காவடிகள் ஏந்தி வந்தோம்

காவடிகள் ஏந்திவந்தோம் கந்தையா - உன்னைக்
கண்குளிரக் காணவந்தோம் கந்தையா !

பூவடிகள் போற்றிடவே புறப்பட்டோம் - உந்தன்
பொன்னொளிரும் முகங்கண்டு பொலிவுற்றோம்!

வேண்டுவரம் தந்திடுவாய் வேலய்யா - எங்கள்
வினையாவும் தீர்த்திடுவாய் வேலய்யா !

தூண்போலே எங்களுக்குத் துணையிருப்பாய் - உள்ளம்
துவளாமல் தாங்கியெங்கள் துயர்துடைப்பாய் !

கால்கடுக்க மலையேறி முருகய்யா - உன்றன்
காட்சியிலே மெய்சிலிர்த்தோம் முருகய்யா

பால்பழங்கள் பக்தியுடன் படைக்கின்றோம் - உண்டு
பசியாறிப் பைந்தமிழைப் பரிசளிப்பாய்!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரய்யா - உன்றன்
கோலமுகம் தெரிகிறதே குமரய்யா !

மின்னுமெழில் பன்னிரண்டு விழிகளினால் - பார்த்து
விரட்டிவரும் பிணிகளையும் விலக்கிடுவாய்!

நீலமயில் மீதினிலே நீவருவாய் - எங்கள்
நெஞ்சத்தின் அழுக்குகளை நீக்கிடுவாய் !

மாலவனின் மருகோனே வடிவேலா! - எங்கள்
மனம்நிறைந்தாய் குறவள்ளி மணவாளா !

அருணகிரி திருப்புகழை அனுதினமும் - பாடி
அடிபணிவோம் அதைக்கேட்டே அருளிடவா!

வருகின்ற நாளெல்லாம் வளமாக - எம்மை
மகிழ்வோடும் நலத்தோடும் வாழவைப்பாய்! !

உமையாளின் திருக்குமரா உனைநினைந்து - நாங்கள்
உருகியுருகிப் பாடிடுவோம் உளம்நெகிந்து !

இமைபோல்நீ காக்கவேண்டும் எமையணைத்து - எங்கள்
எதிர்காலம் உன்கையில் இனிதாக்கு!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 12:59 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 98

மேலே