இதயம் தொட்ட இலக்கியவாதிகள் நூல் ஆசிரியர் விஜயா மு வேலாயுதம் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

இதயம் தொட்ட இலக்கியவாதிகள்!


நூல் ஆசிரியர் : விஜயா மு. வேலாயுதம் !



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை-600 017. பக்கங்கள் : 224 விலை : ரூ.175


******

கோவை என்றவுடன் நம் நினைவிற்கு வருவது விஜயா பதிப்பகம். விஜயா பதிப்பகம் என்றவுடன் நினைவிற்கு வருவது எளியவர், இனியவர், பண்பாளர் விஜயா. மு. வேலாயுதம் அவர்கள். எழுதி அமுதசுரபி மாத இதழில் தொடராக வந்தபோதே படித்து இருந்தாலும் மொத்தமாக நூலாகப் படித்ததில் மகிழ்ச்சி.

புகழ்பெற்ற வானதி பதிப்பகம், விஜயா பதிப்பகம் மு. வேலாயுதம் அவர்களின் நூலினை வெளியிட்டு இருப்பது பாராட்டுக்குரியது. அன்பின் வெளிப்பாடு. முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் நீண்ட அணிந்துரை நல்கி நூலிற்கு மகுடம் சூட்டி உள்ளார். சென்னையில் நடந்த முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் பங்குபெற்று வாழ்த்துரை வழங்கியவர் விஜயா. மு. வேலாயுதம் அவர்கள்.

மதுரை அருகே உள்ள மேலூரில் பிறந்தவர். விஜயா மு. வேலாயுதம் அவர்கள் வேலை பார்த்துக் கொண்டே மணப்பாறைக்கு வரும் நூல்களை வாசித்து சிறந்த வாசகராகி, பின்னர் பிரபல எழுத்தாளர்கள் பலருடன் நெருங்கிப் பழகி, பதிப்பகம் தொடங்கி, பெயரோடு விஜயா பதிப்பகம் என்ற பெயரும் ஒட்டிக் கொள்ளும் அளவிற்கு பதிப்பகத்தில் முத்திரை பதித்து, நூல்கள் விற்பனை செய்து, வாசக நண்பர்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து வரும் மாமனிதர் அனுபவம் கூறிடும் முதல் நூல் இது.

எழுத்துலகின் இமயம் மு.வரதராசனார், கு. அழகிரிசாமி, கவியரசர் கண்ணதாசன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, கவிஞர் மீரா, சுஜாதா, கவிக்கோ அப்துல் ரகுமான், வ. விஜயபாஸ்கரன், வானதி திருநாவுக்கரசு, அருட்செல்வர் நா. மகாலிங்கம், பழனியப்ப செட்டியார் சக்தி வை. கோவிந்தன் என 13 மிகச்சிறந்த ஆளுமைகளின் திறமையை, பண்பை படம்பிடித்துக் காட்டி உள்ளார்.

இன்றைய இளைய தலைமுறையினர் பார்த்திராத ஆளுமைகள் இவர்கள். இந்த நூலை வாங்கிப் படித்து அவர்களைப் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.

மு.வ.-வின் செல்லப்பிள்ளை தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள் காலமாகி விட்டார். அவர் இருந்திருந்தால் இந்த நூல் பற்றி மிகச் சிறப்பான மதிப்புரை வழங்கி இருப்பார். குறிப்பாக மு.வ. பற்றிய கட்டுரைகள் படித்து மனம் மகிழ்ந்து இருப்பார்.

மு.வ.வின் எழுத்து ஆற்றலை மட்டுமல்ல, அவரது உயர்ந்த பண்புகளை மிக அழகாக எடுத்தியம்பி உள்ளார். மு.வ. அவர்களிடம் அவர் மீது அன்பு கொண்ட நண்பவர்கள் மணி விழா கொண்டாட வேண்டும் என்று அனுமதி கேட்ட போது மறுத்தவர் மு.வ. ‘யான்’ எனது என்ற செருக்குக்கு இடம் தரும் எந்த விழாவும் குறைய வேண்டும். சமுதாய விழாக்கள் பெருக வேண்டும்’ என்று கூறி மறுத்து விட்டார்.

