாய் ஐயனே....
அப்பா........................அப்பா......................அப்பா......................அப்பா...........(தன்னலம்)
3. வெற்றிவேல்... வீரவேல்..... மெட்டு
தந்தையே.... வந்தனம்... -உன்
தாள்மலரை மகிழ்வுடன் தினம் போற்றுவேன்
ஆதி அந்தம் யாவும் எனக்கு நீயப்பா..
அன்றும் இன்றும் என்றும் எங்களைக் காத்தருள்
பாசம் மிகுந்த அன்புதந்தை நீயப்பா....
பண்புடன் உன் பதமலர் தனைப் போற்றுவேன்(தந்)
அன்புகொண்டு அருளைவேண்டி அனுதினமும் போற்றுவோர்.....
அகமதனில் நிறைந்து அவரைக் நாளும் நாளும் காத்தருள்...
எங்கனுமாய் நிறைந்து நின்று இன்னருளைப் பொழிந்தருள்.....
ஏற்றமான வாழ்வு மலர இனிதுடனே... காத்தருள்....(தந்தையே....
--------------------------
4. மலரே....... மௌனமா......(மெட்டு)
தந்தையே...... வருவாய்......... -உன்
அருளே......தந்தெனைக் காப்பாய்......
பாதம்...... பணிய...... பல பாமலர் தினம் சூட்டுவேன்(த)
நாளும் நாளும் எனை தோளில் சுமந்து வளர்த்தாய்...
நாடி நாடி நலம் தேடி தேடித் தந்தாய்.....
உயிரின் உயிராய் எனை நீ நினைத்தாய்...
உந்தன் பாத மலர் தனைப் போற்றுவேன்.... (த)
கல்விச் செல்வமென யாவும் தேடித் தந்தாய்....-நான்
பேரும் புகழும் பெற ஓடி ஓடி உழைத்தாய்....
கலைகள் பலவும் கவினுறக் கற்க...
கருத்தாய் அறம்பல செய்திட்டாய்....(த)
--------------------
5. நீலக் கடலின் ஓரத்தில்-(மெட்டு)
தன்னலம் கருதா பெருந்தகையே...
தாள்மலர் பணிந்தேன் அனுதினமும்
தூயவனே உன் புகழ் பாடி
தொழுவேன் என்மனக் கோவிலிலே(த)
நல்லறம் பலவும் எம் பொருட்டு
நானிலம் தனிலே இயற்றி நின்றாய்
நாளும் நாங்கள் நலம்பெறவே
நாடிப் புரிந்தாய் பலபணிகள்
பாசம் கொண்ட பெருந்தகையே
பலவாய் உன்னைப் போற்றிடுவோம்
பைந்தமிழ்ச் சரத்தால் அனுதினமும்
பாமலர் பலவும் சூடிடுவோம்
வெள்ளை மனதோய் நீ அய்யா
வீரத்தின் வித்தே விரைந்தருள்வாய்
வேதனை யாவும் போக்கி என்றும்
வேண்டும் அருள்செய்து காத்திடுவாய்(த)
6. பெற்றோர் பாடல்
கண்கள் எங்கே -- மெட்டு
அன்பு தெய்வம் எந்தன் பெற்றோர்
அருளின் வடிவம் எந்தன் பெற்றோர்
அன்றும் இன்றும் என்றும் என்னை(2)
அன்புடன் காத்தே அனுதினம் பேணும்(அ)
சரணார விந்தங்கள் தினம் போற்றித் தொழுவேன்
தினம் போற்றித் தொழுவேன்
பாமாலை தனை சூட்டி நாள்தோறும் மகிழ்வேன்
உளமாற துதிப்பாடி பேரின்பம் எயதி
உயர்வான நலம் யாவும் பெற்றே நான் மகிழ்வேன்
