படித்ததில் பிடித்தது
ஒரு ஊரில் ஒரு வைத்தியர் இருந்தார். அவர் எப்படிப்பட்ட நோயையும் இருந்த இடம் தெரியாத அளவு சரி செய்யும் திறம் பெற்றவர். ஒரு நாள் அந்த ஊரில் உள்ள பெண்மணி ஒருவர் அந்த வைத்தியரரைக் காண வந்தார். அப்பொழுது தியான நிலையிலிருந்து விடுபட்ட வைத்தியர் யாரம்மா நீர்? எதற்காக இங்கு வந்திருக்கிறாய் என வினவ, ஐயா எனக்கொரு உதவி என்று வார்த்தைகளை மென்று விழுங்கினார். உடனே வைத்தியரும் அதான் வந்து விட்டீரே , பிறகென்ன தயக்கம்; விஷயத்தைச் சொல்லும், என்றார். உடனே, 50 வயது கொண்ட அந்த பெண்மணி, எனக்கு இன்னும் நீண்ட நாட்களுக்கு வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. எனவே எனது வயதை 30 வயதாக மாற்றுங்களேன் என்றார். எல்லாம் வல்ல வைத்தியரும் அந்த பெண்மணி கேட்டவாறு வயதைக் குறைக்கும் மருந்து மூலிகைகள் ஆகியவற்றை வழங்கி அதை 30 நாட்களுக்கு உண்ணும்படி கூறினார்….பின்னர், முப்பது நாட்கள் கழிந்தது. மீண்டும் அந்த பெண்மணி வைத்தியரிடம் வந்தார். வைத்தியர் யாரம்மா நீர் என்று கேட்க,முப்பது நாட்களுக்கு முன்னர் உங்களிடம் வயதைக் குறைக்க மருந்துப் பொருட்கள் வாங்கிச் சென்றேனே அந்த பெண் தான் நான் என்றார். உடனே வைத்தியர் அதான் கேட்டது கிடைத்து விட்டதே பிறகென்ன என்றார் . வைத்தியரிடம் அந்த பெண் கேட்ட அடுத்த உதவி, நான் இளமையாகி விட்டேன்;என் கணவர் அப்படியே இருக்கிறார், ஆகையால் 55 வயது கொண்ட அவரை 35 வயதினராக மாற்ற மருந்துகள் தாருங்களேன் என்று கேட்க, வைத்தியரும் அவ்வாறே வழங்கினார். பொழுது விடிந்தது . அடுத்த நாள் காலையிலேயே அந்த பெண்மணி வைத்தியர் வீட்டுக்குச் சென்றார். என்னம்மா நேற்று தானே கணவருக்கென மருந்து வாங்கிச் சென்றாய் அதற்குள் இன்று வந்திருக்கிறாயே என்ன விஷயம் என்று வைத்தியர் கேட்டார். அதற்கு அந்த பெண்மணி, ஐயா நீங்கள் சொன்ன மாதிரியே நான் என் கணவருக்கும் நீங்கள் கொடுத்த மருந்துகள் மூலிகைகள் ஆகியவற்றை வழங்கினேன். அதை அவரும் உட்கொண்டார். ஆனால் அவை அனைத்தையும் ஒரே நாளில் உட்கொண்டு இதோ என் இடுப்பில் இருக்கிறதே இந்த குழந்தையாக மாறிவிட்டார் என்று கூறினார்.