எண்ணின் இளமையோடு ஒப்பதூஉம் இல் – நான்மணிக்கடிகை 33

இன்னிசை வெண்பா

அந்தணரின் நல்ல பிறப்பில்லை என்செயினும்
தாயின் சிறந்த தமரில்லை யாதும்
வளமையோ டொக்கும் வனப்பில்லை எண்ணின்
இளமையோ டொப்பதூஉம் இல். 33

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

அந்தண்மையுடையார் பிறவியைப் போல உயர்ந்த பிறவி வேறில்லை;

தனக்கு என்ன தீமையைச் செய்தாலும் தாயைப்போல மேலான உறவினர் எவருமிலர்;

செல்வ வாழ்க்கையோடு ஒப்பான அழகு மற்றெதுவுமில்லை;

ஆராய்ந்து பார்த்தால் இளமைப் பருவத்தோடு ஒப்பாவதும் பிறிதொன்றில்லை.

கருத்து:

அந்தண்மையுடையார் பிறப்பே உயர்பிறப்பு; தாயே சிறந்த தமர்; செல்வமே அழகு; இளமையே இன்பம்.

விளக்கவுரை:

‘அந்தணர்' இனிய அருளெண்ணமுடையார்; அவ் வியல்புடையராய்ப் பிறக்கும் பிறவியே உயர் பிறவியாகும்.

தாயே மக்கள் பால் அணுக்கமும் எஞ்ஞான்றும் இனிய உள்ளெண்ணமும் உடையவளாதலின், ‘தாயிற் சிறந்த தமரில்லை' யென்றார்.

உயர்வு சிறப்பொன்றே கொண்டு, தமர் மேலேற்றி ‘என்ன நன்மை செய்தாலும்' எனவும் உரைக்கலாம்.

ஏனையழகுகள் குறைபட்டாலும் வளமை அவற்றை நிறைவு செய்துயர்த்துமாகலின், ‘வளமையோடொக்கும் வனப்பில்லை' யெனவும்,

இளமை எல்லா வின்பங்களையும் நுகர்தற்கும், கல்வி முதலியவற்றைப் பெறுதற்கும், உடல் வலியுடைமைக்கும், நன்மைகளைச் செய்தற்கும் உரியதாகலின், ‘இளமையோ டொப்பதூஉ மில்' லெனவுங் கூறப்பட்டன.

‘வளமை' செல்வமென்னும் பொருள் தரல் வளப்பாத்தியுள்' (14) என முன் வந்ததனுள்ளுங் காண்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Dec-19, 7:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 124

மேலே