ஆ...............ஆ.................ஆ.........(அன்பு)
கண்கண்ட தெய்வம் இக் கலியுகம் தன்னில்
இக் கலியுகம் தன்னில்
காருண்ய எழில்தீப ஒளி ஜோதி அவரே
துதிப்பாடி மனாதாலே தினம் போற்றி தொழுவோம்
துயர் யாவும் போக்கியே துணையாக விளங்கும்(அன்பு)
------------------
7. அதோ அந்த பறவை போல - மெட்டு
சாதா உந்தன் பாத மலரை நாளும் போற்றும்
பிதா எங்களை நாளும் நாளும் பேணி காப்பாய்
குறையாவையும் களைந்தோட்டியே...(2)
காலம் யாவும் எங்களுடன் நீ துணைவருவாய்..(ச)
பாரதம் தனில் வாழ்ந்திடும் மக்கள் யாவரும்
பேரும் புகழும் பெற்று விளங்கும் பேற்றை நல்குவாய்(2
பண்புடன் தினம் யாவரும் ஒன்றுகூடியே.. பல
அறங்கள் புரிந்து சிறந்து ஓங்க வாழ்த்தி அருளுவாய்
குறையாவையும் களைந்தோட்டியே...(2)
காலம் யாவும் எங்களுடன் நீ துணைவருவாய்..(ச)
வீரம் விளைந்த பூமியினில் தீரமாகவே
ஈரம் ஈகை தியாகம் போன்ற குணங்களைக் கொண்டே
அன்பு பாசம் கருணை நேசம் கொண்டுதிகழவே
அன்பு தந்தை அருளைத் தந்து நாளும் காப்பாய்
குறையாவையும் களைந்தோட்டியே...(2)
காலம் யாவும் எங்களுடன் நீ துணைவருவாய்..(ச)
-----------------------
9. ஆயர் பாடி மாளிகையில் - மெட்டு
அன்பு தந்தை உந்தன் புகழை
அனுதினமும் போற்றிடவே
ஆவலுடன் ஓடி வந்தோம் நாங்கள் - என்றும்
எங்கள் பாடல் தன்னில் மனம் மகிழ்ந்து நீயும் நாளுமே
நலங்கள் பல நல்க தினமும் வருவாய்(2) (அன்)
பாசமுடன் ஒன்றுபட்டு நேசத்துடன் யாவருமே
ஒன்றிணைந்து உன்னைப் போற்ற வந்தோம்...இப்
புவிமீதில் நாளும் பல நல்லறங்கள் இயற்றிடவே
நலங்கள் பல நல்க தினமும் வருவாய்(2) (அன்)
கல்விச் செல்வம் வீரம் பலவும்
நாளும் யாவரும் பெற்றிடவே
இன்னருளைத் தந்திடவே வருவாய் -எங்கள்
இதயக் கமலம் தன்னிலிருந்து
என்றும் அருளாட்சி செய்து
-இன்பமுடன் வாழ்த்திடுவாய் நாளும்(2)( அன்பு)
வறுமை துன்பம் தீமை பலவும் நீங்கி
நலம் பெற்றிடவே
வசந்த எழில் வானமாகத்திகழ்வாய் - இந்த
வையகமும் வானகமும் யாவும் எமக்கு நீயே ஐயா
வாழ்த்தி வழிகாட்டி தினம் அருள்வாய்(அன்பு)
-------------------
10. கோதையின் திருப்பாவை , வாசகர் வெம்பாவை கூப்பிடும் குரல் கேட்டு கண்ணன் வந்தான் -மெட்டு
அப்பா..... அப்பா..... அப்பா.......அப்பா.....
கோடி நலம் நல்க.... குறைகள் பல களைய.....
தேடியே வந்தோம் உன் வாயில்....(2)
நாடிடும் அன்பர்கள் நலம் பலபெற்றுய்ய...
