புல்லியர்தாம் புண்ணியர் ஆவாரோ புகல் - நீதி வெண்பா 33

நேரிசை வெண்பா

கற்பூரம் போலக் கடலுப்(பு) இருந்தாலும்
கற்பூரம் ஆமோ கடலுப்பு - பொற்பூரும்
புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம்
புண்ணியர் ஆவாரோ புகல். 33

- நீதி வெண்பா

பொருளுரை:

கடலில் உண்டாகும் உப்பானது பார்வைக்கு கற்பூரம் போல இருந்தாலும் அவ்வுப்பு கற்பூரம் ஆகுமா? ஆகாது; அதுபோல, பாவிகள் பார்ப்பதற்கு சிறப்பு மிக்க புண்ணியரைப் போல இருந்தாலும் புண்ணியர் ஆவார்களா என்று சொல்.

'உருவம் கண்டு இகழாமை வேண்டும்'. எந்த தோற்றத்தில் மாமேதைகள் இருப்பர் என்று யார் அறிவார்?

கடல் உப்பு பார்ப்பதற்கு கற்பூரம் போலத்தான் இருக்கிறது, அது கற்பூரமாகி விடுமா?

அதுபோல அற்பர்கள் தவசிகள் போலவும், நல்லவர்கள் போலவும் வேடமிட்டாலும் நல்லவர் ஆகிவிடுவாரா?

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-19, 10:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 110

மேலே