நாட்டுநலம் எண்ணாது இழிசெருக்கில் ஏறின் மண்ணாகி வீழ்வன் - பதவி, தருமதீபிகை 576
நேரிசை வெண்பா
நாட்டுக் குரிய நலம்புரியின் நல்லவர்தம்
பாட்டுக்(கு) உரியனாய்ப் பாடுபெறும் - நாட்டுநலம்
எண்ணா(து) இழிசெருக்கில் ஏறின் இடர்பழியில்
மண்ணாகி வீழ்வன் மருண்டு. 576
- பதவி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
அதிகார பதவியில் உள்ளவன் தன் நாட்டுக்கு வேண்டிய நன்மைகளை ஆராய்ந்து செய்யின் நல்லோர் பல்லோரும் அவனைப் புகழ்ந்து போற்றுவர்; அங்ஙனமின்றிச் செருக்கி நின்றால் எல்லாரும் இகழ்ந்து எள்ளித் தள்ளுவர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் உள்ளம் ஓர்ந்து நல்லது செய் என்கின்றது.
தனக்கு இனிய சுகத்தை நாடுவதே மனிதனுடைய இயல்பாயுள்ளது. தன்னலமே கருதி வரும் வரையும் அந்த மனித வாழ்வு அவ்வளவு பெருமை அடையாது. சுய நயவிழைவு மயலான வழியிலேயே மனிதனைத் தாழ்த்தி விடுகிறது. அயலாரை ஆதரிப்பது உயர்வான நன்மையாய் ஓங்கி வருகிறது. பிறர்நலம் பேணுவோன் பெரிய மனிதனாய் அறநலம் காணுகின்றான்.
தன்னுடைய சுகத்தையே அவாவி அலைகின்றவன் ஊன உடலை வளர்க்கின்றவனாய் ஈன நிலையில் இருக்கின்றான். பிறருடைய இதத்தை நாடி நடப்பவன் இனிய உயிரை வளர்ப்பவனாய் அரிய மேன்மையில் நிற்கின்றான். குறுகிய நோக்கம் சிறுமையைத் தருகிறது. விரிந்த காட்சி சிறந்த மாட்சிகளை அருளுகிறது.
தன்னைப் போல் பிறரையும் எண்ணி ஒழுக நேரின் அப்பொழுதே அவன் புண்ணியவான் ஆகின்றான், உயர் நலங்கள் எல்லாம் உள்ளப் பண்பில் உறைந்திருக்கின்றன. மனம் புன்மையாய் இழியின் மனிதன் புல்லியனாய் இழிந்து படுகிறான். அது நன்மையாய் உயரின் அவன் நல்லவனாய் உயர்ந்து திகழ்கிறான்.
தனி மனிதனை விட அதிகார நிலையில் அமர்ந்திருப்பவன் இனிய பண்பாடுடையனாய் இசைந்திருக்க வேண்டும். பல பேர்களுடைய சுக துக்கங்கள் அவன் கையில் இருக்கின்றன. அவன் நெறிகேடனாயின் பழிகேடுகள் பல விளைந்து விடுமாதலால் அவனது நிலை நெடிது சிந்திக்க வுரியது.
பரந்த நோக்கமுடைய பெருந்தகையாளனைத் தமக்கு அதிகாரியாகப் பெற்றிருப்பவர் சிறந்த பாக்கியசாலிகளாகின்றனர்
தேச மக்களுக்கு வேண்டிய இதங்களை நாட்டுக்கு உரிய நலம் என்றது. நாட்டிலுள்ள பல நிலைகளையும் கருதியுணர்ந்து பருவம் தவறாமல் கருமம் செய்து வருவதே அதிகாரியின் தருமமாம். சாதுரிய சாகசமாய் அங்ஙனம் காரியம் செய்து வருகிறவன் கரும வீரன் என்னும் பெருமையைப் பெறுகிறான்.
தன் கடமையை உரிமையோடு கருதிச் செய்கிறவனை உலகம் பெருமையாகப் புகழ்ந்து போற்றி வருகிறது. நல்லதை நாடிப் பேணுகிறவன் நல்லவனாய் நலம் பல காணுகின்றான். எல்லாரும் அவனை ஏத்தி வருகின்றார்.
’நல்லாரை நாவில் உரை, பொன்னைக் கல்லில் உரை' என்பது இந்நாட்டில் வழங்கி வரும் பழமொழி. பொன்னின் உண்மை நிலையை உரைகல் உணர்த்தி விடும்; அதுபோல் ஒரு மனிதனுடைய தன்மையை உலக உரைகள் உணர்த்தி வரும்.