ஓடியே காத்திடவே வருவாய்....(கோடி)
மந்திரம் தந்திரம் எதுவுமே தெரியாது
பிதற்றிடும் எம் குரல் கேட்பாய்....(2)
மாண்புடை தெய்வமே மகிமைகள் பல புரியும்
மங்கள நாயகன் நீயே.....(கோடி)
செந்தமிழ்ப் பாமாலை உந்தனின் பதம் தனிலே
சிந்தை மகிழ்ந்திடவே சூட்டி...(2)
எந்தையே உந்தனை வந்தனை செய்தே -எம்
பந்தத் துயர் தன்னைக் களைவோம்(2) (கோடி)
இம்மை மறுமைப் பிணி இல்லாமல் போக்கவே--
ஈடற்ற உன்பதம் சேர்ந்தோம்...(2)
ஈனப் பிறவி தனை போக்கியே காத்திடுவாய்
ஈரேழுகத் தலைவா....(2) (கோடி)
-------------------------------
11. பம்பைக் கரையில் ஹரிஹர சுதன் அவதரித்தான் -
மெட்டு
அன்பு கொண்டு உந்தன் பதம் போற்றுவோம் - உன்
அருளை வேண்டி நாளும் நாளும் வாழ்த்துவோம்
எங்கணமும் நிறைந்து நிற்கும்
இறைநீயே கேட்டு அருள்
ஏழுலக ஜீவனனைத்தையும்
இதமுடனே காத்து அருள்
ஐம்புலனால் அனுதினமும்
வாழ்த்திடவே வந்தருள்வாய் ஐயனே...(அன்பு)
பணிவுடனே பாடலிசைக்கும் அனைவரையும் காப்பாய்..
பாமாலை இசைத்திடவே உள்ளம் கனிந்து அருள்வாய்
ஓம்கார ரூபமய ஜோதி நீயே ஐயா.... -என்றும்
உள்ளக் குளிரப் பாடிமகிழ்வோம் உன்னை(2) (அன்பு)
தீராத வினையாவும் தீர்த்தருளும் இறையே....
போராடும் வாழ்வில் என்றும் உறுதுணையும் நீயே....
வாராத வித்தை பலவும் விரைந்து வரும் உன்னால்- என்றும்
மாறாத அன்பைப் பொழியும் இறை எம்மைக் காப்பாய்(2) (அன்பு)
----------------------------
12. முருகா என்பதும் உனைத்தானோ - மெட்டு
பல்லவி
வருவாய் எங்களைக் காத்தருள்வாய்.....
வரமே நல்கிட மனம் கனிவாய்....(வருவாய்)
அநுபல்லவி
தருவாய் நலம் தனை நாளுமே எமக்கு.......(3)
தந்தையே தயைசெய்து காத்தருள் இறையே(வரு)
சரணம்
அனுதினம் உந்தனின் பாதம் பணிவேன்....
அகிலம் முழுதும் நிறைந்திடும் இறை உன்
கருணை மழையால்..... ஆ............, ஆ..........
கருணை மழையால் காத்தருள் எங்களை
காலம் முழுதும் துணையிருந்தருள (வரு)
-----------------------
13. சரணம் சரணம் சரணம் ஐயப்பா - மெட்டு
சரணம் சரணம் சரணம் தந்தையே......
சஞ்சலங்கள் போக்கி என்றும் வாழ்வு நல்கிடும்(சர)
அகமகிழ்ந்திட நான் பாடுவேன்....
அனுதினம் உன் புகழை போற்றுவேன்...
வருவாய்.... வருவாய்... அன்பு தந்தையே....
வாழ்த்தி துதிக்கும் எங்களின் துயரம் யாவும் போக்கிடும்
தீன சரணன் உந்தனின் திருமலரடி நாடினேன்....(சரணம்)
---------------------
14. உள்ளம் உருகுதையா..... தந்தையே..... உன்புகழ் பாடுகையில்..
அன்புப் பெருகுதையா..... தினமும் ஆனந்தம் கிடைக்குதய்யா.... அப்பா (உள்ளம்)
பாடிக் களித்திடவே.... தினமும் பாக்கள் வருகுதைய்யா..
நாடி மகிழ்ந்திடவே..... உன் பதம்...
