கடமை யுணர்வோடு ஒழுகாயேல் பேர்ந்து விழுந்தாய் பிறழ்ந்து - பதவி, தருமதீபிகை 575
நேரிசை வெண்பா
உன்னைப் பலர்க்கும் உயர்ந்தவனாய்ச் செய்துவைத்த(து)
என்ன பயனை எதிர்நோக்கி - அன்னதனை
ஓர்ந்து கடமை யுணர்வோ(டு) ஒழுகாயேல்
பேர்ந்து விழுந்தாய் பிறழ்ந்து. 575
- பதவி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
பலர்க்கும் உயர்ந்தவனாக உன்னைப் பதவியில் உயர்த்தி வைத்தது எவர்க்கும் இனியனாய் இத நலங்களைச் செய்வாய் என்று எதிர்நோக்கியேயாம், அந்நிலைமையை உணர்ந்து உன் கடமையைக் கருதிச் செய்க, வழுவினால் பழி வாய் விழுந்து அழிவாய் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
இப்பாடல், தன் நிலைமையை உணர்வது தலைமையான கடமை என்கின்றது. உணர்ச்சி வர உயர்ச்சி வருகிறது.
உலக மக்கள் பலவகை நிலைகளில் படிந்துள்ளனர். செல்வம், கல்வி, அறிவு, ஆற்றல், உழைப்பு, பிழைப்பு முதலிய பல்வேறு வகைகளில் பாகுபாடுகளை அடைந்திருக்கின்றனர். எல்லாரும் சுக சீவிகளாய் வாழவே யாண்டும் மூண்டு முயன்று நீண்டு வருகின்றனர். அத்தகைய மனித சமுதாயம் இனிது வாழ்ந்து வர நாடுகள் தோறும் தலைவர்கள் அமைந்துள்ளனர். அவருள். அரசர்கள் உயர்நிலையாளராய் ஒளி மிகுந்து நிற்கின்றனர். தேச காரியங்களைச் செவ்வையாய் நடத்தி வரும்படி பல துறைகளிலும் தக்கவர்களை அவர் நியமிக்கின்றனர். அந்த நியமனங்களைப் பெற்றவர்கள் அதிகாரிகள் என நிலவி நிற்கின்றனர்.
அரசுக்கும் நாட்டுக்கும் உறுதியாய் நின்று எவ்வழியும் நெறிமுறை தவறாமல் உண்மையோடு உழைத்து வருவதாக அரச மன்றில் சத்தியம் செய்து தந்தே தங்களுடைய பதவிகளை யாவரும் பெற்று வருகின்றனர். விசுவாசப் பிரமாணம் என்னும் சொல் அவருடைய சுவாசத்தில் எப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்றே அதனை நாடிச் செய்கின்றனர். அந்நாட்டமெல்லாம் நாட்டின் நலம் கருதியே கூட்டப்பட்டுள்ளன. இந்தக் குறிக்கோளைக் குறிக்கொண்டு கூர்ந்து ஓர்ந்து ஒழுகி வருகின்றவரே தம் கடமையை உண்மையாய்ச் செய்தவராகிறார்.
தன் கடமையைக் கருதிச் செய்தவன் உயர்ந்து திகழ்கின்றான். அங்ஙனம் செய்யாதவன் இழிந்து படுகின்றான்.
தமது நிலைமை உரிமைகளை உணராதவரே நெறி கேடராய் இழிந்து வீழ்கின்றார். உரிய உணர்வு ஒழிந்த பொழுது பெரிய இழிவுகள் பெருகி வருகின்றன. உணர்ந்தவன் உயர்கின்றான்; அயர்ந்தவன் அழிகின்றான்.
உன்னை உயர்ந்தவனாய்ச் செய்து வைத்தது
என்ன பயனை எதிர்நோக்கி?
ஒவ்வொரு அதிகாரியும் நாளும் எண்ணி யுணர வேண்டிய உண்மை வாசகமாய் ஈண்டு இது உருவாகி வந்துள்ளது. தன்னையும் தனது பதவியையும் கருதியுணர்ந்து நெறிமுறையே ஒழுகி வருவது விழுமிய சீலமாய் ஒளிமிகப் பெறுகின்றது.
