டிசம்பர் 31 நாட்காட்டி பேசியது
வெகுதூரமில்லை;
அடுத்த விடியலில் நிச்சயம் நானில்லை;
சுவற்றாணி வேறொறுவனை சுமக்கத்தயாராகி விட்டான்;
எப்படியும் என் ஆயுள் சில மணி நேரங்கள்தான்;
தினம் தினம் கிழித்தெறிந்த கைகள்
இனி கீழே எறிந்துவிடலாம்;
அதிர்ஷ்டமிருந்தால் ஏழைக்குழந்தையின் பரிட்சை அட்டையாய் மீன்டும் உலவலாம்;
இல்லை மகளிர் காகிதக்கூழ் தயாரிப்பில் சிறு கொட்டகைப்பெட்டியாய் உறுமாறலாம்;
இல்லை குப்பை அள்ளும் முரமாய் சில காலம் நீட்டிக்கலாம்;
எப்படியோ என் ஆயுள் வெகுதூரமில்லை;
அடுத்த விடியலில் நிச்சயம் நானில்லை;
மனையடி சாஸ்திரமோ மணமுகூர்த்தமோ
சுவற்றாணியில் தொங்கிய என்னை கொண்டே குறித்தனர்;
அரசு விடுமுறையோ அமாவாசை பௌர்ணமியோ
என்னை புரட்டிப்பார்த்தே அறிந்தனர்;
பல்லி விழுபலன் முதல் பஞ்சாங்கம் குறிப்பது வரை
எதுவாயினும் விடைதேட என் தேவை;
எல்லாம் முடிந்தபின் எனக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு
"குப்பைத்தொட்டி" ;
இதைத்தான் முன்னோர்கள்
"பழைய பஞ்சாங்கம் பாடாதே" ன்னு
சொல்லி வச்சாங்களோ!
வெகுதூரமில்லை
அடுத்த விடியலில் நிச்சயம் நானில்லை;
-MANNAI.SURESH