காதலர்கள்💕

யார் காதலர்கள்;
கண்கள் மோதுண்டு
கருக்கொண்டு கதைபேசியவர்களா?
கற்பனையில் சிறகடித்து
உடலசைவில் உருக்கொண்டு
உயிர் பிணைந்தவர்களா?
கண்ட பொழுதில்
கலையென கவர்ந்திழுத்து
கரம் பற்றியவர்களா?
கண்ணால் கதைபேசி
காலமெல்லாம் காத்திருந்து
கனவுகள் பலித்தவர்களா?
நொந்து நூலாகி
அன்பெனும் தஞ்சத்துக்காய் ஏங்கி
சந்தர்ப்பவாதிகளிடம் குடிபுகுந்தவர்களா?
குமுகாயத்தின் குதறுதலுக்கஞ்சி
உணர்வுகளை உள்ளிழுத்து
ஊமையாய் ஊர்தேடியெடுத்தவரோடு வாழ்பவரா?
ஊன் உறக்கம் மறந்து
தமக்குத்தாமே எல்லாமுமாய்
ஒருவருக்கொருவரென்றானவர்களா?
உணவும் உடையும் இல்லையெனினும்
அன்பும் அறமும் பின்னிப்பிணைந்து
தம் ஆசா பாசத்துக்கே அடிமையானவர்களா?
உள்ளத்தால் உருகிடாது, உப்புச்சுவையற்று
கடமைக்கென்று வாழ்பவரா?
யார் காதலர்கள்? யார் காதலர்கள்?

எழுதியவர் : யோகராணி கணேசன் (2-Feb-20, 10:19 pm)
பார்வை : 403

மேலே