வளைகாப்பு

கரம்பிடித்த மன்னவனின்
காதலிலே கனிந்தமனம்
உருகுமன்பில் பரிசளிக்க
உயிர்சுமந்து காத்திருக்கும் !
கருவுற்ற மகளுக்கு
கனிவோடு தாய்வீட்டார்
வருமுறவை வரவேற்க
வளைகாப்பு நடத்திடுவர்!!

திங்களேழில் உறவுகூடிச்
சீர்செய்யும் வளைகாப்பில்
மங்கையவள் பயம்விலகி
மனங்குளிர்ந்து பூரிக்கும்!
பொங்கிவரும் தாய்மையிலே
பொலிவின்னும் கூடிவிடும்!
தங்கமகன்(ள்) நல்வரவைத்
தவிப்புடனே எதிர்நோக்கும் !!

மஞ்சளுடன் குங்குமமும்
மங்கலமாய் முகத்தொளிரும்!
வஞ்சியவள் கைகளிலே
வண்ணவண்ண வளைகுலுங்கும் !
குஞ்சமாடும் கருநீளக்
கூந்தலிலே பூமணக்கும் !
கொஞ்சிவரும் பாவையரின்
குலவையொலி மகிழ்விக்கும் !!

பலவகையில் நல்லுணவும்
பழங்களுடன் சீர்வைத்து
தலைப்பிள்ளை சுமந்திருக்கும்
தாயவளை அமரவைத்து
நலங்கிட்டு வளையடுக்கி
நலத்தோடு பிள்ளைபெற
குலசாமி யருள்நாடிக்
கும்பிட்டு வாழ்த்திடுவர் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 1:08 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 55

மேலே