மிஸ் யூ அன்பே
அதே சாலையில் அதே செர்ரி மரங்கள் அதே போல் இலையை உதிர்கின்றன.
என்றும் வளர்ச்சி பரிமாணமாய் தோன்றும் இயற்கை
ஏனோ இன்று பிரிவின் அடையாளமாய் தொக்கி நிற்கின்றது.
நான் கடக்க முற்படும் மிக பரிட்சயமான சாலைகள் கூட உன்னிடம் இட்டுச்செல்ல மறுக்கின்றன.
இதோ இந்த பேருந்து நிலையத்தில் "உனக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்" என்ற விடை தெரிந்த என் வினாவிற்கு நீ விட்டுச்சென்ற புன்னகை பனியாக இலைகளில் படர்ந்து கனக்கிறது.
நீ இல்லாத உன் இடத்தை நிரப்பப்பார்த்து தோல்வியடைகிறது.
இன்று வினாவும் உண்டு, விடையும் உண்டு, புன்னகை மட்டும் இல்லை.
பத்து நாள்தானே திரும்ப வந்துவிடுவான் என்று கூறுபவர்களுக்கு தெரியவில்லை பத்து நாளில் நாம் எவ்வளவு காதல் காவியங்கள் எழுதிவிடுவோம் என்று.
எழுதப்படாத அந்த காவியங்களுக்கு
இதோ என் உறைந்த கண்ணீர் அஞ்சலி.
பலவீனப்படுத்தும் இந்த இரவு, முடிவில்லாத அந்த சாலை, வேடிக்கை பார்க்கும் வெண்பனி இதன் இடையே துளைத்து வெளிப்படும் வெளிச்சப்புள்ளிகளில் ஒரு வீடும்,
சிரித்து அளவளாவும் ஒரு குடும்பமும் இருப்பதாக,
அது நீயும் நானுமாக எண்ணி ஆறுதல் கொண்டு நகர்கிறேன்
வரவேற்பற்ற நம் வரவேற்பறைக்கு!