மு.வ. அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தபோது 4 நாட்கள் அகிலன் பற்றிய கருத்தரங்கம் நடத்தி உள்ளார். அங்கு விருந்தினராக வந்திருந்த விஜயா மு. வேலாயுதம் உள்பட பலரையும் பல்கலைக்கழகத்தில் தங்க வைத்து துணைவேந்தர்களைப் போல கவனிக்க வேண்டும் என்று பணியாளர்களை பணித்து அவரும் நேரில் வந்து கவனித்த விருந்தோம்பல் மு.வ.-வின் உயர்ந்த உள்ளத்தை எடுத்து இயம்பி உள்ளார். மு.வ. பற்றி பல அறியாத பல அரிய தகவல்கள் நூலில் உள்ளன. பாராட்டுக்கள்.

பதச்சோறாக மு.வ. பற்றி குறிப்பிட்டுள்ளேன். இப்படி ஒவ்வொரு ஆளுமையின் சிறப்பியல்பையும் எடுத்தியம்பி உள்ளார். அழகிரிசாமி இறந்த அன்று நடிகர் அசோகனும் இறந்திருந்தார். நடிகருக்கு தந்த முக்கியத்துவம் இலக்கியவாதிக்கு ஊடகங்கள் தரவில்லை என்று வருந்தி உள்ளார். அன்று மட்டுமல்ல, இன்றும் அதே நிலை தான். தமிழ்த்தேனீ இரா.மோகன் இறந்த அன்று நடிகர் கிரேசி மோகனும் இறந்திருந்தார். இலக்கியவாதியான தமிழ்த்தேனீ இரா. மோகன் இறப்பு பற்றி ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை என்பது என் வருத்தம்.

கவியரசு கண்ணதாசன் அவர்களின் நூல்களை, வானதி பதிப்பகம் வெளியிட்டு வந்த காலம். ரூ.5000 பணம் தந்ததற்காக, கண்ணதாசன் ஒரு நூலை விஜயா வேலாயுதம் அவர்களிடம் தந்து வெளியிடுங்கள் என்று தந்த போது,உடனே மறுக்க வேண்டாம் என்று பெற்றுக் கொண்டு, பின்னர் கவியரசரிடம் திரும்ப தந்து விட்டார் விஜயா மு. வேலாயுதம். வானதியிலேயே வெளியிடுங்கள். அது தான் தொழில் தர்மம் என்று கவியரசரிடம் சொல்லி இருக்கிறார். இதைப் பார்த்து கவியரசரும் வியந்திருக்கிறார்.

விஜயா மு. வேலாயுதம் அவர்கள், கடைபிடித்து வரும் தொழில் தர்மம் தான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தி உள்ளது என்பதை அறிய முடிகின்றது. நூல் முழுவதும் உண்மையை எழுதி இருப்பதால் நம் கண் முன்னே காட்சிகளாக விரிவடைகின்றன. தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை.

பல நூல்களை விரும்பி வாசிக்கும் வாசகர் விஜயா மு. வேலாயுதம் அவர்கள். ஒரு நல்ல வாசகர் ஒரு நல்ல படைப்பாளியாக முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நூல். மிகச்சிறந்த வாசகர், மிகச்சிறந்த எழுத்தாளர் போலவே சிறப்பாக எழுதியுள்ள நூல் இது.

மறக்க முடியாத நிகழ்வுகளை மறக்காமல் நினைவில் வைத்திருந்து நிகழ்வின் போது உடன் இருந்த நண்பர்களின் பெயர்களுடன் மிக நுட்பமாக எழுதி உள்ளார்.

இதயம் தொட்ட இலக்கியவாதிகளின் நூலின் மூலம் நம் இதயம் தொட்டு விட்டார் விஜயா மு. வேலாயுதம். ஆளுமைகளின் ஓவியங்கள் மிக நன்று. பல அரிய புகைப்படங்களும் நூலில் இடம் பெற்றுள்ளன. மிக நேர்த்தியாக அச்சிட்டு வெளியிட்டுள்ள வானதி பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (8-Dec-19, 6:40 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 71

மேலே