மன்னுயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பான் – அறநெறிச்சாரம் 4

நேரிசை வெண்பா

அறங்கேட் டருள்புரிந் தைம்புலன்கள் மாட்டும்
இறங்கா(து) இருசார் பொருளும் - துறந்தடங்கி
மன்னுயிர்க் குய்ந்துபோம் வாயில் உரைப்பானேற்
பன்னுதற்குப் பாற்பட் டவன். 4

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

அற நூல்கள் பலவுங் கேட்டவனாயும், அருளுடையவனாயும்,

ஐம்பொறிகளால் நுகரப்படும் இன்பங்களை விரும்பாதவனாயும்,

அகப்பற்றுப் புறப்பற்றுகளை விட்டவனாயும், அடக்கமுடையவனாயும்;

நிலைபெற்ற உயிர்களுக்கு வீடுபேற்றுக்குரிய வழியினை உரைப்பவன் ஒருவனுளனாயின் அவன் அறமுரைத்தற்கு உரியவனாவன்.

குறிப்புரை: சார் - பற்று, மன்னுதல் - நிலைபெறுதல், பால் - உரிமை.

இதனால், அறமுரைப்பவன் தன்மை விரித்துக் கூறப்பட்டது.

அற நூல்களை அறமென்றது ஆகுபெயர்.

பன்னுதல்-விளக்கிச் சொல்லுதல்.

ஐம்பலன்கள் - சுவை; ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Nov-19, 10:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 83

சிறந்த கட்டுரைகள்

மேலே