அப்பாவுக்கு ஒரு கடிதம்

பச்சிளங் குழந்தையாய் இருந்தபோது
என்னைத் தூக்கி அனைத்தது
என் நினைவில் இல்லை!
ஆனால் அகவை பத்து ஆனபோதும்
உன் தோளையே சிம்மாசனமாக்கி
தோட்டத்துப் பறவைகளோடு
பாடிப் பறந்த நினைவ கலவில்லை!

தத்தித் தத்தி நடந்து
நான் தடுமாறி விழுகையில்
உன் இதயம் துடிதுடிக்கும்!
ஆனால் இதழோ நகைத்திடும்!
என்னை உற்சாகப் படுத்த!
அன்றுதான் கற்றுக் கொண்டாயோ
புன்னகையில் வேதனை மறைக்கும்
அற்புத வித்தையை!
இன்று அதில் நீ விற்பன்னன்!

நீ ஓடாய் உழைத்தாய்
கவலையின்றி நான் ஓடிட!
உன் கனவுகள் தொலைத்தாய்
என் கனவுகள் நனவாகிட!
உன் தியாகம் உணரும் பருவம்
அப்பா, உன் செல்வமகள் அடைந்திட்டாள்!
இனியேனும் நிம்மதியாய்க் கண்ணுறங்கு!
உன் பெருமை காப்பாள் மகள் என்ற நம்பிக்கையோடு!!

எழுதியவர் : சுவாதி (15-Mar-20, 8:07 pm)
சேர்த்தது : சுவாதி
பார்வை : 3585

மேலே