நாடி மகிழ்ந்திடவே - தினமும்
நலங்கள் பெருகுதைய்யா........ (உள்ளம்)
கவலைகள் மறையுதய்யா..... எங்கள்
கவலைகள் மறையுதய்யா..... உந்தனின்
கருணைப் பார்வையிலே.......
கடைக்கண் பார்த்தருள்வாய் - என்றும்
காலடிப் பற்றிநிற்பேன்.....(உள்ளம்)
---------------------
15. (ஞால முதல்வனே... நாயகனே - மெட்டு)
பாதம் பணிந்திடுவேன் - தந்தையே - உன் - தினம்
பைந்தமிழ்ச் சரமெடுத்து.... பாக்கள் இசைத்திட்டே உன்(பா)
வேதங்கள் யாவுமே போற்றிடுமே.... - எங்கள்.
வினைகளைக் களைந்திடுவாய்....
விரைவாய் மனம் கனிவாய்... (பாதம்)
மூவர் தொழும் பாத மூர்த்தி நீயே.... என்றும்
முத்தமிழ்ப் பாவினில் நான் போற்றிடுவேன்....
நாதமாய் நீயிருந்தே காத்திடுவாய்...,-என்
நாவினில் குடியிருந்தே நலம் அருள்வாய் -தந்தையே.(பா)
----------------------------
16. சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ - மெட்டு
சிந்தைனையில் நீயிருப்பாய்....
செந்தமிழிலில் பா இசைக்க...
தந்தையுந்தன் பாத மலர் நாடி நாளும் போற்றிட என்
பைந்தமிழ்த் தேன் சொல்லெடுத்து பாக்கள் பல இசைத்திடுவேன்....
பாசம் மிகும் தெய்வம் உந்தன் பாத மலர் பற்றிடுவேன்..
பார்முழுதும் உந்தன் புகழ் நாளெல்லாம் பரப்பிடுவேன்..
பரிவுடன் காத்திடவே கருணை மனம் கனிவாய்...
தந்தையுந்தன் பாத மலர் நாடி நாளும் போற்றிட என்(சி)
பூமாலை சூட்டிடுவேன்.... புன்னகையே பூத்திடுவாய்...
பூபாளம் இசைத்திடுவேன் தந்தையே கேட்டருள்வாய்..
நாவாற உனைபணியும் நல்லோரைக் காத்தருள்வாய்
தந்தையுந்தன் பாத மலர் நாடி நாளும் போற்றிட என்(சி)
-------------------------
17. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே -மெட்டு
பற்பல பாக்களினால் தினம் உன்புகழை....
நாள்தோறும் இசைத்தேன் நான் செந்தமிழில்
நம்பிக்கைக் கொண்டேன் என் எந்தை உந்தன்
திருவடிகளை நான் என் மனதிருத்தி....
வருவாய் தினம் காக்க நீ வந்தருள்வாய்
தருவாய் நலம் பலவும் எம் வாழ்வினிலே(பற்)
தந்தை தாங்கள் எங்களையே
தரணி புகழ செய்திட்டீர்...
அன்பு பாசம் நேசம் ஒன்றை
அன்புடனே போதித்தீர்...
வந்த எந்த தீங்கினையும்
எதிர்த்துப் போடும் மனம் தந்தீர்
சொந்த பந்த சுற்றத்திலே
விண்ணிலவாய்த் திகழ்கின்றீர்
ஒளி வானில் விண்மீனாய்
மிளிர்ந்தே நீர் அருளுகின்றீர்
ஒருநாளும் மறவாமல்
தினம் நாங்கள் போற்றிடுவோம்
எங்கும் என்றும் எப்பொழுதும்
நிறைந்து நின்று காத்திடுவீர்
தினம் பா இசைக்க உம்
மனம் மகிழ்வீர்
என் தந்தையே எங்களைக் காத்திடுவீர்(பற்)
வாழ்வும் வழியும் நீயன்றோ
வழியும் ஒளியும் நீயன்றோ
ஊனம் யாவும் போக்கி என்றும்
நலங்கள் செய்யும் தெய்வமே...