பொது மக்கள் வாக்கு அதிசய ஆற்றலுடையது. பலர் ஒருமுகமாய் உள்ளம் உவந்து ஒருவனைப் புகழ்ந்து கூறின் அது தெய்வ வாக்காய்த் தேறி வருகின்றது.
தன் உள்ளத்தில் நேர்மையும், செயலில் நீர்மையும் தோய்ந்திருந்தால் அந்த மனிதன் சீர்மையாளனாய்ச் சிறந்து திகழ்கிறான்.
மனம் திரிந்து மாறுபாடு புரியின் அவனை எவரும் சினந்து இகழ்ந்து சீறி விடுகின்றார், உயர்ந்த பதவியில் உள்ளவன் அதற்குத் தகுந்த நிலையில் நடந்து கொள்ளானாயின் அவன் விரைந்து இழிந்து படுகின்றான்.
எண்ணா(து) இழிசெருக்கில் ஏறின் எவனுமே
மண்ணாகி வீழ்வன் மருண்டு.
அதிகாரி அறிந்து ஒழுக வேண்டிய உண்மையை மதி கூர்ந்து உணர்ந்து கொள்ளும்படி இது உணர்த்தி யுள்ளது. இழி செருக்கு என்றது தன்னையுடையானை இழி நிலையில் தள்ளி அழிதுயர் செய்யும் அதன் பழிநிலை தெரிய வந்தது. தனக்குக் கிடைத்த பதவியை மரியாதையோடு பேணாமல் மமதை கொண்டு தருக்கின் அந்த அதிகாரி அதி வேகமாய் அவலநிலையில் வீழ்ந்து கவலையடைய நேர்கின்றான்.
எவ்வளவு பெரிய பதவி கிடைத்தாலும் பண்பாடுடையவர் யாண்டும் அன்போடு அமைதியாய் ஒழுகி வருகின்றார். பண்பில்லார் படு செருக்காளராய்ப் பழி வழியில் பாய்கின்றார்.
பண்பு குன்றியபோது அங்கே பதவி பெரிதாய்த் தோன்றுவதால் அவன் தலைநிமிர்ந்து செருக்கி நிலைகுலைந்து வீழ்கின்றான். பதவிச் செருக்கில் தான் சிறுமையாய் இழிவதோடு பலர்க்கும் அழிதுயரங்களை விளைத்து விடுதலால் அந்தச் சின்ன மனிதன் இன்னல் நிலையமாகின்றான்.
அடக்கமும் அமைதியும் இல்லாதவன் அதிகாரியாய் வரின், அது நாட்டுக்கு ஒரு பெரிய கேடேயாம். உள்ளம் கெட்டதாயின் மனிதன் கொள்ளித் தேளைப் போல் கொடியவன் ஆகின்றான். அதனோடு அதிகாரமும் சேர்ந்தால் அவனுடைய கொடுமை கடுமையாய்க் கதித்துக் கடுந்துயர் புரிகின்றது.
'தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் அது நாள் முழுதும் கொட்டும்” என்பது பழமொழி. கெட்டவனுக்கு அதிகாரம் கிடைத்தால் அவன் எவ்வழியும் கேடே செய்வான் என்பதை இது சுட்டிக் காட்டியுள்ளது.
தகுதியை ஆராய்ந்தே ஒருவனுக்குப் பதவியைக் கொடுக்க வேண்டும். அங்ஙனம் ஆராயாமல் தரின் அது பலர்க்கும் அபாயமாய் முடியும். புல்லர் வரின் எவ்வழியும் பொல்லாங்கே வரும்,
நேரிசை வெண்பா
உடைப்பெருஞ் செல்வத்(து) உயர்ந்த பெருமை
அடக்கமில் உள்ளத்தன் ஆகி - நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல், குரங்கின்கைக்
கொள்ளி கொடுத்து விடல். 200 பழமொழி நானூறு
தகாதவனுக்கு உயர்ந்த பதவியைக் கொடுப்பது குரங்கின் கையில் கொள்ளியைக் கொடுத்தல் போலாம் என முன்துறையரையனார் இங்ஙனம் கூறியிருக்கிறார். அதிகாரம் தீக்கொள்ளிக்கும், கெட்ட மனமுடையவன் துட்டக் குரங்குக்கும் ஒப்பாய் வந்துள்ள நுட்பம் உய்த்துணரத் தக்கது. சும்மாவே சேட்டை செய்கிற குரங்கு கையில் கொள்ளிக் கட்டையும் கிடைத்தால் வீட்டைச் சுட்டு வெந்துயர் செய்யும். துட்டனுக்கு அதிகாரம் தந்தால் நாட்டுக்குத் துன்பம் மிகும்.