அவன் உண்மையை நோக்கி ஒழுகி உயர,.எல்லாரையும் போல் இருந்து தொலையாமல் உன்னை உயர்ந்த பதவியில் ஒர் சிறந்த அதிகாரியாக ஆக்கி வைத்துள்ள அந்தப் பாக்கியத்தை நினைந்து பணிகள் புரிக என உணர்வு கூறியது. விதிமுறை தெரிந்து வினை புரியாதவன் மதிகேடனாய் இழிவுறுகின்றான். தகுதியில்லாதவர்க்கும் அதிகார பதவிகள் சில வழிகளில் கிடைத்து விடுகின்றன. அதனால் நாட்டுக்கு இன்னலும் இடையூறுகளும் நேருகின்றன.
நேரிசை வெண்பா
மன்னர் திருவும் மகளிர் எழினலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரம் எல்லாம்
உழைதங்கட் சென்றார்க்(கு) ஒருங்கு. 167
- பெரியாரைப் பிழையாமை, நாலடியார்
பதவியை வகிக்கும் தகுதியில்லாதவரும் அரசாங்க நிலைகளில் உயர்ந்த மந்திரிகளாய், சிறந்த அதிகாரிகளாய் வந்துள்ளதைக் கண்டு அறிஞர் பலர் அதிசயமடைந்து வியந்து நின்றனர். அதுபொழுது அவரை நோக்கி ஒரு கவிஞர் இவ்வாறு கூறியருளினார். அனுபவக் காட்சிகள் இனிய சுவைகளை ஊட்டி வருகின்றன. கவியின் பொருள் நிலைகள் கருதியுணர உரியன. தகுதியில்லாதவர்க்கும் தக்க வாய்ப்புகள் கால வேற்றுமையால் அமைந்து கொள்ளுகின்றன. அவற்றால் அவர் நிமிர்ந்து திரிகின்றனர். நிலைமையை மறந்து தலைமையில் களிக்கின்றனர்.
அரிய அரச செல்வமும், அழகிய மகளிர் இன்பமும் அவரோடு நெருங்கிப் பழகினவர் எவராயினும் அவருக்கு எளிதே கிடைத்து விடுகின்றன, அவற்றை அடைதற்குத் தகுதி வேண்டா, குளிர்ந்த மரநிழல் தன்பால் ஒதுங்கினவர்க்கெல்லாம் இனிய நிழலைக் கொடுத்தருளுகிறது; அதுபோல் அவை அமைந்து நிற்கின்றன என்னும் இது விநயமான வித்தக வசனமாய் வந்துள்ளது. கவியின் குறிப்பு உணர்வின் சுவை தோய்ந்து உவகை மணம் கமழ்ந்துள்ளது. புலமைக் காட்சி தலைமை மாட்சியாய்த் தழைத்து வருகிறது.
தகுதியை உணர்ந்து வினையாளர்களை நியமிக்கவில்லையானால் அந்த அரசன் பகுத்தறிவு அற்ற மரம் போல் இழிக்கப்படுவான் என்பது இதில் தெரிவிக்கப் பட்டது. குறிப்பு மொழிகள் கூரிய சீரிய உண்மைகளை வெளிப்படுத்தியருளுகின்றன. குடி சனங்களின் நன்மையைக் கருதி ஒழுகி வரும் அளவு முடி ஆட்சி நெடிய மாட்சியாய் நிலைத்து வருகிறது.
’ஓர்ந்து ஒழுகாயேல், பேர்ந்து விழுந்தாய்’ அதிகார பதவியில் உள்ளவர் தம் கடமையை உணர்ந்து நெறி முறையே ஒழுகி வர வேண்டும். வழுவினால் பழியும், பாவமும் அடைந்து இழிவாய் அழிந்து படுவார் என இது அறிவுறுத்தியது. நிலைமையை நினைந்து பேணி உன் தலைமையைக் காப்பாற்றிக் கொள்ளுக என்றும், தக்க கருமம் மிக்க தருமமாகிறது என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.