அறமுரைப்பவராகார் இயல்பு - அறநெறிச்சாரம் 5

நேரிசை வெண்பா

பிள்ளைபேய் பித்தன் பிணியாளன் பின்னோக்கி
வெள்ளை களிவிடமன் வேட்கையான் - தெள்ளிப்
புரைக்கப் பொருளுணர்வா னென்றிவரே நூலை
உரைத்தற் குரிமையிலா தார். 5

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

சிறு பாலகனும், பேய் கொண்டானும், பைத்தியம் பிடித்தவனும், நோயாளனும்,

தொலைநோக்குப் பார்வை இல்லாதவனும், முட்டாளும், கள் குடியனும்,

பிறர்க்குத் துன்பம் செய்பவனும், பேராசையுடையவனும்,

குற்றமுடையன வற்றையே ஆராய்ந்து உள்ளத்தில் வைத்திருப்பனும் ஆகிய இவர்களெல்லாம் அறநூலைக் கூறுவதற்கு உரிமை இல்லாதவராவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Nov-19, 10:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 84

மேலே