கம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் - 05 மருதத்தில் கண்மலர்ந்து ஒளிரும் பொருள்கள்

பால காண்டம், நாட்டுப்படலத்தில் ’மருதத்தில் கண்மலர்ந்து ஒளிரும் பொருள்களாக ஒன்பது பொருள்களை கீழ்வரும் பாடலில் நயமுடன் கூறுகிறார் கம்பர்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

படைஉழ எழுந்த பொன்னும்,
..பனிலங்கள் உயிர்த்த முத்தும்,
இடறிய பரம்பில் காந்தும்
..இனமணித் தொகையும், நெல்லின்
மிடைபசுங் கதிரும், மீனும்,
..மென்தழைக் கரும்பும், வண்டும்
கடைசியர் முகமும், போதும்,
..கண்மலர்ந்(து) ஒளிரும் மாதோ. 7

- நாட்டுப் படலம், பால காண்டம், ராமாயணம்

பொருளுரை:

கலப்பைகள் உழுததால் மேலே எழுந்த பொன் போன்ற மண்ணும், கடலிலிருந்து அடித்து வரப்பட்ட சங்குகள் ஈன்ற முத்துகளும், பரம்பு அடித்த நிலங்களில் ஒளி வீசுகின்ற பல்வேறு இரத்தினத் தொகையும், நெல்லின் செறிந்த பசுமையான கதிர்களும், நீர்நிலைகளில் துள்ளும் மீன்களும், மென்மையான தாள்களை உடைய கரும்பும், பயிர்களிலும் சோலைகளிலும் ரீங்காரமிடும் வண்டுகளும், உழத்தியரின் முகங்களும், தாமரை மலரும் கண் மலர்ந்து ஒளி வீசும் காட்சி கண்கொள்ளாக் காட்சி அல்லவா” என்கிறார் கவியரசர் கம்பர்.

கவி நயம்:

கோசல நாட்டின் வளமையைப் பற்றியும் மருதத்தில் கண்மலர்ந்து ஒளிரும் பொருள்களைப் பற்றியும் கம்பர் சுவையாக எடுத்துரைக்கின்றார். முதலில் நிலத்தை உழுவதனால் அங்குள்ள மண்ணின் வளம், அங்கங்கே கடலிலிருந்து அடித்து வரப்பட்ட சங்குகள் ஈன்ற முத்துகள், உழுது பரம்பு அடித்த நிலங்கள் சூரிய ஒளிக்கிரணங்களால் இரத்தினங்களாகத் தோன்றுகின்றன.

இவைகளையும், நெல் வயல்களில் நெல் முற்றியதால் கதிரில் எழும் ஒளியையும், நீர்நிலைகளில் துள்ளும் மீன்கள், பயிர்களிலும் சோலைகளிலும் ரீங்காரமிடும் வண்டுகள் ஆகியவற்றின் ஒளிரும் கண்களையும், விளைந்த கரும்பின் பெருத்த கணுக்களைக் கண்களாகவும், தேனொடு விளங்கி ஒளிரும் தாமரை மலரையும் கோசல நாட்டின் மருத நிலத்தின் சிறப்புகளாக, கண்மலர்ந்து ஒளிரும் பொருள்களாக கம்பர் நயமுடன் பட்டியலிடுகிறார்.

கண் மலர்ந்து ஒளிரும்’ என்ற தொடர் இப்பாடலின் இறுதியில் இருந்தாலும் பாடல் முழுவதையும் தொடர்புபடுத்தி விளக்குகிறது; பலவற்றுக்கும் ஒப்புமை காட்டி இணைப்பதால் இப்பாடலின் அழகு ஒப்புமைக் கூட்ட அணி எனப்படுகிறது.

காளியப்பன் எசேக்கியல் • 07-Jan-2014 6:25 pm
அருமையான வருணனை:
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

நெல்வளம் எடுத்துச் சொன்னார்
=நீர்வளம் சோலை பாடிப்
பல்வகை உயிர்கள் சேர்ந்து
=பகிர்ந்துயிர் வாழல் காட்டி
எல்லையாம் கடலுள் வாழும்
=இயற்கையின் வளமும் சொல்ல
நல்வகை யாக எல்லாம்
=நாட்டினுள் இருக்கக் கண்டோம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jan-20, 7:40 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே