சின்னஞ்சிறு வயசு நினைவலைகள் 2

நினைவு பெயர் : ஒற்றை பனைமரம்

நான் எப்போதாவது ஆசைப்பட்டு
ரோட்டோரக் கடைகளில்
நுங்கு சாப்பிட்டால் நுங்கின் ருசியைவிட
அது அழைத்துச்செல்லும் சின்னஞ்சிறுவயது
நினைவலைகள் ஏராளம்;

அப்போது என் வீட்டிலிருந்தது ஒற்றைப்பனைமரம்
அது கொட்டித்தந்த பனங்காய்களை சுவைக்கவே
என் அப்பா வெட்டிப்படைத்த நுங்குகள் ஏராளம்;

பலம் வாய்ந்த ஒரு மரக்கட்டையில் மணலைக்கொட்டி
அப்பா அதன் மீது அரிவாளை பட்டைதீட்டிடும் நேர்த்தி
இன்னும் கண்களில் வந்துபோகிறது;
கருத்த அரிவாள் வெட்டும் கூறிய பகுதி மட்டும்
மின்னும் நிறமாய் மாறிடும்
பட்டைத்தீட்டலுக்கு பிறகு;

அப்பாவால் பனங்காய்கள்
தலைசீவலுக்கு பிறகு நுங்கு ரசமாய் பருகிட கிடைத்திடும்;
ஒற்றைக்கண் இரட்டைக்கண் மூன்றுகண்
பனங்காய்கள் என ஒவ்வொரு சீவலுக்கு பின்னும்
நாங்கள் காணும் காட்சிகள் அக்கால அருங்காட்சியகம்;
அதிலும் மறக்க முடியாத ஒன்று
சுவைத்து முடிந்து தூக்கியெறியும் நுங்கு சக்கரங்கள்
எங்களுக்கு பனங்காய் வண்டியாய் உருமாறுவது;
இந்த உருமாறுதலில் எங்களது உழைப்பிருக்கும்
"அது என்ன உழைப்பென்று" கேள்வி ஞாலம்
உதிப்பவருக்கு பதிலிதோ....

1990 களில் சிறுவர்களாய் உதித்தெழுந்தவர்களின்
ரசனைக்கே என் நினைவலைகளின் சுவடுகள்
உடனுக்குடன் புலப்படும்;
மற்றவர்களுக்கும் புலப்படும் என் விளக்கம் முடிந்ததும்
"இப்படியெல்லாம் வாழ்ந்தவர்களா இவர்களென்று..."

பனங்காய் வண்டி தயாரிப்புக்கு தேவை
மூன்றுகண் சக்கர மட்டைகள்,
கவையை முன்பக்கமாய் கொண்ட நீளமானதொரு கழிக்குச்சி;
இவற்றில் என்னைப்போன்றோருக்கு சக்கரங்கள்
எளிதாய் கிடைத்துவிடும்
கவைக்குச்சிக்கு மட்டும் சோர்ந்துபோகும் வரை தள்ளாடுவோம்
கருவக்காட்டிலே கத்தியோடு...!
எளிதாய் கிடைக்காத கவைக்குச்சி மட்டும்
இறுதியில் கிடைத்துவிடும்
ஆயிரமாயிரம் கலோரிகளை உழைப்பாய் எரித்த பிறகு...!
அதன் பிறகு என்னையொத்த சிறுவர்களின் தொழிற்சாலைகளிலே
தயாரிக்கப்படும் ஏராளமான நுங்கு வண்டிகள்;
அதை இடம் வலம் என வளைத்து வளைத்து
ஒட்டி மகிழ்கையிலே இருந்த மகிழ்ச்சி- இல்லை இன்று
நாங்கள் பிரயானித்திடும் இரண்டு நான்கு சக்கர வாகன ஒய்யாரச் சவாரிகளிலே...!

பருவம் மாறிய பிறகும் பனைமரத்தின் தொடர்பு
மட்டும் எங்களை விட்டு விலகியதில்லை;
அது பழுத்துமுடித்த பழங்களை வவ்வால் சுவைத்தெறிந்துவிட்டு
செல்லும் பனங்கொட்டைகளும்
காய்ந்துவிழும் பனைமட்டைகளும்
எங்கள் மட்டைப்பந்தாட்ட விளையாட்டின்
பந்துகளாகவும் மட்டைகளாகவும் உருமாறும்;

இப்படி எல்லையில்லா ஆனந்தங்கள் அனுபவித்த காலங்களின்
நினைவலைகளை மீட்டெடுத்து மகிழ்கிறேன்
ஒவ்வொரு முறையும் அதை தூண்டும் நிகழ்வுளுடன்...!

-மன்னை சுரேஷ்

எழுதியவர் : (22-Feb-20, 11:51 am)
பார்வை : 48

மேலே