அறுமுகன் வண்ணப் பாடல்

வண்ணப் பாடல்!
*******************
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதானா! ( அரையடிக்கு )

அறுமுக வடிவொடு விழிகளி லொளியுட
னழகுற மயிலினில் வருவோனே!
அமரரு முனிவரு பணிவொடு துதிசெய
அருணையி லுலவிடு முருகோனே!
உறவென வொருவரு முலகினி லிலையிதை
உணருமு னுயிர்செல விடுவாயோ?
உருகிடு மடியவ ருளமதி லுறைபவ
ஒருகுறை யினிவர விடலாமோ ?
வெறுமையி லுலழ்பவர் தனிமையும் விலகிட
விரிமலர் மணமென நிறைவாயே!
விதியெனும் பெயரினி லெதிர்வரு மிடர்களை
விரைவொடு களையெடு வடிவேலா!
அறிவொளி தருமுனை யெழுதிய கவிதையி
லகமகிழ் வுடன்நட மிடுவேனே!
அலைகளி னொலியென மலர்களில் மதுவென
அணிசெயு மிசையென வருவாயே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 1:02 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 49

மேலே