புத்தக பூக்கள்

அரங்குகள் தோறும்
அரங்கேற்றம் படைப்பாளிகளின்
புத்தக அரங்கேற்றம் ....

கரும்புள்ளி செம்புள்ளி
குத்திக்கொண்டு
அச்சக தாயின்
கருவில் பிறந்த
சிசுக்களோ
வெள்ளைத்தாளில்
புத்தக மழலையாய்
தவழ்கிறது ....

யாவரும் வாரி
அணைக்க வாஞ்சையுடன்
காத்திருக்கு
மகப்பேறு வார்டில்
மலர்ந்து சிரிக்கும்
குழவிகளாய்
புத்தக கண்காட்சியில்
புதிதாய் பதிப்பித்த
புத்தகங்கள் ...

அகத்தில் தோன்றிய
எண்ணங்களோ
யாவரும் அறிந்திட
புத்தக வடிவில்
வருகிறது -பல
வாசக நெஞ்சங்களின்
கண்களை ஈர்த்திட ....

அரங்குக்கு அரங்குக்கு
வித்தியாசம்
ஆலமர விழுதுகளாய்
புத்தக கண்காட்சி கூடங்கள்....

எதிர் எதிர்
திசைகளில்
மாறுபட்ட புத்தகங்கள்
வேறுபட்ட எழுத்தாளர்களுடன்
மரக்கிளைகள்போல்
செம்மொழி பெயர்பலகையுடன்
மீசையை முறுக்கிக்கொண்டு
வாசக வண்டுகளை
வா வா யென
அழைக்கிறது.....

கடினமும் -மென்மையும்
கலந்த புத்தகமாய்
வாசிக்க காத்திருக்கு
வாசக நெஞ்சங்களை
எதிர் நோக்கி
பூத்திருக்கு ....

தமிழின் அறியாமை
இருளை அறிந்திட
அரிச்சுவடியாய்
காத்திருக்கு அகத்திணை
பதிப்பகத்தில் ----

தொன்மையான நாகரிகத்தை
தோண்டிப்பார்க்கும் கீழடி
அகழாய்வு புத்தகமும்
மண் மூடிய விதைகளில்
முளைத்த செடிகளாய்
புதிதாய் பூத்திருக்கு
புத்தக கண்காட்சியில் .....

சாகித்ய அகாடமி
விருதுகள் பெற்ற
பலபுத்தகங்களும்
வாசிக்க காத்திருக்கு

இசைகள் தெரிந்தும்
வாழ்வியல் திசைகள்
தெரியாத இளையர்களுக்கு
வழிகாட்டும் தன்னம்பிக்கை
புத்தக பூக்களும்
காத்திருக்கு -இந்து
தமிழ் திசை அரங்கில்

புத்தக அரங்கிலே
இலக்கிய சகதிகள்யற்று
எதார்த்த தொல்காப்பிய
இலக்கண மொழிகளில்
எழுதிய முத்தான
கெத்தான கவிஞர்களும்
கூந்தப்பனை சிறுகதை
புனைவுகள் எழுதிய
சு.வேணுகோபால்
சூடிய பூ சூடற்க
புதினங்கள் எழுதிய
நாஞ்சில் நாடன்
ஆழி சூழ் உலகு எழுதிய
ஜோ டி குருஸ்
கண்மணி குணசேகரன் எழுதிய
அஞ்சலை
உனது வானம் எனது ஜன்னல்
எழுதிய சுகி .சிவம்
உயிர் சுனை எழுதிய
சு .வேணுகோபால்
இது போன்று எண்ணற்ற
இலக்கிய மலர்களின்
அரங்கேற்றம் தமிழினி
அரங்கிலே ----

மயிலாகவும் -குயிலாகவும்
கைகள் விலங்கிட்டும்
கண்களில் கருப்பு துணி கட்டியும்
வண்ண வண்ண படங்களுடன்
தவழ்ந்து! தவழ்ந்து! சிரிக்கிறது
புதிதாய் வந்த இலக்கிய
பூக்கள் ------

பலவித அரங்குகளில்
பாய் விரித்து அழைக்கிறது
பழைய பதிப்புகளும்
புதிய பதிப்புகளும்

மல்லிகையாய் இன்று
பூத்த பல புத்தகமும்
முதிர்கன்னி போல
பூபெய்தி பலகாலம்
கடந்த புத்தகமும்
வாருங்கள் எங்களைப்
பாருங்கள் என்று
காட்ச்சிக்கு அழைக்கிறது
சென்னை புத்தக
கண்காட்சிக்கு .

இரா. அரிகிருஷ்ணன்

எழுதியவர் : இரா. அரிகிருஷ்ணன் (13-Jan-20, 7:15 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 351

மேலே