சொற்றநீர் நில்லாத தென்னென்று சூழ்ந்து சொலல் - நீதிநெறி விளக்கம் 21
நேரிசை வெண்பா
கற்றுப் பிறர்க்குரைத்துத் தாம்நில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக்(கு) உண்டோர் வலியுடைமை - சொற்றநீர்
நில்லாத தென்னென்று நாணுறைப்ப நேர்ந்தொருவன்
சொல்லாமே சூழ்ந்து சொலல். ௨௧
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
நூல்களைப் படித்துப் படித்ததன்படி ஒழுக வேண்டுமென்று அக்கருத்துக்களைப் பிறர்க்கு மட்டும் எடுத்துக் கூறி, கூறியபடி தாங்கள் அவ்வொழுக்கத்தில் நில்லாமலிருக்கின்றவர்கள் வாயில் உண்டாகும் சொல்லுக்கு ஒரு வலியுடைமை இருப்பதுண்டு;
அது, நாங்கள் கற்றதன்படி ஒழுக வேண்டுமென்று சொல்லிய நீங்கள் அங்ஙனமே அவ்வொழுக்கத்தில் நில்லாதது ஏனோ என்று வெட்கம் உறைக்கும்படி எதிர்த்தொருவன் இகழ்ந்து சொல்லாதபடி, பிறர்க்கு அறிவுறுத்தும் போது நினைத்துப் பார்த்து அறிவுறுத்தலாம்.
விளக்கம்:
சூழ்ந்து சொல்லல் ஒரு வலியுடைமை என்க.
சூழ்ந்து சொல்லலாவது நீங்கள் அவ்வாறு நடத்தல் வேண்டுமென்று எதிரிருப்பாரை மட்டுஞ் சுட்டிச் சொல்லாமல் தன்னையும் அவர்களோடு சேர்த்துக் கொண்டு நாமெல்லாம் அவ்வாறு நடத்தல் வேண்டுமென்று தன்மைப் பன்மையாற் கூறுதல் போல்வன.
இங்ஙனம் கூறுதலுமுண்டென்று அப்படிற்றொழுக்கத்தை இழித்தபடியாம்.
உறைத்தல் என்பது வருந்தும்படி நன்றாகத் தாக்குதல்,
‘நான்சொல்வது உன் உடம்பில் உறைக்கவில்லையா’ என்பது வழக்கு,