என்னிலை நான் மறந்தேனடி
என்னிலை நான் மறந்தேனடி
நதியோடை இசைக்கும் ராகங்களில்
புல்லினங்கள் தன்னிலை மறந்ததடி!
உன்காதோர மணிகள் காற்றினில் இசைக்கையில்
என்னிலை நான் மறந்தேனடி!
தென்றலின் பாதச் சுவடறிய இயற்கையும் போராடுதடி!
உன் கால்கொலுசின் சுவடறிய
என் இதயமும் போராடுதடி!
மலையெழில் உருக கண்டு நாணத்தில்
திங்களும் பனிபோர்வை சூடியதடி!
உன் நினைவுகளில் உருளும் என் இரவுகளுக்கு
திங்களும் நீயானதடி!
காற்றினிலே மகரங்கள் பறந்து வந்து
மலரைச் சேர்ந்ததுமே அழகைக் கூட்டுதடி!
என் பார்வையிலே ஒளிகள் திரண்டு வந்து
உனைச் சேர்ந்ததுமே மாதுளைகள் வெடித்ததடி!
ஓயாத இரைச்சலிடும் கடலலைகளை இனிய ஓசையாக்கவே
வெண்சங்குகள் கரை ஒதுங்க புறப்பட்டதடி!
அணிசேர்ந்த முத்துக்களை தாங்கி நிற்கும் கழுத்தின் நிறம் காண
என் உணர்வலைகளை யறிந்த வாணவில் நிறங்களெல்லாம் புறப்பட்டதடி!
காற்றினிலே விலகிடும் சேலைக் கண்டு
வீணைகள் இசைத்திடும் ரகசியத்தை என் விரல்களுக்கு சொல்வதென்னடி!
தமிழ்மகன் ஒழுக்கம் வந்து என் விரல்களை கட்டிவிட்டு உன் இசைவை கேட்பதென்னடி!
ஆக்கம்: ச. செந்தில் குமார்