இயற்கை வளம் 4 ====================

நம்பும் மனிதர்க்கு நல்வாழ்வு தந்தியற்கை
வெம்மை யகற்றி விடும். 31
*
விடுதலை யாகும் வியர்வையின் நாற்றம்
விடுதலை யாக்கும் சலம். 32
*
சலமற்ற ஓர்நாள் சகம்காண நேரின்
நிலமென்ன வாகும் நினை.33
*
நினைக்கும் மனத்தில் நிலைக்கும் கனவாய்
நனைக்கும் மழைவித்து நாட்டு.34
*
நாட்டு நலன்கருதி நாட்டும் மரத்தாலே
காட்டு வளம்பெருக்கிக் காட்டு.35
=
காட்டு விலங்கனைத்தும் காதல் புரிவதனைக்
காட்டி மகிழ்ந்திருக்கக் காட்டு.36
=
காட்டு மரவேர்கள் காத்து மறைத்துவைக்கும்
காட்டு மருத்துவத்தைக் காண்.37
=
காணா மருந்தனைத்தும் கண்டு பிணிதீர்த்து
கோணா திடவாழ்வு கொள்.38

=
கொள்ளுமட்டும் நீரைக் குடித்துவிட்டுக் கோடையிலே
கள்ளூர வைக்குமணை காண்.39
=
காணும் அணைநீர் கமத்தொழில் செய்வோரைப்
பேணும் அறமின்பப் பேறு. 40

தொடரும்.....
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-Dec-19, 2:00 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 386

மேலே