594 மன்னன் செயலை மதித்தே நடப்பர் – குடிகளியல்பு 3
தரவு கொச்சகக் கலிப்பா
அல்லாரு மழையெவர்க்கு மமுதெனினுங் காலமுணர்ந்(து)
எல்லாரு நலம்பெறச்செய் திடுங்கொல்லோ வொருநிருபன்
பல்லாரு மகிழ்வுறவே பண்ணலசாத் தியமெனலால்
நல்லாரன் னோன்செயலை நயமெனக்கொண் டொழுகுவரால். 3
- குடிகளியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
கருமைநிறம் பொருந்திய மேகம் அனைத்துயிர்க்கும் அமிழ்தமாகும். எனினும், அதனிடத்துக் `கெடுப்பதும் எடுப்பதுமாகிய இருசெயல்கள் காணப்படுகின்றன. அம்மட்டோ வேண்டும் காலம் அறிந்து பெய்யாது. அதனால், எல்லாருக்கும் அவரவர் விரும்பியவாறு நலம்செய்ய இயலாது.
அதுபோல், வேந்தனும், மாந்தரெல்லார்க்கும் ஒருசேர விரும்பியவாறு நலம் செய்ய முடியாதவன் ஆகின்றான். ஆயினும், நல்லோர் அவன் செயலை முறைமை வாய்ந்த இறைமை எனவே போற்றி நடப்பர்.
அல் - கருமை. அமுது - சாவா மருந்து. நிருபன் - வேந்தன். பண்ணல் - செய்தல்.
அசாத்தியம் - முடியாதது. நயம் - முறைமை. ஒழுகுதல் - நடத்தல்.