லட்சிங்கள் உம் பாதம்
விட்டிடோமே அதையென்றும்
கெட்டியாகப் பிடித்துக் கொண்டோம்
எண்ணத்திலே நாள்தோறும்
வாஞ்சையோடு எமைப்பேணி
வாழ்வு முழுதும் காத்திட்டீர்
வசந்த வானில் ஒளி நிலவாய்
வாழ்வில் எம்மில் கலந்திட்டீர்
உலகெங்கும் தேடிடினும்
உம்போலக் கிடைத்திடுமோ
உமக்காக கவிபொழிவோம்
உவப்புடன் ஏற்றளுள்வீர்
அன்பு தந்தை உங்களின்
அடிமலரைப் பற்றி நிற்கும்
உலகோரைக் காத்தளும் இறைநீயே
உண்மையும் அதுவன்றோ எம் குலவிளக்கே(பற்)
----------------------------
18. இசைத்தமிழ் நீ செய்த - மெட்டு
இசைதமிழ் நீ செய்த அருள் சாதனை
நீ இருக்கையிலே எமக்கிங்கே ஏதுகுறை
இறைவா..... ஆ...... ஆ.......
இசைதமிழ் நீ செய்த அருள் சாதனை
நீ இருக்கையிலே எமக்கிங்கே ஏதுகுறை
பைந்தமிழால் உந்தன் புகழ் பாடும்
எந்தாய்...... ஆ........
பைந்தமிழால் உந்தன் புகழ் பாடும்
பல பாமாலை ஏற்றருள்வாய் அன்புடனே
உயிரினும் மேலான தெய்வம் நீயே.... எங்கள்
உலகமும் நீதானே அன்பு தெய்வம் (இசை)
தாயினும் பரிவாக எமைக் காத்தாய்.. நீ......
தவறுகள் பலவற்றைப் பொறுத்திட்டாய்
தூயவனே உம் புகழ் பாட -தினம்
தேடுகின்றோம் தமிழ் சொற்களையே (இசை)
சிறுமதி செய்திடும் பிழை பொறுப்பாய் - தயையே
சீர்புகழ் உன் பெருமை போற்றவைப்பாய்
பித்தத்தை மாற்றி எங்கள் சித்தத்தில்
நித்திய வாசம் செய்திடுவாய்....(இசை)
தான் என்ற அகந்தையைப் போக்கிடுவாய் -- தினம்
தமிழிசைப் பா இசைக்க வரமருள்வாய்
தன்னலம் கருதாத தயை உந்தன்
தியாக்தினை போற்றி தினம் புகழ்ந்திடுவோம்(இசை)
------------------------------
19. அகர முதல எழுத்தெல்லாம்-- மெட்டு
அகர முதல எழுத்தெல்லாம் போதித்தாய் நீயே
ஆறுபொழுதும் எங்களையே காத்திட்டாய் நீயே(அ)
இரவு பகல் பாராது உழைத்திட்டாய் நீயே
ஈன்ற உன் பதமலரைப் போற்றிடுவோம் நாளும்
உலகம் எமக்கென்றும் நீதானே..
ஊர் புகழ் பெருமைதனைத் தந்தாயே -தந்தையே(அகர முதல)
என்றும் எமைக்காக்க முனைந்திட்டாய்
ஏற்றம் பலவும் தந்தே காத்திட்டாய்
ஐயம் திரிபின்றி கற்க வைத்தாய்
ஒளி ஓசை உறு சுவையை உணரவைத்தாய்
ஓம் கார இசையால் உனை மகிழவைப்பேன் நானே..(அகர)
குறிப்பு:
தந்தையை தெய்வமாக வழிபடுபவர்கள் மனமுருக இதனை வேண்டிப் பணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
அன்புடன்
திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி,
கோவை-22
பக்தி இசை மாலை வளரும்................