நெறிகேடான செயலால் மனிதன் இழிமிருகமாய் இழிந்து படுகிறான். நல்ல செல்வாக்கைப் பொல்லாத வழியில் புகுத்திப் புலைப்பட்டு ஒழியாமல் புனித நிலையில் மனிதன் உயர்ந்து கொள்ள வேண்டும். வஞ்சக் கரவுகளை நெஞ்சில் கொள்ளலாகாது; கொண்டால் அந்த மனித வாழ்வு அஞ்சத் தக்கதாய் அவலமடைகின்றது. கள்ளம் கபடுகள் எள்ளல் இழிவுகளாகின்றன.
அதிகார ஆசையால் பலர் மதிகேடராய் மனம் மருண்டு திரிகின்றார் கூட்டம் கூட்டமாய்த் திரண்டு கொண்டு தங்கள் நாட்டத்தை நிறைவேற்ற அலைதலால் அது பைத்தியக் கூட்டமாய் ஈட்டம் மிகப் பெற்றது. காரிய ஆவலால் கபட நாடகங்களை நயமாக நடிக்கின்றார். கட்சிகளைத் தழுவிக் கொண்டு இச்சகங்களைப் பேசி எவ்வழியும் கொச்சைகளாயிழிந்து அவர் காட்டி வரும் வேலைக் திறங்கள் வியப்பு மிகவுடையன.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)
காலையிலே ஒருகட்சி கடும்பகலில் ஒருகட்சி
கதிரோன் சாயும்
மாலையிலே ஒருகட்சி மறுநாளில் ஒருகட்சி
மாறி மாறி
ஆலையிலே சுழன்றுவரும் அடலெருதின் தொடர்போல
அவமா யிந்த
வேலையிலே திரிந்துவரும் வித்தகர்தம் சித்தநிலை
வியப்பே அம்மா! – கவிராஜ பண்டிதர்
நெஞ்சில் நேர்மையின்றி வஞ்சம் புரிந்து இவ்வாறு திரிந்து வருவதைப் பெரிய இராச தந்திரமாக அவர் நினைந்து வருகிறார். புல்லிய சிறுமைகளைப் புனைந்து கூறுவது புலையாய் வளர்ந்து வருகிறது. பான்மை சிதைய மேன்மை சிதைகிறது.
அவரது நிலைமைகளை உணர்ந்து கொள்ள கமலை மாடுகளை உவமை கூறியது. தொழிலில் ஓரளவு நிகராயினும் பயன்தனில் அவை நயனுடையன. அவற்றின் சுழற்சியால் நிலத்தில் நீர் பாய்கிறது. பயிர்கள் வளர்கின்றன. இவர் சுற்றித் திரிவதால் நாட்டில் வஞ்சகம், சூதுகள்தாம் வளர்ந்து வருகின்றன.
நேர்மை குன்றிய போது மனிதன் சீர்மை குன்றி இழிகின்றான். அந்த இழிநிலையை எண்ணி உணராமல் களிமிகுந்து திரிவது பழிபடிந்த வாழ்வாய்ப் படர் அடர்ந்துள்ளது.
நெஞ்சம் பாழ்பட்டவர் நிறைந்திருக்கும் வரையும் நாடு கொஞ்சமும் முன்னேறாது. நஞ்சம் தோய்ந்த குட்டம் போல் நாசமே கண்டிருக்கும். வெளியே நல்லவர்களைப் போல் நடித்து உள்ளே பொல்லாமை புரிந்து வரும் வேடதாரிகளால் நாடு கேடு அடைதலால் அவர் கொடிய பீடைகளாயுள்ளனர்.
தன்பால் வாழுகின்ற மக்களின் நீர்மையைப் பொறுத்தே ஒரு நாடு சீர்மை அடைந்து வருகிறது. தம் உள்ளங்களைப் புனித நிலையில் உயர்த்தி இனிய பண்பாடுகளை வளர்த்து வருகிற மனித சமுதாயத்தை எந்க நாடு பெற்றிருக்கிறதோ அந்த நாடே புண்ணிய பூமியாய்ப் பொலிந்து விளங்குகிறது.
’உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என இராமலிங்க சுவாமிகள் இவ்வாறு ஆண்டவனை நோக்கி வேண்டியிருக்கிறார்.
Who dares think one thing, and another tell,
My heart detest him as the gates of hell. – Iliad
'தன் உள்ளத்தில் ஒன்றை நினைத்துக் கொண்டு வெளியே மாறாய் வேறு பேசுகிறவனை நரகமாக என் இதயம் வெறுக்கின்றது’ என ஹோமர் இவ்வாறு பாடியிருக்கிறார்.
வஞ்சப் புன்மை எவ்வளவு அஞ்சத் தக்கது என்பது இதனால் அறியலாகும். நேர்மையோடு நீர்மை சுரந்து வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.