வாக்குவாதம்
எதிர்பார்க்கவில்லை,
இவ்வளவு தூரம் நீளும் என்று..!
சாதரணமாக ஆரம்பித்த பேச்சு
வாதமாக மாறி பின் விவாதமாக மாறியது.
யார் காரணம்…நானா இல்லை அவளா..?
சந்தேகமில்லை அவள் தான்..!
என்ன கேட்டுவிட்டேன்…அப்படி ஒன்றும்
தவறான ஒன்றை கேட்டுவிடவில்லை.
எல்லோர் வீட்டிலும் நடக்கும் நடப்பு தான்
ஏன் அதற்கு போய் இம்புட்டு விவாதம்..!
கேட்ட கேள்விக்கு என்ன பதிலோ
அதை சொல்ல வேண்டியதுதானே..!
அதனை தவிர்த்து ஒப்புக்கு ஆகாத
வார்த்தைகளை பேசி,
எதனுடனும் இதனை இணைந்து
எதோ நான் கேட்க கூடாதா ஒன்றை
கேட்டது போல் கூவல் விடுகிறாள்.
முடியாது…இம்முறை - பின்
வாங்குவதற்கு வாய்பில்லை.
என்ன தான் அவள் கூறினாலும்
செவி திறப்பாதாயில்லை.
இறுதியாய் ஒரு முறை கேட்டுப் பார்ப்போம்
இன்று இரவு உப்புமா வேண்டாம் ..
வேற ஏதாவது செய்தால் நலம்.
அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை..!
என்றேன்.
எங்கிருந்து தான் அவ்வளவு கோபம்
வந்தது அவளுக்கு தெரியவில்லை..?
கடுகு வெடிக்கும் முகத்தை திருப்பி
மிளகு கண் கருவிழியை உருட்டி
சரி…செய்யலை..இன்னிக்கு ராத்திரி
உப்புமா இல்லை…ஆனா
நாளைக்கு காலைல உப்புமா
என்று சொல்லி விட்டு
அடுக்களையின் உள் புகுந்தாள்.
உப்புமா ரொம்ப தப்புமா..!
என்று சொல்லிக்கொண்டே
இன்றைய இரவு உணவை
புசிக்க தயார் ஆனேன்…
அவளுடன் இணைந்து.