மகள் என்பவள்

அன்னை தந்தை பிணக்கிலே
அமைதிப் பாலம் அமைப்பவள் !
அண்ணன் தம்பி மனத்திலே
அன்பை நாளும் விதைப்பவள்!
பொன்னைப் போல ஒளிர்பவள்
புன்ன கையா லீர்ப்பவள் !
கன்னித் தமிழின் இனிமைபோல்
கனிந்த பேச்சால் அணைப்பவள் !

இல்லம் என்ற கூட்டினை
என்றும் உயிர்க்கச் செய்பவள் !
வில்லாய்ச் சுற்றி ஆடியே
வீட்டில் வளைய வருபவள் !
முல்லைப் பூவின் மென்மையாய்
முறுவல் காட்டி மணப்பவள் !
சொல்லில் பாசம் குழைத்துமே
சொக்க வைக்கும் தேனவள் !

நெருக்கமான தோழிபோல்
நெஞ்சம் சுமக்கும் தாயவள் !
உருக வைக்கும் கனிவிலே
உவகை கொடுக்கும் சேயவள் !
புருவம் உயர்த்திப் பார்க்கையில்
புரிந்துகொண்டு ரசிப்பவள் !
வருந்தி நிற்கும் வேளையில்
வருடி விழிநீர் துடைப்பவள் !

தவறு சுட்டிக் காட்டினால்
தனித்துக் கிடந்தே அழுபவள்!
கவலை மறக்கச் செய்திடும்
கன்னல் கவிதை மொழியவள் !
உவப்ப ளிக்கும் இசையைப்போல்
உலவு கின்ற இனியவள் !
தவத்தால் கிடைத்த வரமவள்
தரையில் பூத்த நிலவவள் !

கோவம் விஞ்சும் போதிலே
கொஞ்சி மயக்கத் தெரிந்தவள் !
ஆவ லோடு சமையலில்
அன்னைக் குதவி செய்பவள் !
தாவிப் படரும் கொடியவள்
தந்தை என்றன் உயிரவள் !
தேவை யறிந்தே என்வசம்
தெய்வம் தந்த பூவவள் !!

சியாமளா ராஜசேகர்

💃💃💃💃💃💃💃💃💃

பெண் குழந்தைகள் தெய்வம் அனுப்பிவைத்த தேவதைகள் 🌹🌹🌹

🍀🌷🍀🌷🍀🌷🍀🌷🍀

பெண் குழந்தைகள் தின வாழ்த்துகள் 💐💐💐💐

24:01:2020

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 12:54 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
Tanglish : magal enpaval
பார்வை : 22277

மேலே