அமிழ்தினும் சிறந்த வம்சமடா
வெட்டி வெட்டி வீசினாலும் முட்டி முட்டி துளிரை விட்டு .
முரட்டுத்தனமாய் வளர்ந்து எழும் வம்சமடா
பட்டு போக வைத்திடவே பலவேறு வழிகள் செய்யின்
பலமாக எதிர்த்து நின்று போராடி வெற்றி பெறும் வம்சமடா
தரமான வாழ்க்கைப் பெற்று தடமாறி போயிடாமல்
தன்மானத்தோடே இனத்தை காப்போமடா
தரணி வாழும் மொழிக்கெல்லாம் தாயான தமிழ் மொழி போல் உலகமாள பிறந்து வந்த வம்சமடா
எதிரியே ஆனாலும் இல்லம் தேடி வந்து விட்டால் இலையைப் போட்டு பறிமாறி பசியைப் போக்கி அனுப்பி வைக்கும் கூட்டமடா
எப்போதும் தமிழ் பண்பை மாற்றிக்கொள்ளா வம்சமடா
எவ்வளர்ச்சி வந்தாலும் எந்நிலையிலும் மாறாது இந்த எண்ணமடா
அமிழ்தினும் சிறந்த மொழி ஆளுகின்ற நாட்டினில் பிறந்தோமடா
அகிலத்தில் வாழுகின்ற உயிர்கள் மேலெல்லாம் அன்பான பாசத்தை கொண்டோமடா
ஆண்டவனே அசருகின்ற அளவினிலே அனுசரித்து செல்லும் நல்லுள்ளம் கொண்டவர்களடா
ஆழிசூழ்ந்து உலகம் அழிந்தாலும் இவ்வறம் என்றும் எம்மை விட்டு அகலாதடா.
----- நன்னாடன்.