நாங்கள் வீழ்வோமென்று நினைத்தீரோ

ஆண் பிறந்தால் அடையாளம்
பெண் பிறந்தால் அவமானம்
ஆண் படித்தால் கொண்டாடும்
பெண் படித்தால் தடைபோடும்
சட்டங்கள் மாறிடினும்
சங்கடங்கள் மாறவில்லை ஆயினும்…

நாங்கள் வீழ்வோமென்று நினைத்தீரோ?

ஆண்சாதி நான் என்று
அகங்காரம் அது கொண்டு
பெண்சாதி நீ எனவே
பேராண்மைக்கு அடங்கு என
கட்டளைப் பிறப்பித்து
கர்வத்துடன் காத்திருப்பார்…

நாங்கள் வீழ்வோமென்று நினைத்தீரோ?

ஆணுக்குப் பெண் இங்கே
இளைப்பில்லை என்றே
ஆளுக்கோரு மேடையேறி
ஆங்காங்கே முழங்கி விட்டு
ஆணவம் கொண்டு எமை
அடக்கியாளக் காத்திருப்பார்…

நாங்கள் வீழ்வோமென்று நினைத்தீரோ?

பெண்கள் என்று கேலிபேசி
பெருமைகளை அழித்து விட்டு
பேதைகளின் துயர்துடைக்க
மேதைகள் போல் நடித்து விட்டு
நாங்கள் வீழ்வதை காண்பதற்கு
விழிதிறந்து காத்திருப்பார்…

நாங்கள் வீழ்வோமென்று நினைத்தீரோ?

திறமைகளைப் புதைத்து விட்டு
தினந்தோறும் சுழல்கின்றோம்…
வீறுகொண்டு எழுந்து விட்டால்
வையகத்தை வலம் வருவோம்…
பெண் என்ற காரணத்தால்
பேசியே எமைச் சாய்ப்பினும்

நாங்கள் வீழ்வோமென்று நினைத்தீரோ?

எழுதியவர் : திருமகள் மு (6-Feb-20, 7:43 pm)
சேர்த்தது : திருமகள்
பார்வை : 3631

மேலே