விஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்

சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் உரையில் நான் தமிழகத்தின் பெருமிதமான கிருஷ்ணம்மாள் – ஜெகன்னாதன் தம்பதியினருக்கு ஒரு வாழ்க்கைவரலாறு கூட தமிழில் இல்லை என்று சொல்லியிருந்தேன். அதை கேட்டவர்கள் இருபதாயிரம்பேருக்கு மேல். ஆனால் அந்த வரியிலிருந்து ஊக்கம் கொண்டு கிருஷ்ணம்மாளைச் சென்று கண்டு அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற, லாரா கோப்பா அவர்கள் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களைப்பற்றி எழுதிய நூலை தமிழில் அழகிய பதிப்பாக வெளிக்கொண்டுவர முன்வந்தவர்கள் குக்கூ – தன்னறம் அமைப்பினர்.

இலக்கியம் பேசப்படுவதற்கான ஓர் அமைப்பாகவே விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் திகழவேண்டும் என்பதே என் எண்ணம். விஷ்ணுபுரம் அமைப்பின் முதன்மைவிருந்தினர்கள் எழுதும் ஆவல் கொண்டு, ஆனால் இலக்கியத்தைப் பேசுவதற்கான சூழல் அமையாமல், இயல்பான தயக்கத்துடன் இருக்கும் இளைஞர்கள்தான். வாசிப்பின் படியில் குழப்பங்களுடன் கால்வைப்பவர்கள்தான். அவர்களிடம் வருவதற்கும் தங்குவதற்கும் உரிய வசதி இல்லாமலிருந்தால் அதையும் என் நண்பர்கள் அளிக்கவேண்டும் என்பதே என் எண்ணம். அவர்களில் நாளைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். நாளைய வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை ஒரு சிறு தொடக்கம், மிகச்சிறிய தூண்டுதல். அது இந்த இலக்கியச் சூழலில் இருந்து அமையவேண்டும். இவ்வரங்கின் நோக்கம் அதுவே.

இந்த அரங்குக்கு பத்தாண்டுகளுக்கு முன் அவ்வாறு வாசகர்களாக தயங்கியபடி வந்தவர்கள் பலர் இன்று தங்களுக்குரிய மொழியும் நோக்கும் கொண்ட, தெளிந்து பேசக்கூடிய எழுத்தாளர்களாக ஆகியிருக்கிறார்கள். தமிழ்ச்சூழலை வரையறுக்கவும் முன்னெடுக்கவும்கூடியவர்களாக அடையாளம் கொண்டிருக்கிறார்கள். எவரும் எழுத்தாளர்களை உருவாக்க முடியாது. ஆனால் அவர்கள் தடுமாறிச் சுழலும் வழிகளை சுட்டிக்காட்டி கொஞ்சம் நேராக்க முடியும். முன்னோடிகளான எழுத்தாளர்களுடனான உரையாடல்களை அமைத்தல், அவர்கள் பேசுவதற்கான மேடைகளை அளித்தல் ஆகியவையே அதற்கான வழிகள். அதையே விஷ்ணுபுரம் அமைப்பு செய்கிறது. இன்னும் எழுதாதவர்களுக்காகவே திறந்திருக்கிறது.அவர்கள் எதையும் அளிக்கவேண்டியதில்லை. ஆர்வம் கொண்டிருந்தால் மட்டும் போதும்.

ஆனால் செயலாற்றுபவர்கள் இன்னொரு வகை. மாற்றுவாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள். அறிவுத்தளச் செயல்பாட்டை விட களச்செயல்பாட்டை நம்புபவர்கள். நான் அவர்களில் ஒருவன் அல்ல. ஆனால் அவர்களை இச்சமூகத்தின் ஆற்றல்விசை என நம்புபவன். அவர்களுக்காகவும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்றும் முன்னிற்கவேண்டும் என விரும்புகிறேன். அவர்களின் தயக்கங்கள், தோல்விகள், உணர்வுநிலைகள் அனைத்துமே என் மதிப்பிற்குரியவை. அவ்வகையில்தான் விஷ்ணுபுரம் அரங்கில் குக்கூ அமைப்பின் நூல்களும் கைநெசவுப்பொருட்களும் பிற மாற்றுப்பொருளியல் சார்ந்த வணிகப்பொருட்களும் முன்வைக்கப்படுகின்றன. என் நூல்களை குக்கூ- தன்னறம் அமைப்பு பதிப்புரிமை இன்றி வெளியிட அளித்ததும் அதன்பொருட்டே

இவ்வாண்டும் குக்கூ – தன்னறம் அமைப்பின் நூல்கள், கைநெசவுப்பொருட்கள் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்படும். நண்பர்கள், வாசகர்களின் ஆதரவு தேவை எனக்கோருகிறேன்

ஜெ

***

எழுதியவர் : (7-Dec-19, 6:14 pm)
பார்வை : 24

மேலே