கம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் - 06 அயோத்தியின் பெருமை
பால காண்டம், நகரப் படலத்தில் அயோத்தியின் பெருமையை வியந்து கவியரசர் கூறுவதைக் கீழே வரும் பாடலில் பார்ப்போம்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ!
..நிறைநெடு மங்கல நாணோ!
இலகுபூண் முலைமேல் ஆரமோ! உயிரின்
..இருக்கையோ! திருமகட்(கு) இனிய
மலர்கொலோ! மாயோன் மார்பில்நன் மணிகள்
..வைத்தபொற் பெட்டியோ! வானோர்
உலகின்மேல் உலகோ! ஊழியின் இறுதி
..உறையுளோ! யாதென உரைப்பாம்? 2
- நகரப் படலம், பால காண்டம், ராமாயணம்
பொருளுரை:
அயோத்தி நகரமானது நிலமகளது முகமோ! முகத்தின் நெற்றித் திலகமோ! அவளுடைய கண்களோ! அவள் நெஞ்சில் ஊஞ்சலாடும் நிறைவான நீண்ட திருமாங்கல்யக் கயிறோ? ஒளி செய்யும் அணிகளணிந்த மார்பகங்களின் மேலணிந்து திகழும் மணி மாலையோ!
அந்நில மகளின் உயிர் இருக்கும் இருப்பிடமோ? திருமகள் வாழ்வதற்கு இனிய தாமரை மலரோ! திருமாலின் மார்பிலணியும் நல்ல மணிகள் வைக்கப்பட்ட பொன்னாலான பெட்டி தானோ!
வானோர் வாழும் விண்ணுலகிற்கும் மேலான வைகுந்தமோ! யுகத்தின் முடிவில் உயிர்களெல் லாம் தங்கும் திருமாலின் திருவயிறோ! வேறு எதுவென்று சொல்வோம்? என்று வியந்து அயோத்தியின் பெருமையை கவியரசர் கூறுகிறார்.
இலகு – பிரகாசி, ஒளிசெய்
கவி நயம்:
நிலமகளின் முகம், திலகம், கண், மங்கல நாண், ஆரம் முதலியனவாக அயோத்தி நகரத்தைப் புனைந்துரைத்தார். பெண்களும் மங்கல நாண் பெருமை தருவதாதலால் “நிறைநெடு மங்கல நாண்” என்றார். சிறந்த உறுப்பான முகத்தை முதலில் கூறினார். விண்ணுலகத்தினும் சிறந்தது பரமபதம் என்பதால் “வானோர் உலகின் மேலுலகோ” என்றார்.
இப்பாடல் அயோத்தியின் பெருமையை வியந்து பலவிதமாகக் கூறுவதால் பலபடப் புனைவணி ஆகும். முத்துவீரியம் என்ற இலக்கண நூலில் ’பலபடப் புனைவணி’யின் இலக்கணம் கீழே உள்ள பாடலில் கூறப்பட்டுள்ளது.
"பலரு மொருபொரு ளிற்பல தருமங்
களினாற் பலபொருள் களையெடுத் துரைத்தல்
பலபடப் புனைவெனப் பகரப் படுமே". 1186.
பாடலின் பொருள்: பலரும் ஒருபொருளில் பல அறங்களால் பல பொருள்களை எடுத்துக் கூறுவது பலபடப்புனைவணி ஆகும்.